LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label பொருளதிகாரம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label பொருளதிகாரம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Monday, November 18, 2019

பொருளதிகாரம் _ 2 - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பொருளதிகாரம் _ 2

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


நவீன கவிதை நாட்குறிப்பேடு அல்ல
கவிஞர் என்ன நினைத்து எழுதினாரோ அதையே
வாசிப்போரும் வழிமொழிவதற்கு…
அதே சமயம் கவிதை கசங்கிக் கிழிந்த தாளல்ல -
பொருள்பெயர்த்தல் என்று கூறி யதைக்
கண்டபடி துண்டுதுண்டாய்ப்
பிய்த்துப்போடுவதற்கு;
சக வாசக மனதைக் குப்பைத்தொட்டியாக பாவித்து
அதில் கவிதையின் அர்த்தமெனச் சிலவற்றைச்
சுருட்டியெறிவதற்கு.
ஒற்றையர்த்தம் எனும் அதிகார மையத்தைச்
சிதறடிப்பதான போர்வையில்
குறிப்பிட்ட சில அர்த்தங்களைக் கவிதையின்
மேல் கைபோன போக்கில் பொதியேற்றிச்
சுமக்கவைக்கலாகாது
வாசகப்பிரதியென்ற பெயரில்.
கவிதை விரித்துவைக்கும் பல கொடுங்கோலாட்சிச்
சித்திரங்களை
ஒற்றைச் சக்கரவர்த்தியை சாணியடித்தலாய்
முடிந்த முடிவான வாசிப்பாக முன்வைத்தல்
வாசக வித்தகமா?
வன்மப் பித்தலாட்டமா?
பிரதியின் அர்த்தம் பற்பல என்று சொல்வதால்
பிரதிக்கு நான் விரும்பும் ஒற்றையர்த்தத்தைத்
தரவும் அதையே பரவலாக்கவும்
உரிமையுண்டு எனக்கு மட்டுமே என்பார்
வெறும் வாசிப்போர் அல்ல;
வாசிப்பு வன்முறையாளர்கள்.
வாசகப்பிரதிகள் பலப்பல வெனச் சொல்லியவாறே
கவிதையின் வரிகள் முன்வைக்கும் பிம்பங்களை
யொரு மொந்தையாக்கி
நிந்தனைக்கென்றே கட்டம்கட்டிவைத்திருக்கு
மொரு திருவைக்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றமுடியவில்லையே
என்ற கோராமையோடு
நூறாயிரம்விதமா யொரேயொரு பொருளைக்
கவிதையின் வரிகள் வரியிடைவரிகளில்
வலிந்தேற்றிக் காட்டினா லது
வாசிப்பின் ரோகம்;
வாசிப்புக்குச் செய்யும் துரோகம்.
அப்படியே அதுதா னொரு கவிதையின்
மறைபொருளென்றாலும்
தனி யொரு கவிஞரின் வரிகள் தெரிவிப்பதெல்லாம்
கேள்விக்கப்பாற்பட்ட உண்மையென்று
கொள்ளத்தான் வேண்டுமா என்ன?
ஆபத்தானது ’ஆம்’ எனும் வாசக மனநிலை
கையடித்துச் சத்தியம் செய்தல்
கவிதைக்கு கைவரக்கூடாத கலை.
அவரவர் கேள்விகள் அவரவர் பதில்கள்
அவரவருக்கென்று விருப்புவெறுப்புகள்
பல்வகைப் பயன் கருதிக் கட்டும் பாட்டுக்கள்
பூட்டுகளுக்கேற்ற திறவுகோலா
கவிதையாக்கலும்
பொருள்கொளலும்?
அனைத்திற்கும் மேலா யொரு அடிப்படை உண்மை _
யதைக் கண்ணின் மணியெனக் கொள்வதே
மரபு நவீன மற்றெல்லா மெய்க் கவிஞர்களின்
மனத் தின்மையாக.