LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 19, 2023

அவரவர் வேலை அவரவருக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் வேலை அவரவருக்கு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


மீறல் என்பது மட்டுமே மந்திரச்சொல்லாக இருந்தது.
மீறல்களில் சின்ன மீறல் பெரிய மீறல்
தேவையான மீறல் தேவையற்ற மீறல்
அர்த்தம் மிக்க மீறல் ஆக்கங்கெட்ட மீறல்
இயல்பான மீறல் தருவிக்கப்பட்ட மீறல்
உள்ளார்ந்த மீறல் உருவேற்றப்பட்ட மீறல்
இன்னும் எத்தனையோ உண்டென்றறியாமல்
வெறுமே அந்த மந்திரச்சொல்லை உச்சாடனம் செய்தாலே
அற்புத விளக்கு ஒன்றல்ல ஆயிரம் கைவசமாகும்
என்று அரைகுறையாய் சொல்லித் தந்தவர்கள் தருகிறவர்களுக்கு
அதன்படி செயல்பட்டு அந்த இருட்குகைக்குள்
அகப்பட்டு
புதையலேதும் கிடைக்காமல் வதைபடும்
அப்பிராணி சீடர்களுக்கு
அடைக்கலமளிக்க அவகாசமிருப்பதேயில்லை.

காலாவதியாகாக் கவி பிரம்மராஜன்!

காலாவதியாகாக் கவி பிரம்மராஜன்!

 





 



 [சில மாதங்களுக்கு முன்பு கவி பிரம்மராஜனைக் காலாவதியாகி விட்ட கவிஞர் என்று சக கவிஞர் ஒருவர் எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது.  ஒரு கவிஞரின் கவிதைகள் பிரசுரமாகாததாலேயே அவர் கவிதை எழுதவில்லை என்று கூறிவிடலாமா? அவர் கவிதைகள் எழுதிக்கொண் டிருக்கலாம். பிரசுரத்திற்கு அனுப்பாமலிருக்கலாம்.  ஒரு கவிஞர் இப்போது கவிதை எழுதுவதில்லை என்பதாலேயே அவர் காலாவதி யாகிவிட்ட கவிஞர் என்று சொல்வது எத்தனை அபத்தம். தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் பிரம்மராஜனுக்கு ஒரு தனியிடம் என்றும் உண்டு. அவருடைய கவிதைகளில் சில இங்கே தரப்பட்டுள் ளன]



































































 

 

 

நிலாமயம்! - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நிலாமயம்!

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(*12 மார்ச் 2023 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள கவிதை)


சிலருடைய கவிதைகளில் நிலவு கறைபடிந்ததாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு களங்கமற்றதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு சந்திரனாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அம்புலிமாமாவாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு கொஞ்சிக்குலவும் காதலியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அஞ்சிப் பதுங்கும் குழந்தையாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு உலவிக்கொண்டி ருப்பதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மிதந்துகொண்டி ருப்பதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மேகத்தைத்
தழுவு வதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மேகத்தைக் கண்டு நழுவியோடுவதாய்.
சிலருடைய கவிதைகளில் நிலவு உருண்டோடும் பந்தாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு உடையும் நீர்க்குமிழியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு
இரவின் குறியீடாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு
கனவின் அறிகுறியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு நாடோடியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு காத்தாடியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு காலமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அகாலமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மரணமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மறுபிறப்பாய்
நிஜத்தில் நீ யார் எனக் கேட்டால்
புவியின் ஒரே துணைக்கோள் அறிவியலின்படி
என்று குறுநகையோடொரு விடைகிடைக்கக்கூடும்….
எனில் நிலா முயல் வேண்டுமா வேண்டாமா என்று
நாம்தானே முடிவுசெய்யவேண்டும்!

தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(12 மார்ச் 223 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

தாமரையிலைத் தண்ணீரை தூலமாக நேரில் பார்த்திருக்கிறேனா, தெரியவில்லை….

அப்படிப் பார்த்தால்
தாகூரைப் பார்த்ததில்லை,
ஷேக்ஸ்பியரைப் பார்த்ததில்லை
லதா மங்கேஷ்கரைப் பார்த்ததில்லை,
மம்முட்டியைப் பார்த்ததில்லை,
இமயமலையைப் பார்த்ததில்லை.
இக்குனூண்டு முளைவிதையைப்
பார்த்ததில்லை
பார்த்தல் என்பதன் நேரில் என்பதன்
அர்த்தார்த்தங்களில்
பார்த்திராதவையே அதிகம் பார்க்கப்பட்டதாய்…..
நான் பார்த்திராத தாமரையிலைத்
தண்ணீர்த்துளிகள்
இருக்குமிடமெங்கும் உருண்டோடியவாறே…
உணர்ந்தும் உணராமலுமா யதன் ஈரம் _
காய சி்றிது நேரமாகும்.
சில நாட்கள் அலைபேசியில் 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்துவிட்டால், பின்
அந்த அலாரம் எப்படியோ ஆழ்மனதில்
அடிக்க ஆரம்பித்துவிடுவது போலவே _
பழகிவிட்ட தாமரையிலைத்தண்ணீர்
வாழ்வில்
இலை நீர்த் துளிகள் மேல்
நிலைகொள் மனது _
பற்றுடைத்து என் றொரு சொல்லின்
இருபொருளுணர்த்தி.

மௌனம் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மௌனம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(*12 மார்ச் 2023 திண்ணை இணைய இதழில் வெளியான கவிதை)

மௌனம் சம்மதமல்ல
மந்திரக்கோல்
மாயாஜால மொழி
மனதின் அரூபச் சித்திரம்
மேற்தோலின் உள்ளூறும் காற்றின் ருசி
மகோன்னத நறுமணம்
மரித்தார் உயிர்த்தெழல்
மாகடலின் அடியாழ வெளி
மையிருட்டிலான ஒளி
மாமாங்க ஏக்கம்
மீள் பயணம்
மருகும் இதயத்தின் முனகல்
மனசாட்சியின் குரல்
மிதமிஞ்சிய துக்கம்
மகா அதிர்ச்சி
முறிக்கும் புயலுக்கு முந்தைய அமைதி
வழிமறந்தொழியும் சூன்யவெளி
மொழியிழந்தழியும் எழுத்துக் கலை
மரணமனைய உறைநிலை……..

Friday, March 10, 2023

மாற்றீடுகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மாற்றீடுகள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்) 

குழந்தைகள் இயல்பிலேயே புரட்சியாளர்கள்.

 விலைமதிப்பற்றதென சமூகம் வைத்திருக்கும் பட்டியலில் உள்ள பொருட்களை யெல்லாம் விலக்குவதாய் அவர்களிடம் ஒரு பட்டியல் உள்ளார்ந்து இருக்கும்.

 அழுக்கு மண், கசங்கிய தாள், சிகரெட் துண்டு, கையால் தொட்டுணரத் தூண்டும் சிறுநீர், ஆட்டுப்புழுக்கைகள், யாரோ துப்பிப்போட்டிருக் கும் தூசிபடிந்த மீதி மிட்டாய் விரல் நுழைத்துப் பரவசக்கூடிய ஓட்டைகளை வைத்தி ருக்கும் சாயம்போன சட்டை…..

 கோலிகுண்டைக் கண்ணருகே வைத்து உள்ளே தெரியும் வானவிற்களைப் பார்த்துப் பரவசப் பட்டுக்கொண்டி ருக்கும் சிறுவனிடம் வைரக் கல்லைக் கொடுத்தால் அவன் அதை மறு கையால் அப்பால் ஒதுக்கும் சாத்தியங்களே அதிகம்.

 மணல்வீடு கட்டிவிளையாடும் குழந்தைகளுக்கு மணலின் விலை குறித்தோ, அதன் ஒப்பீட்டு மதிப்பீடு குறித்தோ என்ன கவலையுமில்லை.

கஷ்டப்பட்டுக் கட்டிய மணல்வீட்டை ஒரு நொடியில் காலால் எட்டியுதைப்பது எத்தனை அளப்பரிய, விடுதலையுணர்வுதாமரையிலைத் தண்ணீர்த்துவம்!

 விளையாடும் சிறுமிக்கு காதில் லோலாக்கும் கணுக்காலில் கொலுசும் இடைஞ்சலாகவே இருக்கும். தாகூர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லாவிட்டாலும் அதுவே உண்மை.

 குழந்தையின் பொம்மைகள் உயிருள்ளவை . அவை அழும் சிரிக்கும் அவற்றுக்கும் வலிக்கும் பசியெடுக்கும்.

 ஊர்ந்துசெல்லும் சிற்றெறும்புகளை வேண்டு மென்றே நசுக்கிவிடுவதில்லை குழந்தைகள். அவற்றோடு சேர்ந்து பொந்துக்குள் சென்று பார்க்கவே ஆவலாயிருக்கின்றன.

 கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை என்றெல்லாம் குழந் தைக்குத் தெரியாது. கெட்டவர் நல்லவர் ஏழை பணக்காரர் என்பதெல்லாமும்கூட.


ஒரு குழந்தையின் சேமிப்பில் இருக்கலாகும் குந்துமணிகள் விலைமதிப்பற்றவை!

 குழந்தைக்குள்ளிருக்கும் பிரபஞ்சம் அதற்குப் போதுமானதாக இருக்கிறது.

வாழ்வதும் வளர்வதும் குழந்தைக்குஇங்கேஇப்போதுமட்டுமேயாகிறது.

 தங்களுடைய தேர்வுகளுக்காக அடியுதைகளை, ஆங்கார வசைகளை எதிர்கொள்ள அவர்கள் மன அளவில் அஞ்சுவதேயில்லை.

ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும் வளர்ந்தவர்கள் சூழ்நிலைக் கைதிகள், சமூக பலியாடுகள், என்பதெல்லாம்....



***



 

 

நேரக்கூடும் தற்கொலையும் கையறுநிலைக் கவிதையும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நேரக்கூடும் தற்கொலையும் கையறுநிலைக் கவிதையும்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

அக்கம்பக்கத்தில்

தற்கொலையின் நெடி அல்லது வாடை அல்லது வீச்சம்
கிளர்ந்தெழுந்து பரவிக்கொண்டிருப்பதாக உணரும் மனதில்
விலகிய பார்வையாய் வலிபோல் ஒன்று…..
அவ்வளவுதான்
ஏதும் செய்யவியலாது.
இடைத்தூரத்திற்கு அப்பாலானது இயலாமை.
தற்கொலை செய்யத் துணிந்தவர்
கோழையா தைரியசாலியா
என்ற பட்டிமன்றம் காலங்காலமாய் நடந்துகொண்டிருக்கிறது.
பிறர் தன்னைக் கொலைசெய்யாமலிருக்கும் பொருட்டோ
தான் பிறரைக் கொலைசெய்யாமலிருக்கும்
பொருட்டோ
நடக்கின்றன தற்கொலைகள் என்று எந்த உளவியலாளரேனும் சொல்லியிருக்கிறார்களோ, தெரியவில்லை.
அரை மயக்க நிலை அல்லது ஜன்னிகண்ட நிலை
அல்லது முழுவிழிப்பு நிலையில் எதற்கென்றே தெரியாத
அரைகுறை நம்பிக்கையில்…..
நடுக்காட்டில் நள்ளிரவில் நின்றுபோன வண்டியில்
இல்லாத பெட்ரோல், அல்லது
இருந்தாற்போலிருந்து மறந்துபோன வண்டியோட்டல்,
அல்லது செயலிழந்துபோய்விட்ட கைகால்கள்,
மங்கலாகிவிட்ட பார்வை,
எங்கும் மூடிக்கொண்டுவிட்ட திசைகள்…..
கற்பனையாய் குழந்தைகள் நடித்துக்காட்டும்
சுருக்கிடல்
சமயங்களில் உண்மையாகிவிடுவதுண்டு.
மாஜிக்கல் ரியலிஸமாகவும் சிலர் தம்மைத்தாம்
சாகடித்துக்கொண்டு
மீண்டும் உயிர்த்தெழுவதுண்டு.
அந்நியமாதலின் கொடுந்தழல்
அடுத்த அடி எடுத்துவைக்க
பல்லாயிரத்தடி பள்ளத்தில் விழல்
அடுத்தநாளில் விழித்தல்
வரவாக்கும் மரணபயத்தில்
வற்றிப்போகும் வாழ்வுக்கான விழைவு….
ஒரு புதிர்ச்சுழல்பாதையில் புகுந்தபின்
வெளியேற வகையறியாது
மருகும் மனதிற்குப் புலப்படும் ஒரே வழி.
பழிவாங்கலாயும் சமயங்களில் நடந்தேறும்.
மரித்த பின் பரவசத்துடன் ஆவிபார்க்குமோ
பழிவாங்கப்பட்டவரின் மிகுதுயரை?
முப்பத்தியிரண்டு வயது முற்றிய புற்றுநோயாளி யொருவர்
மனைவிக்கும் சிறு மகள்களுக்கும் தந்த நஞ்சு திருப்திகரமாய்
வேலை செய்ய
தனக்குத் தந்துகொண்டது தோல்வியடைந்ததில்
உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறார் குடும்பத்தலைவர்
_ இன்றைய செய்தித்தாளில்.
இனியான இவர் வாழ்க்கை இப்போதிருப்பதன் நீட்சியா இல்லை
இறப்பிற்குப் பிறகானதன் நீட்சியா?
தற்கொலையாளர்களின் நிர்க்கதி
கற்பிதமா கணநேரக் குரூர உண்மையா
ஒப்புநோக்க வீதியோரப் பிச்சைக்காரர்களின்
வாழ்வீர்ப்பு மெச்சத்தக்கதா – அல்லது
இஃதொரு ஆக்கங்கெட்ட கொச்சையான
அவதானிப்பா
ஒரு தற்கொலை மற்றவர்களையும் ஏதோவொரு விதத்தில்
தங்களுடைய மேற்பரப்பிலிருக்கும் தர்மவான்களைத் தாண்டி
அடியாழத்திலிருக்கும் மனசாட்சியிடம் அண்டச் செய்கிறது
அடுத்த சில நிமிடங்களுக்காவது…..
அண்டச்செய்தால் நல்லது
அவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும்….
அடி முடி யறியா வாழ்வின்
அகால மரணம் போலாகுமா மிக் கவிதையும்……

நான் யார் நான் யார் நீ யார்….. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

நான் யார் நான் யார் நீ யார்…..

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நான் நான் நான் நான்…

நாமைப் பற்றிப் பேசினாலும் சரி
நீயைப் பற்றிப் பேசினாலும் சரி
அவளை அவனை அவரை அவர்களை
அதை அவற்றை _
யாரைப் பற்றிப் பேசினாலும் சரி
அந்த நானுடைய பேச்செல்லாம்
நான் நான் நான் தான்….
எனில்
இந்த உலகம் நான்களால் ஆனது
ஒரு நானால் அல்ல
நானாவிதமான நான்களால் ஆனது
ஒரேவிதமான நான்களால் அல்ல.
இதைப் புரிந்துகொள்ளாத ஒரு நான்
பல நான்களாகக் கிளைபிரிந்து
பேசிக்கொண்டேபோகிறது.
அந்தப் பாதைகளில், திசைவழிகளில் முளைக்கும்
புல் பூண்டு செடி கொடி பெருமரம் எல்லாமும்
அந்த ஒரு நானின் பல நான்களில் மட்டுமே
வேர்பிடித்து வேர்பிடித்து.
மெய்யான இயற்கையை, வாழ்வை
தரிசிக்கும் ஆர்வங்கொண்டோர்
அந்தப் பாதைகளில் புகுவதை
கவனமாகத் தவிர்த்து
அப்பால் சென்று
தனது நானின் நான்களுக்கேற்ற
பிறரது நான்களை அடையாளங்காணும்
முனைப்பில்
அடுத்தடுத்து விரிந்திருக்கும் பாதைகளில்
நுழைந்து நடந்தவண்ணமே.
எந்த நானும் எந்த நானுக்கும்
பிரதிநிதியாகிவிட முடியாது
எல்லா நான்களுக்கும் பதிலியாகிவிட
ஏலாது
தன் நான்களைத் தேடப்புகாத ஒரு நான்
அடுத்தவன் நான்களை
அடையாளங்காட்டலாகுமா என்ன
யாரும் நுழையாத அந்த நானின் நான்களின்
ஆளரவமற்ற பாதைகள் கிளைப்பாதைகள்
நீண்டுகொண்டே போகின்றன…..
நாராசமாய் வீறிட்டுக்கொண்டிருக்கிறது
அதன் அனர்த்த மூச்சுக்காற்று…

நியாயத்தராசுகளின் நிலைப்பாடுகள் சில - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 நியாயத்தராசுகளின் 

நிலைப்பாடுகள் சில

ரிஷி(லதா ராமகிருஷ்னன்)


ஒரு கையில் கிட்டாரும் மறு கையில் கோடரியுமாக

இருக்கும் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாய்

தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் அவர்கள்

ஒரு தலையை வெட்டிவிட்ட பிறகு

கிட்டாரை வாசிக்கிறார்கள்.

அல்லது கிட்டார் வாசித்த கையோடு

காணக்கிடைத்த தலையை அல்லது தலைகளை

கனகச்சிதமாகக் கொய்துவிடுகிறார்கள்.

தன்னிசையாகக் கிளர்ந்தெழும் கோபம் பெரிதா

தருவிக்கப்பட்ட கோபம் பெரிதா என்ற பட்டிமன்றங்கள் நடத்தப்படுவதேயில்லை.

தேவைப்படும்போதெல்லாம் சில அன்னாடங் காய்ச்சிகளின் சிரசுகளில்

கிரீடங்களைப் பொருத்துகிறார்கள்

கையோடு கரும்புள்ளி செம்புள்ளிகளையும் குத்திவைக்கிறார்கள்

கிட்டாரின் இனிமையான இசையின் பின்னணியில்

அவர்களைத் தெருவோரமாக அமரவைத்து சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவதற்கான ஒத்திகையும் முன்னேற்பாடுகளுமே அது

என்று திரும்பத்திரும்பச் சொல்லுகிறார்கள்.

தவறாமல் இடையிடையே கிட்டாரை வாசித்து

மகுடம் அணிந்தவர்களின் மனதில் கிளர்ந்தெழும் கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் அகற்றுகி றார்கள்

அல்லது அவற்றின் அடர்வைக் குறைக்கிறார்கள்.

அத்தனை காலமும் அவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும்

அநீதிகளைக் களைய

சில தலைகளைத் துண்டித்தாகவேண்டியது அவசியம் என்கிறார்கள்.

அது கொலையல்ல – காருண்ய அலை 

என்கிறார்கள்

அவர்களுடைய தர்க்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அவ்வப்போது கிட்டாரை அருமையாக வாசித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

அங்கங்கே யவ்வாறு அனுதினமும் அவர்கள் கொய்தெடுக்கும் தலைகளையெல்லாம் கணக்கெடுத்துப் பூரித்துப்போகும்

அன்னாடங்காய்ச்சிகளுக்குக் காலதாமதமாகவே புரிகிறது.

தங்கள் தலைகளில் ஏற்றப்பட்டிருப்பது அட்டைக்கிரீடங்கள் என்பதும்

அவர்கள் கைகளிலுள்ளவை நிஜமான கொடுவாள் என்பதும்.

அதற்குள்

அவர்கள் பெயரால் மரகத மாணிக்க ரத்தினங்கள் பொறிக்கப்பட்ட மெய்க்கிரீடங்களை அணிந்துகொண்டு

அவரவருக்கான சிம்மாசனத்தில் அமர்ந்துவிடும்

அந்த கிட்டார் – கோடரி கலவையாளர்கள்

ஆற்றலாகும் ஒரே சமூகமாற்ற அரும்பணியாய்

கிட்டாரை வாசிக்கவும் கொடுவாளால் வெட்டிச் சாய்க்கவும்

அரைகுறைப் பயிற்சிவகுப்புகளை ஆரம்பிக்கிறார்கள் –

அதற்குப் பிறகும் அன்னாடங்காய்ச்சிகளாகவே நீடிப்போருக்கு.

1001அரேபிய இரவுகள் - தமிழில் : சஃபி

 

அலிஃப் லைலா வ லைலா எனும் 1001அரேபிய இரவுகள் உயிர்மை வெளியீடு 

தமிழில் : சஃபி

(*பிப்ரவரி 27, 2023 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)


நண்பர் சஃபி clinical psychologist ஆகப் பணியாற்றி வருகிறார். 

அவரும் எழுத்தாளரும் நண்பருமான கோபி கிருஷ்ணனும்தான் எனக்கு Psychiatry, anti-Psychiatry சார்ந்த பல விஷயங்களை, நுணுக்கங்களை அறிமுகப்படுத்தி அந்தத் துறை சார்ந்த குறிப்பிடத் தக்க கட்டுரைகளையும் ஒன்றிரண்டு நூல்களை யும் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தவர்கள்.

சஃபியும் நிறைய எழுதியிருக்கிறார்; மொழி பெயர்த்திருக்கிறார். 

இப்போது சஃபியின் முனைப்பான உழைப்பில் 1001 அராபிய இரவுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகத்தால் நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.

On 'CULTURE LITERATURE PERSONALITIES _ A COLLAGE' By Dr.K.S. SUBRAMANIAN

மதிப்பிற்குரிய மூத்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரர் டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் இடம்பெறும் இந்த நூலை சமீபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

Dr.K.S. உயிரோடு இருக்கும்போதே பிரசுரத்திற்கு அனுப்பிவைத்திருந்தார். புத்தகத்தைப் பார்த்தி ருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.

இலக்கியம் – சமூக வெளிகளில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களைக் கட்டுரைக ளாக டாக்டர் கே.எஸ். எழுதி பல்வேறு தொகுப்புகளில் அவை வெளியாகியிருக்கின்றன. அவற்றி லிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளும், புதிதாக எழுதிய கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள் ளன.

டாக்டர் கே.எஸ். மீது மிகுந்த மரியாதையும் அபிமானமும் கொண்ட, தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராகத் திகழும் திரு.இறையன்பு டாக்டர் கே.எஸ்.ஸின் அரும் பணிகள் குறித்து அகல்விரிவான முன்னுரை எழுதியுள்ளார்.


ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 20க்கும் மேற்பட்ட அடர் செறிவான கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலின் முகப்பு அட்டையைப் பார்த்ததும் மிகவும் வருத்தமாயிருந்தது. ‘ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் ஒரு நூலின் முகப்பு அட்டை அந்த நூலின் சாரத்தை, முக்கியத்துவத்தைக் குறிப்பு ணர்த்துவதாய், அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் அமையவேண்டும். இந்த நூலின் முகப்பு அட்டை நூலின் உள்ளடக்கத்திற்கு நியாயம் சேர்ப்பதாக இல்லை. இதற்கு பதில் Dr. கே.எஸ்.ஸின் புகைப் படத்தையே பெரிதாக வெளியிட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடிய வில்லை.