LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, February 11, 2023

தேசியக் கவி சம்மேளனத்தில் கலந்துகொண்டவரின் கவிதானுபவக் கட்டுரை -ரிஷி

 தேசியக் கவி சம்மேளனத்தில் கலந்துகொண்டவரின் கவிதானுபவக் கட்டுரை

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


நான் காலையில் கண்விழித்தேன் _
வழக்கமாகச் சென்னையில்,
கடந்த வாரம் திங்கட்கிழமை தில்லியில்.
கட்டாயம் காபி வேண்டும் எனக்கு
சென்னையாயிருந்தாலென்ன தில்லியாயிருந்தாலென்ன.
காலை பத்துமணிக்கெல்லாம் கடைகண்ணிக்குச் சென்றுவரக் கிளம்பினேன்.
கைக்குக் கிடைத்த பாசி மணி ஊசியெல்லாம் வாங்கிக்கொண்டேன்.


கவியரங்கக்கூடத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களோடு கைகுலுக்கினேன்.
கைக்குட்டையைப் பையிலிருந்து எடுத்து
வியர்த்திருந்த கழுத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டேன்.


கவிதை வாசிக்க வந்திருந்த அண்டை மாநிலக் கவிஞர்களோடு ஆசையாசையாக செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.


(
அத்தனை பேரிலும் நானே அதிகப் பொலிவோடு இருந்ததாகச் சொன்னார்கள்).


பார்வையாளர்களாக வந்திருந்த ருஷ்ய, செக்கோஸ்லா வாக்கிய ஈரானிய ஜெர்மானிய நாட்டுக் கவிஞர்கள் என்னைப் பார்த்து அத்தனை பாசத்தோடு சிரித்தார்கள். நான் வாசிக்காத என் கவிதை உலகத்தரமானது என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.


கடைசி வரிசைக்குப் பின்னால் வைத்திருந்த மினரல் வாட்டர் புட்டிகளில் ஒன்றை எடுத்துக் குடித்தேன்.


கவிதைகளை நான் படித்தபோது கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது என்று எழுதவிடாமல் என் தன்னடக்கம் தடுப்பதால் _


மண்ணைப் பிளந்தது என்று கூறி
(
- மு விற்கிடையே உள்ள ஓசைநயத்திற்காகவும்)
முடித்துக்கொள்கிறேன்.



(
பி.கு: கவிதை பற்றி எதுவுமே பேசவில்லையென்கிறீர் களே. உளறிக்கொட்டாதீர்கள். உங்களுக்கு என் மீது பொறாமையென்று புரிகிறது. உங்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.)

 

புகைப்படங்களைப் பொருள்பெயர்த்தல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  புகைப்படங்களைப் பொருள்பெயர்த்தல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

முதல் புகைப்படத்தில் அவர்
உலகிலேயே அதிக உயரமான
மலையுச்சியில்
நின்றுகொண்டிருந்தார்.

மூன்றாவது புகைப்படத்தில் அவர்
விரிந்தகன்ற சமுத்திரக் கரையோரம்
கணுக்காலளவு அலைநீரில்
நடைபழகிக்கொண்டிருந்தார்.

முப்பதாவது புகைப்படத்தில் அவர்
அகழ்வாராய்ச்சிப் பகுதியிலிருந்த
ஆழ்குழிக்குள்
குனிந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.

முந்நூறாவது புகைப்படத்தில் அவர்
மலைப்பாம்பின் முதுகின்மீது
தலைவைத்துக்
கொஞ்சலாகப் படுத்திருந்தார்.

மூவாயிரத்தாவது புகைப்படத்தில் அவர்
மேகத்தினூடாய் மறைந்தோடும் நிலவைப் பிடிக்க காமராவைத் திரும்பிப்பார்த்தவாறே
தலைதெறிக்க ஒயிலாய் ஓடிக்கொண்டிருந்தார்.

முப்பதாயிரத்தாவது புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டதா தெரியவில்லை.

ஒருவேளை எடுக்கப்பட்டிருந்தால் அதில் அவர்
மூளைக்குள் சுற்றுலா செல்வதாக இருக்கும்
வாய்ப்புகள் அதிகம்.

இடையேயான எண்ணிறந்த புகைப்படங்களில்
பெரிய பெரிய பிரமுகர்களோடு நின்றுகொண்டிருக்கும்
அவரின் படைப்புகளை
அவரையன்றி யாரும் பேசுவதேயில்லை.

பிரதியை வாசித்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 

பிரதியை வாசித்தல்

 ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(Published in Pathivukal Online Magazine dated Feb 6,2023)

 எல்லோருடைய கைகளிலும் புத்தகம் இருந்தது.

அவை சில சமயம்

ஒரே புத்தகத்தின் பல பிரதிகளாக இருந்தன

வேறு சில சமயங்களில்

வெவ்வேறு புத்தகங்களின் பிரதிகளாக இருந்தன.

புகைப்படத்தில் புத்தகத்தை

யொரு குழந்தையாக ஏந்திக்கொண்டிருந்தனர் சிலர்

அருங்காதலராக அரவணைத்துக்

கொண்டிருந்தனர் சிலர்

அணுகுண்டைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பதுபோல்

கலவரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தனர் சிலர்;

அந்தரத்தில் மிதக்கக் கிடைத்த மாயக்கம்பளமாய்

பெருமைபொங்கப் பிடித்துக்கொண்டிருந்தார்கள் சிலர்.

இன்னும் சிலருக்கு புத்தகங்களும் புகைப்படங்களும்

சுயவிளம்பரப் பதாகைகள்

எப்பொழுதும்போல்

எல்லாவற்றையும்போல்

இருபத்தியெட்டு புத்தகங்கள் வாங்கினேன் என்றவர் முகம் இருள

இருநூற்றியெட்டு வாங்கினேன் என்றார் ஒருவர்.

இல்லாத காசு கிடைக்கும் நாளில் இந்தப் புத்தகங்களைக் கட்டாயம் வாங்குவேன் என்று எண்ணிக்கொண்டான் வாசிப்பில் மிகுந்த ஆசையுள்ள ஏழைப் பள்ளிமாணவரொருவன்.

புத்தகம் ஆண்களுக்காக உருவாக்கப்படுபவை

என்று எங்கோ ஓர் அரங்கில்

யாரோ முழங்கிக்கொண்டிருந்தார்கள்.

மங்கிய தெருவிளக்கின் ஒளியில் இரவு உணவுக்கென எதிரேயிருந்த டீக்கடையில் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்ட பின் அதைக் கட்டித்தந்த செய்தித்தாள் கிழிசலை அத்தனை ஆர்வமாக எழுத்துக்கூட்டிப் படித்துக்கொண்டிருந்தார்

நாளெல்லாம் அந்த அழுக்கு பிளாஸ்டிக் நாற்காலியில் ஒடுங்கி உட்கார்ந்துகொண்டிருக்கும்

அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டி.

அப்பாவைக் கிள்ளிக்கிள்ளிவிட்டவாறே அழுதுகொண்டிருந்த அந்த சன்னதேகச் சின்னப்பையனுக்கு

அங்கிருந்த அத்தனை புத்தகங்களும் கிடார் பொம்மையாகவே தெரிந்தன.

முகங்கள் மறைய அடையாளங்காணலாகாக் கைகள் உயர்த்திப் பிடிக்கும் புத்தகங்களிலிருந்து

சொற்கள் சிறகடித்துப் பறக்கின்றன

அர்த்தம் துறந்து

 

Tuesday, February 7, 2023

இலவு காப்பது கிளி மட்டுமல்ல ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இலவு காப்பது கிளி மட்டுமல்ல

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(பிப்ரவரி 6, 2023 தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது)


அட்சர லட்சம் பெறும் கவிதைகள் என்று
ஒரு வாசகராய்த் தன் கவிதைகளை
நிதானமாய் அளவுமதிப்பீடு செய்துகொண்ட
கவிஞர்
கடனோ உடனோ வாங்கி
PRINT ON DEMAND புண்ணியத்தில்
அச்சிட்ட 50 பிரதிகளுக்கான
பிழைத்திருத்தம்
லே-அவுட் முகப்பு அட்டை
பின் அட்டை blurb ஒரு
சின்னக் கவிதையாக
பார்த்துப்பார்த்துச் செய்து
பொன் வைக்கும் இடத்தில் வைத்த
பூவனைத்தாய்
நூல் வெளியீட்டுவிழாவையும்
நடத்தி முடித்த பின்
திறனாய்வென்பது எழுத்தில்தான்
அமையும்
என்று சொல்வதற்கில்லை,
சாணிக்கவளங்களாகவும்
கவண்கற்களாகவும்கூடக்
கிடைக்க வழியுண்டு
என்ற முழு உண்மையின்
முள்மகுடத்தைத்
தலையில் சுமக்கச் சித்தமாய்
100 கவிதைகளடங்கிய தனது
தொகுப்பிற்கான
ஒற்றை விமர்சனத்திற்காக
நித்தமும் காத்துக்கொண்டிருக்கத்
தொடங்கினார்.

INSIGHT DECEMBER 2022

 INSIGHT

DECEMBER 2022

(A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY)

ஊரும் பேரும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஊரும் பேரும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*பிப்ரவரி 6, 2023 தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் இடம்பெற்றுள்ளது)

 

அகன்ற வானத்தில் தன்னந்தனியாக மின்னிக்கொண்டிருந்த
விண்மீனை அண்ணாந்து பார்த்திருக்கையில் மொட்ட விழ்வதாய்
மனதில் வெகு இயல்பாய் முகிழ்த்த வாழ்வுருக்களின் எலும்புகளை நரம்புகளையெல்லாம்
வரிகளில் பதிவேற்றி கவிதையாக்கிக்கொண்டிருந்தபோதெல்லாம்
கிறுக்கனென்றும்
கேனச்சிறுக்கியென்றும்
கித்தாப்பு காட்டறான் என்றும்
கெக்கேபிக்கே என்று எழுதுகிறாள் என்றும்
உருப்படாத எழுத்து என்றும்
ஒரு எழவும் புரியவில்லை யென்றும்
விதவிதமாய் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
வைதுதீர்த்த
’கவிதை கிலோ என்ன விலை’ என்று கேட்கும் இலக்கியப்புரவலர்கள்
அந்தக் கவியின் ஒரு கவிதை
சமூக ஊடகத்தில் பரவலானதும்
அவர் எங்கள் ஊர்க்காரரென்றும்
எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரென்றும்
எங்கள் தெருவழியாகச் சிலசமயம்
செல்வாரென்றும்
ஒருமுறை என்னைப் பார்த்துச்
சிரித்திருக்கிறாரென்றும்
அவர் உங்கள் ஊர்க்காரர் இல்லையென்றும்
உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரில்லையென்றும்
உங்கள் தெருவழியாக அவர் சென்றதேயில்லையென்றும்
உங்களைப் பார்த்துச்
சிரித்ததேயில்லையென்றும்
எதிரும் புதிருமாகப் பேசும் பேச்சில்
கதிகலங்கிநின்ற கவிதையைப்
பார்த்து
கனிவோடு சிரித்த கவி
காற்றின் கைபிடித்து அந்தரத்தில்
காலாற நடக்கத்தொடங்கினார்.

இதன் மூலம்…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இதன் மூலம்….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*05 பிப்ரவரி 2023 தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது)


மூலக்கவிதையில் ’குரல்வளையில் சிக்கிக்கொண்ட கனன்றெரியும் கங்கு’ என்றிருந்தது
மொழிபெயர்ப்பில்
’கனன்றெரியும் கங்கின் குரல்வளையில் சிக்கிக் கொண்டு’ என்றானதில்
ஏதும் தவறில்லை யென்பாரும்
எல்லாமே தவறாகிவிட்டதென்பாரும்
இதுவே மொழிபெயர்ப்பின் creativity என்பாரும்
இல்லையில்லை atrocity என்பாரும்
இஃதன்றோ மொழிபெயர்ப்பின் தனித்துவம் என்பாரும்
இதுவொரு கேடுகெட்ட தடித்தனம் என்பாரும்
கிசுகிசுப்பாய்த் தர்க்கித்தவாறிருக்க
நமுட்டுச்சிரிப்போடும்
நிஜமான வருத்தத்தோடும் சிலர்
மெல்ல நகர்ந்துவிட
இவையேதுமறியாது அருள்பாலிக்கும் அறியாமையில்
மொழிபெயர்ப்பாளர் ‘லைக்’குகளைக் கணக்கிட்டுக் கொண்டிருக்க
அணைய வழியின்றி அந்தக் கங்கு
குரல்வளையில் இன்னமும் கனன்றெரிந்து
கொண்டிருக்கக் காண்போம் –
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்....





சொல்லத்தோன்றும் சில….. _ லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில…..

_ லதா ராமகிருஷ்ணன்



//புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை//

_ இந்த வரிகளில் இடம்பெறும் ’எல்லாம்’ என்ற வார்த்தை யில் ’புத்திசாலிகள் அத்தனை பேருமே வெற்றி பெறு வார்கள் என்று சொல்லமுடியாது வெற்றி பெற்றவர்கள் அத்தனை பேரும் புத்திசாலி கள் என்று சொல்ல முடி யாது’ என்ற பொருள் கிடைத்தாலும், ’வெற்றிபெற்றவர்கள் யாருமே புத்திசாலியில்லை, புத்திசாலி யாருமே வெற்றி பெறுவதில்லை என்பதான பொருளும் தொக்கி யிருப்பதாகத் தோன்றி இந்தக் கருத்து சரியில் லையே என்பதாகவும் எண்ணத்தோன்றும்.

இதேபோல்தான் _

/மொழிபெயர்க்கப்படும் கவிஞர்களெல்லாமே மிகச் சிறந்தவர்களில்லை;
மிகச்சிறந்த கவிஞர்களெல்லாமே மொழிபெயர்க்கப்படுவதில்லை/ என்ற வாசகமும்.

மொழிபெயர்ப்பு என்பதில் மிகச் சிறந்த கவிஞர் சிறந்த கவிஞராவதும் சாதாரண கவிஞராவதும் சம்பந்தப்பட்ட கவிஞரோடு மொழிபெயர்ப்பாளர் கையிலும் இருக்கிறது.

மூலமொழியில் இருப்பதைவிட இலக்குமொழி யில் ஒரு கவிதை மேம்பட்டு அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியல்ல. ஆனால், அப்படி அமையலாம் – தவறில்லை. ஆனால், மூலமொழி யில் இருப்பதைவிட குறைவான தரத்தில் மொழி பெயர்ப்பில் அமைந்துவிடலாகாது.

எந்தக் கவிஞரும் தன்னுடைய கவிதை மொழி பெயர்க்கப்படும், மொழிபெயர்க்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப் பில் கவிதை எழுதுவதில்லை.

ஆனால், ஒரு கவிஞரின் கவிதையால் ஈர்க்கப் படும் மொழிபெயர்ப்பாளர் அவருடைய கவிதை களை மொழிபெயர்க்க விரும்புகிறார்; முயற்சி மேற்கொள்கிறார்.

இந்த முயற்சிகள் ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்ற அடிப்படையில் ஒரு நல்ல கவிதையை, கவிஞரை பிறமொழி வாசகர்க ளுக்கு அறிமுகப்படுத்துவ தாகத்தான் அமைய வேண்டுமே தவிர ஒரு மொழிபெயர்ப்பாளரை முன்னிலைப்படுத்தும் முயற்சியாக அமைவது முறையல்ல.

முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள், வாழ்க்கைத் தொழிலாக மொழிபெயர்ப்பை மேற்கொள்பவர் கள் ஒரு தொகுப்பை மொழிபெயர்க்கும்போது மேற்குறிப்பிட்ட தேர்வையோ, தரநிர்ணயத் தையோ கைக்கொள்ளவியலாது என்பதும் உண்மையே. ஆனால், தரம் சார்ந்து ஒரு தொகுப்பை மொழிபெயர்க்க ஒப்புக் கொள்வதும் ஒப்புக்கொள்ளாததும் அவருடைய கையில்தான் இருக்கிறது.

புதிய கவிஞரை ஊக்குவிக்கும் விதமாக அவரு டைய சாதாரண கவிதை ஒன்றை அல்லது சிலவற்றை ஒரு மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழியில் தரலாம். பரவாயில்லை. ஆனால், மூலமொழியில் தனக்கென்று ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கவிஞரை இலக்கு மொழியில் தரும்போது அல்லது மூல மொழியில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் கவிஞரை இலக்கு மொழியில் தரும்போது சம்பந்தப்பட்ட கவிஞரின் சாதாரணக் கவிதை களை இலக்கு மொழியில் தருவதால் என்ன பயன்? இதில் மொழிபெயர்ப்பாளர் மொழி பெயர்த்திருக்கும் கவிதைகளின் எண்ணிக்கை தான் கூடுமே தவிர இந்த அணுகுமுறை ஒரு கவிஞரு க்கு நியாயம் சேர்ப்பதாகாது.

எது சிறந்த கவிதை என்ற பார்வை மாறுபடும் என்பது உண்மையே. ஆனாலும், தொடர்ந்த ரீதியில் கவிதைகளை வாசித்து கவிதை ரசனையை வளர்த்துக்கொள் பவர்களுக்கு ஓரளவு இந்தத் தரநிர்ணயம் கைகூடும் என்றே தோன்றுகிறது.

தாற்காலிக நிரந்தரங்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தாற்காலிக நிரந்தரங்கள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


என் தாற்காலிகவாச அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டியாக
தாற்காலிகமாகத் தெரியக்கிடைத்த,
தாற்காலிகவேலையில் ஏழாண்டுகாலம் குளிரிலும் மழையிலும் கொரோனாகால முழு ஊரடங்கின் போதும்
லிஃப்ட் இல்லா நான்குமாடிகளுக்கு நாளும் பலமுறை ஏறியிறங்கியேறியிறங்கி வேலைபார்த்துவந்த
தாற்காலிக வேலையைத் திடீரென இழந்து
வாழ்வாதாரம் பறிபோயிருக்கும் -
பெண்ணைக் கொடுத்த வீட்டில் இன்னும் எத்தனைநாள் அண்டிப்பிழைக்கமுடியும் என்று புரியாமல் குழம்பி தொண்டையடைத்துநிற்கும் அந்த
சகமனிதருக்கு
தாற்காலிகமாகக் கிடைக்கக்கூடிய வேலையொன்றுக்காக
தகவல் தெரிவிக்கலாமென்று அழைத்தால்
தாற்காலிகமாய் துண்டிக்கப்பட்டிருக்கிறது இணைப்பு
என்று தெரிவிக்கும் அவருடைய அலைபேசியை ஊடுருவித் தகவலனுப்பும் செப்பிடுவித்தை
யெனக்குத் தாற்காலிகமாகத் தெரியக்கிடைத்தால்
எத்தனை நன்றாயிருக்கும்!

(பி.கு: இந்தக் கவிதையை மிகுந்த மனஉளைச்சலோடு எழுதிமுடித்த பிறகுதான் ‘அட, அந்த சகமனிதரின் அலைபேசி எண்ணுக்கு நாமே ‘டாப் அப்’ செய்யமுடியுமே என்ற எண்ணம் பளிச்சிட்டது. இப்போதே அதைச் செய்து விடுவேன்!)