சிறுகதை
ஆளவந்தார் அரண்மனைக் கழிப்பறை!
{23 மார்ச் 2011 - 'உங்கள் நூலகம்' இதழில் வெளியானது]
....................................................................................................................
நாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி நடுத்தர வர்க்கத்தின் கீழ், மேல் தட்டுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இடம். இரு சக்கர வாகனங்களுக்கும், நாற் சக்கர வாகனங்களுக்கும் குறைவில்லை. குடியிருப்புப் பகுதியின் வாயிற்புறத்தில் ஆட்டோக்கள் அணி வகுத்து நிற்கும். அவசரத் தேவைகளுக்கான கடை, கண்ணி, கோயில், கணினி மையம் எல்லாம் உண்டு.
இங்கேதான் இன்று காலை முதலே பரபரப்பாக இருந்தது. ஐந்நூறு ஆண்கள் அவர்களின் நடை யுடை பாவனைக ளைப் பார்த்தாலே யார் ஆண்டை - யார் அடிமை என்பது தெளிவாக விளக்கிவிடும். ஆனால், அடிமை யும் அவனொத்த சகமனிதர்களிடம் தன்னை ஆண்டையாய் பாவனை செய்துகொண்டிருப்பான் - வீடுவீடாகச் சென்றார்கள்.
வீடுவீடாகச் சென்றவர்கள். வெகு இயல்பாக ‘குடும்ப அட்டையின் முதல் பக்க ஜெராக்ஸ்’ பிரதியை வைத்தி ருக்கும்படி ஒவ்வொரு வீட்டிலும் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டை வைத்திருப் பவர்களுக்கு அரிசி தருவார்கள், பருப்பு தருவார்கள், மண்ணெண்ணெய் தருவார்கள் என்று கேள்விப் பட்ட துண்டு. ஆனால், தொலைக்காட்சிப் பெட்டி கூடவா?
அதுவும், ஏற்கனவே, கூடத்தில் நடுநாயகமாக. எல்லா வீடுகளிலும் தொலைக் காட்சிப் பெட்டி தான் ஆரோகணித்திருக்கிறதே. சில வீடுகளில் கூடத்தில் ஒன்றும், அடுப்படியில் அல்லது படுக்கையறையில் ஒன்றுமாய். பிடித்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில் ஏற்பட்ட தீவிர விரோதம் காரணமாய் அக்கா, தங்கையையும், அண்ணனைத் தம்பியும் அரிவாள் மணையில் வெட்டித் தீர்த்துக் கட்டுவது அதிகரித்துக்கொண்டு வருகிறதே யென்பதால் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை. குளியல் அறையி லும், கழிப்பறையிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைச் சுவரில் பதித்து வைக்க முடிந்தவர்கள் பேறு பெற்றவர்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியுமா!
“நம்முடைய இத்தனை பரந்து விரிந்த பகுதி முழுக்க தூய்மையான கழிப்பறையே கிடையாது. காசு கொடுத் தாலும் கிட்டே போக முடியாத அளவு நாற்றம். இதில் பெண்கள் படும் சிரமம் சொல்லித் தீராது.”
“அதற்காக, தொலைக்காட்சிக்குப் பதிலாக வீட்டுக்கொரு கழிப்பறை கட்டித் தரச் சொல்கிறாயா? இதெல்லாம் நடக்கிற காரியமா?”
“ஏன் நடக்காது? இங்கே தரப்படும் நூறு தொலைக்காட்சி களுக்குப் பதிலாக நம் குடியிருப்புப் பகுதிக்குப் பின்பக்கம் அமைந்திருக்கும் குடிசைப் பகுதியில் நல்லதாக நான்கு கழிப்பறைகள் கட்டித் தரலாமே.”
“அவர்களெல்லாம் கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்திருக்கத் தெரியாதவர்கள்.”
“தெரியவில்லையென்றால் கற்றுக் கொடுக்கலாமே!
அடிமட்டத்திலிருப்பவர் களுக்கு அடிப்படை வசதிகளை யும் செய்துதராமல், அது பற்றிய விழிப்புணர்வை யும் அவர்களுக்குத் தராமல் அவர்களை மந்தைகளாக உழலச் செய்வதன் மூலம் தான் நாம் ஆண்டைகளாக, அறவுரை யாளர்களாக விளங்க முடியும்! அது தானே விஷயம்?”
“ஒரு சின்ன விஷயத்திற்கு எதற்கு இத்தனை அலட்டிக் கொள்கிறாய்? உனக்கு வாங்கிக்கொள்ளப் பிடிக்க வில்லையென்றால் உன்னுடைய அட்டைக்குரியதை வாங்கிக்கொண்டு அதை யாருக்காவது ஏழைக்குக் கொடேன். ஆனால், வாங்கிக் கொண்டு விடு.”
“நீ அப்படித்தான் கொடுக்கப் போகிறாயா?”
“அதைக் கேட்க நீ யார்?”
“அப்படியானால், தரப்படுவதை நான் வாங்கிக்கொள்ளத் தான் வேண்டும் என்று சொல்ல நீ யார்?”
“வாங்கிக் கொள்ளாவிட்டால் போயேன். உன் கையெழுத் தைப் போட்டு வேறு யாராவது வாங்கிக் கொண்டு விடு வார்கள். அவ்வளவுதான்.”
சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு எல்லோரும் சாரை சாரையாய் சிற்றெறும்புக் கூட்டமாய் ‘ நியாய விலைக் கடை நோக்கி நகர்ந்து செல்வதைப் பார்க்க எனக்கு உண்மையாகவே நடுக்கமெடுத்தது.
ஒரு கையறுநிலையில் வீட்டினுள் நுழைந்து கூடத்தில் படுத்துக்கொண்டேன். கோபமும், இயலா மையுமாய்க் கண்ணீர் ததும்பி கண்ணோரங்களில் வழிந்தது போலும். சில சிற்றெறும்புகள் என்னைச் சூழ்ந்து நின்று கொண்டு பரிவோடு பார்த்தன.
ஒன்று என்னிடம் நெருங்கி வந்தது. “நீ ஏன் இத்தனை கவலைப்படுகிறாய்? வண்ண வண்ணமான காட்சிகளைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் உனக்குக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வே ஏற்படாது தெரியுமா?”
“இது என்ன கிறுக்குப் பேச்சு? நீ சொல்வதையெல்லாம் நம்ப நான் என்ன முட்டாளா?”
“நான் சொல்வதை நம்பவில்லையென்றால், அதோ அங்கே பார்,” என்று கூறி என்னைப் பார்த்துக் கண்சிமிட் டிச் சிரித்தது அந்தச் சிற்றெறும்பு.
பார்த்தால், அவரவர் வீட்டில் அவரவர் தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரில் மடியில் ஒரு சிறிய தொலைக்காட்சிப் பெட்டியைக் குழந்தை போல் அணைத்த வாறு உட்கார்ந் திருந்தவர்கள். யாருமே நகரவில்லை.
அரைமணி நேரம் ஒரு மணி நேரமல்ல. அன்று முழுவ தும் அப்படித்தான் அமர்ந்திருந்தார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களிலிருந்த உணவுப் பண்டங்களை உட்கொண்டார்கள், அவற்றிலிருந்த சோப்புக் கட்டிக ளைக் கொண்டு ‘ லக்ஸ்’ ’விளம்பர அருவியில் குளித்து முடித்து, போத்தீஸ் விளம்பர உடைகளை உடுத்திக் கொண் டார்கள். அவ்வப்போது தொடர் நாடகங்களில் தாய் மகளுக்கும், மரு மகள் மாமியாருக்கும் கலந்து வைக்கும் நஞ்சு கலந்த காபியை அருந்தி அப்படி யப்படியே மயங்கிச் சரிந்தார்கள்.
“பார், கழிப்பறைக்கு அவசியமேயில்லை!” என்று சுட்டிக் காட்டியது சிற்றெறும்பு.
“இல்லை, இது சாத்தியமில்லை. ஆபத்தானது. அதெப்படி மணிக்கணக்காக ஒருவ ரால் கழிப்பறைக்குச் செல்லாம லிருக்க முடியும்? மயங்கிச் சாய்ந்துவிட்டால் அது அபாயமல்லவா?”
“மனதைக் கட்டுப்படுத்திப் பயிற்சி தரப்படுவது போல் இதற்கும் தொலைக்காட்சி மூலம் தரப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலைமையைக் கணக்கில் கொண்டு, கழிப்பறை கட்டுவதற்கு ஆகும் செலவைக் குறைக்க இந்தப் பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. உனக்குத்தான் எதுவும் தெரியவில்லை. பாவம் நீ!”
“திட்டமா? என்ன திட்டம்?”
“அதோ அங்கே பார்! திரையில் தெரியும் எழுத்துக்களைப் படி,” என்று அவசரப் படுத்தியது சிற்றெறும்பு. சற்றே தாமதித்தாலும் எழுத்துகள் ஓடி மறைந்துவிடுமே. அரைக்கண விளம்பரத்திற்குக் கட்டணம் அரை லட்சமா, ஆறு லட்சமா, அறுபது லட்சமா?
தரையதிர, ஆகாயமதிர பெருத்த ஓசை அந்தச் சின்னப் பெட்டியிலிருந்து வெடித் துக் கிளம்பியது. கூடவே, குறையாடையில் ஒரு பெண் பதாகை யொன்றைச் சிரித்தவாறு விரித்து இரவல் குரலில் பாடினாள்:
“யார் அதிக நேரம் தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரி லேயே அமர்ந்திருக்கிறார்களோ, அவர்கள் நடிகர் ஆளவந்தாரின் அரண்மனை வீட்டுத் தங்கக் கழிப்பறை யில் ஒரு வேளை மலங்கழிக்கலாம்! நழுவ விடாதீர் இந்த அரிய வாய்ப்பை!”


No comments:
Post a Comment