LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, March 10, 2023

நியாயத்தராசுகளின் நிலைப்பாடுகள் சில - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 நியாயத்தராசுகளின் 

நிலைப்பாடுகள் சில

ரிஷி(லதா ராமகிருஷ்னன்)


ஒரு கையில் கிட்டாரும் மறு கையில் கோடரியுமாக

இருக்கும் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாய்

தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் அவர்கள்

ஒரு தலையை வெட்டிவிட்ட பிறகு

கிட்டாரை வாசிக்கிறார்கள்.

அல்லது கிட்டார் வாசித்த கையோடு

காணக்கிடைத்த தலையை அல்லது தலைகளை

கனகச்சிதமாகக் கொய்துவிடுகிறார்கள்.

தன்னிசையாகக் கிளர்ந்தெழும் கோபம் பெரிதா

தருவிக்கப்பட்ட கோபம் பெரிதா என்ற பட்டிமன்றங்கள் நடத்தப்படுவதேயில்லை.

தேவைப்படும்போதெல்லாம் சில அன்னாடங் காய்ச்சிகளின் சிரசுகளில்

கிரீடங்களைப் பொருத்துகிறார்கள்

கையோடு கரும்புள்ளி செம்புள்ளிகளையும் குத்திவைக்கிறார்கள்

கிட்டாரின் இனிமையான இசையின் பின்னணியில்

அவர்களைத் தெருவோரமாக அமரவைத்து சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவதற்கான ஒத்திகையும் முன்னேற்பாடுகளுமே அது

என்று திரும்பத்திரும்பச் சொல்லுகிறார்கள்.

தவறாமல் இடையிடையே கிட்டாரை வாசித்து

மகுடம் அணிந்தவர்களின் மனதில் கிளர்ந்தெழும் கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் அகற்றுகி றார்கள்

அல்லது அவற்றின் அடர்வைக் குறைக்கிறார்கள்.

அத்தனை காலமும் அவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும்

அநீதிகளைக் களைய

சில தலைகளைத் துண்டித்தாகவேண்டியது அவசியம் என்கிறார்கள்.

அது கொலையல்ல – காருண்ய அலை 

என்கிறார்கள்

அவர்களுடைய தர்க்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அவ்வப்போது கிட்டாரை அருமையாக வாசித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

அங்கங்கே யவ்வாறு அனுதினமும் அவர்கள் கொய்தெடுக்கும் தலைகளையெல்லாம் கணக்கெடுத்துப் பூரித்துப்போகும்

அன்னாடங்காய்ச்சிகளுக்குக் காலதாமதமாகவே புரிகிறது.

தங்கள் தலைகளில் ஏற்றப்பட்டிருப்பது அட்டைக்கிரீடங்கள் என்பதும்

அவர்கள் கைகளிலுள்ளவை நிஜமான கொடுவாள் என்பதும்.

அதற்குள்

அவர்கள் பெயரால் மரகத மாணிக்க ரத்தினங்கள் பொறிக்கப்பட்ட மெய்க்கிரீடங்களை அணிந்துகொண்டு

அவரவருக்கான சிம்மாசனத்தில் அமர்ந்துவிடும்

அந்த கிட்டார் – கோடரி கலவையாளர்கள்

ஆற்றலாகும் ஒரே சமூகமாற்ற அரும்பணியாய்

கிட்டாரை வாசிக்கவும் கொடுவாளால் வெட்டிச் சாய்க்கவும்

அரைகுறைப் பயிற்சிவகுப்புகளை ஆரம்பிக்கிறார்கள் –

அதற்குப் பிறகும் அன்னாடங்காய்ச்சிகளாகவே நீடிப்போருக்கு.

No comments:

Post a Comment