LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ஒருசிலர் – சிலபலர் – படைப்பாளிகள் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label ஒருசிலர் – சிலபலர் – படைப்பாளிகள் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Saturday, September 1, 2018

ஒருசிலர் – சிலபலர் – படைப்பாளிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

ஒருசிலர்சிலபலர்படைப்பாளிகள்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


படைப்பாளிகளே போட்டது போட்டபடி ஓடிவாருங்கள்
நீங்கள் படைப்பாளி தானா என்று உரசிப் பார்க்க
(
தேவைப்பட்டால் முலாம் பூச, பட்டை தீட்ட)
புறப்பட்டிருக்கிறார்கள் ஒருசிலர் அல்லது சிலபலர்.
.


நீங்கள் படைப்பாளியாக அறியப்பட
பெரிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை
அந்த ஒரு சிலர் அல்லது சிலபலர்
கைதட்டச் சொன்னால் கைதட்டவேண்டும்;
குட்டிக்கரணம் போடச் சொன்னால்
எட்டுமுறை செய்துகாண்பிக்கவேண்டும்.
மொட்டைத்தலையைச் சுட்டிக் காட்டி
முடி எத்தனை நீளம் என்றால்
அடடா ஆமாமாம் என்று அடித்துச்சொல்லவேண்டும்;
அப்படியில்லை என்று அழிச்சாட்டியம் செய்யக்கூடாது.


பத்திருபது புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்களா?
பசி வயிற்றைத் தின்றபோதும்
நல்ல கவிதையை ரசித்துப் பாராட்டியிருக்கிறீர்களா
அதெல்லாம் யாருக்கு வேண்டும்?
அந்த ஒருசிலர் அல்லது சிலபலர் சொல்வதை
அப்படியே வழிமொழிந்தா லொழிய
நீங்கள் எப்படி படைப்பாளியாகப் புழங்க முடியும்?


யார் என்ன எழுதுகிறார்களென்றே தெரியாத
ஒருசிலர் அல்லது சிலபலர்
பேர்பேராய் படைப்பாளியைப் பழித்துக்கொண்டிருக்கிறார்கள்
அதைசெல்ஃபியெடுத்துக் காட்டிக்காட்டியே
தம் அரைவேக்காட்டுப் படைப்பை அமரத்துவம் வாய்ந்ததாகப்
ஃபிலிம்போட்டுக் கொண்டிருப்போர் இருக்க
அவர்கள் மத்தியில் உங்களுக்கென்றிருக்கும்
சொந்தக் கருத்தைச் சொன்னால்
என்னாகுமென்றுகூட தெரியாததத்திகளா நீங்கள்?


திக்கெட்டும் நீங்கள் படைப்பாளியாக அறியப்பட
ஆமாம்சாமியாகத் தலையை
சரியான இடத்தில் சரியான நேரத்தில்
சரிசரியான அசைவுகளில்
இப்படியுமப்படியும் ஆட்டத்தெரியவேண்டும்.


மாட்டேனென்றால் பின் உங்களை
ஊர் சொல்லி பேர் சொல்லி
சாதி சொல்லி மீதி சொல்லி
பேதுறச்செய்வதொன்றும் பெரிய விஷயமில்லை
யந்த ஒருசிலருக்கு அல்லது சிலபலருக்கு.


ஏதும் சொல்லாமல் மௌனமாயிருந்தால்
நாதாரி கோழை, நபும்சகர் நச்சுப்புதர் என்பார்கள்;
வாயைத் திறந்து எதிர்க்கருத்துரைத்தாலோ
நாயென்பார் பேயென்பார்பேசுவதோடு நிற்கமாட்டார்.


எழுதுவதாலெல்லாம் நீங்கள் படைப்பாளியாகிவிடமுடியாது
அந்த ஒருசிலர் அல்லது சிலபலர் அங்கீகரிக்கவேண்டும்.
அந்த ஒருசிலர் அல்லது சிலபலரின் அங்கீகாரத்தைப் பெற
மண்டியிட்டுத் தெண்டனிடவேண்டும் அவர்கள் முன்;


அந்த ஒருசிலர் அல்லது சிலபலரின் அபத்தக் கருத்துகளுக்கும்
வாழ்க வாழ்கவும் போற்றி போற்றியும்
வந்துகொண்டேயிருக்கவேண்டும் உங்களிடமிருந்து.
இல்லை, கசையடிதான்; கழுவேற்றம்தான்.


அதிகாரம் என்பது அரசர்கையில் மட்டுமல்ல.
அரசதிகாரத்தில் இருப்பவர்களின் ஏகபோக உரிமையில்லை
தண்டனை தருவது.


கருத்துரிமையெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே என்பதை
இனியேனும் சரிவரப் புரிந்துகொண்டால் நல்லது.


Ø