LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ரிஷி கவிதைகள் _ மச்சம். Show all posts
Showing posts with label ரிஷி கவிதைகள் _ மச்சம். Show all posts

Monday, April 14, 2014

ரிஷி கவிதைகள் _ மச்சம், பசி, உயிர், அதில் எதில், பழிக்குப்பழி

ரிஷி கவிதைகள் _  மச்சம், பசி, உயிர், அதில் எதில், பழிக்குப்பழி






















1.மச்சம்
 இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம் 
புதிதாக முளைத்த மச்சத்திற்கும்
ஆரூடங்கள் உண்டுதான்.
நிலைக்காத போதிலும்
நாளையே அழிந்துபோகுமென்றாலும்
ஒவ்வொரு புதிய மச்சமும்
பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய்
புதியதோர்(தலை) எழுத்தாய்
உருமாறிக்கொள்ள,
மீள்வரவாகக்கூடும்
குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள்
புதிய விரல்களை நாடியவாறு


2. பசி
தச்சன் கை உளி செதுக்குவதும்
பிச்சைப்பாத்திரத்தை நிரப்பக்கூடும்
அன்னதானங்களால் ஆகாதவாறு
ஒன்றாகவும் பலவாகவும் ஆகிய
காதலே போல்
அவரவர் பசியும் அவரவருக்கேயானதாக.


3.உயிர்
வெல்லம்;
அல்ல-
வெண்கலம்;
இன்னும்-
வெங்காயம்;
வேறு-
பெருங்காயம்
சமரில் பட்டதோ?
சாம்பாரிலிட்டதோ?


4. அதில் எதில்?
வெயில் தணிய விட்டிருக்கும் நீர்
கிளைபிரியும் ஆறாய் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது
அறையெங்கும்.
அசந்தநேரம் என் காலைக் கவ்வியிழுத்து
என்னைக் கவிழ்த்துவிடக் காத்திருக்கும் ஒரு துளி
அதில் எதில்?


5. பழிக்குப்பழி
 சின்னத்திரையில் ஒரு நிழலுருவம்.
சித்தியோ மாமியோ
அண்ணனோ மருமகனோ
தென்னை மரத்தடியில் இளநீரை
ஆணெனில் சீவிக்கொண்டும்
பெண்ணெனில் சீவச் சொல்லிக்கொண்டும்.
யார் தலையையோ வெட்டப்போவது
பார்வையாளர்களுக்குக் குறிப்புணர்த்தப்படுகிறது.
காற்று ஒரு சுழற்று சுழற்றிக் கண்டுபிடித்துக்
கொண்டுவந்து நிறுத்தியது அதே மரத்தடியில்-
மெகா சீரியல்
மகானுபாவ
கதாசிரியரையும்
இயக்குனரையும்.
மடமடவென்று
குறிபார்த்துக் காய்களை கீழே வீசியெறிந்தது
தென்னை.