LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 16 -20 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 16 -20 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Tuesday, November 22, 2022

சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 16-20 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 16-20

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


16. வெற்றுமுழக்கங்கள்
………………………………………………….....................................

’அறிவீலி’ என்றழைத்தார்
’ஆக்கங்கெட்ட அற்பப்பதரே’ என்று
ஆங்காரமாய் மொழிந்தார்
’அட, ஒரு மண்ணும் தெரியாது உனக்கு’ என்று
உரத்த குரலில் பிரகடனம் செய்தார்.
’அடி செருப்பாலே’ என்று
அத்தனை கண்ணியமாக முழங்கினார்
’அப்படியே போய்விடு அப்பாலுக்கப்பாலே’ என்று
அருங்கனிவோடு அடியாளின் குரலில் மிரட்டினார்
’அக்கக்கோ பறவையிடம் பாடம் கேட்டுவிட்டு வா பார்க்கலாம்’, என்று அந்த விரட்டு விரட்டினார்
‘வடிகட்டின முட்டாள்’ என்று அழகிய வழுவழுப்புத் தாளில்
நற்சான்றிதழ் வழங்கினார்”
அவ்வப்போது வார்த்தைகளற்று வெறுமே பழிப்புகாட்டிக்கொண்டிருந்தார்.
நடையெட்டிப் போட்டேன் என் வழியில்.
தெருவோர டீக்கடையிலிருந்து சந்திரபாபு பாடிக் கொண்டிருக்கிறார்:
”நானொரு முட்டாளுங்க
ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க…”

17. விழல்
....................................
இருந்தவிடத்திலிருந்தே இரண்டாயிரங்
காததூரம் பிரயாணம் செய்து
பலகாலம் பழகியவருக்கு
மெய்யாகவே இரண்டு கிலோமீட்டர்கள்
பயணம் செய்வது
இடுப்பொடியச் செய்வது இயல்பு.
இரண்டு எட்டுவைத்தால்கூட
தடுக்கிவிழுவதில்
வியப்படைய என்ன இருக்கு?


18. சுழல்
………………………………………....................................

இல்லாத சுழலில் தத்தளித்துக்கொண்டிருக்காத
நல்லவர் ஒருவருக்கு
எல்லா நேரமும் உதவிக்கொண்டிருப்பதாக
எண்ணிக்கொண்டிருப்பவள்
இன்னரும் சமூகப்பணியாளராய்த்
தன்னைத்தான் உன்னியபடி
அல்பகலாய் சுழன்றோடிக்கொண்டேயிருக்கிறாள்
சொல்ல வல்ல கிளி 'தான்' மட்டுமே யென
மெல்ல உரக்க முன்னும் பின்னும்
பன்னிப் பன்னிச் சொன்னவாறே......


19. தழல்
........................................................................

தன்னால் சாதிக்கவியலாத சிறகடித்தலை
கண்முன்னே ஒரு இக்குணூண்டு பறவை
தன்போக்கில் செய்துகொண்டிருப்பதைக்
கண்டு
அறிவுசாலியின் மனதில்
பண்டுதொட்டுக் கிளர்ந்தெழும்
வன்முறைத்தீ
அன்றுமென்றும் அவரையே
தின்றுதீர்த்துக்கொண்டிருக்கிறது.


20. கருணை புரிதல்
.................................................................

”இல்லை நான் திருடவில்லை”யென
சொல்லிச்சொல்லிப் பார்த்தான் சிறுவன்
சல்லிப்பயலே பொய்யா சொல்கிறாய்
எனச் சொல்லிச்சொல்லி அடித்தார்கள்
வல்வினையாளர்கள்
நல்வினைப்பயனாளி அந்தச் சிறுவனை
யரவணைத்துச் சொன்னாள் –
'பாவம் பசிக்காகத் திருடியவனை யிப்படியா
வதைப்பது?'
இது என்ன கதையென்று
விதிர்த்து விலகிய சிறுவன் சொன்னான்:
’அவர்கள் சுமத்தும் குற்றத்தையே நீங்களும்
அன்பொழுக வழிமொழிகிறீர்கள்
நல்லவிதமாய்ச் சொன்னாலும்
பொய் பொய் தான்; பழி பழி தான்.
இதற்கு அவர்களே மேல்
திரும்பவும் சொல்கிறேன் நான் திருடனல்ல
மனிதாபிமானம்
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல்
இருப்பதல்ல’.