LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, April 24, 2025

நாவினால் சுட்ட வடு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நாவினால் சுட்ட வடு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை
பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி
திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம்
உயிர் துளைத்து உட்புகுந்து வரவாக்கும் ரணம்
வழக்கமாகிவிட்ட பின்னரும் _
வெடித்துமுடித்து வீதியோரம் வீசியெறியப்பட்டிருக்கும்
குருவி வெடிகளைக் காணும்நேரம்
குலைநடுங்கி யதிர்வதுபோல்
அஞ்சி நடுங்கும் மனம் _
இன்னொரு முறை யந்தச் சொல்லைக்
கேட்க நேரும் தருணத்தின் அவலமெண்ணி
அல்லும் பகலும்
அலைக்கழிந்துகொண்டிருக்கும்.

இருந்தவிடத்திலிருந்தே ஒரு ஓட்டப்பந்தயம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இருந்தவிடத்திலிருந்தே

ஒரு ஓட்டப்பந்தயம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல் காலாவதியாகிவிட்ட காலம் இது.
இன்று குட்டையைக் குழப்பவேண்டும்;
அதில் மனிதர்களைப் பிடிக்கவேண்டும்.
இந்தப் போட்டியில் முந்துவோருக்கு
அரங்கின் இருமருங்கிலிருந்தும்
கைத்தட்டலும் சீழ்க்கையொலியும் கிடைத்தபடியேயிருக்கும்.
கேட்கக்கேட்க கால்களில் தாமாகவே வேகம் கூடும்.
முதல் இடத்தைப் பெறுபவருக்கு மேதகு அறிவுசாலிப் பட்டமும்,
மாண்புமிகு மனிதநேயவாதி யென்ற பாராட்டும் நற்சான்றிதழும் வழங்கப்படும்.
பொற்கிழி நேரடியாகத் தரப்படாவிட்டாலும்
ப்ளேனில் நான்கைந்து நாடுகளுக்குச் சென்று வர ஏற்பாடு செய்யப்படும்.
இன்னுமென்ன?
இதோ இடையறாத இந்தப் போட்டியில்
இன்றே பங்கெடுத்துக்கொள்வீர்;
பரிசுகளை வெல்வீர்.
இப்போதே வாங்கிடுவீர் வெண்-மார்க் பனியன் லுங்கிகள்.
இன்றைய நிகழ்ச்சிகளனைத்தையும் வழங்குவோர்
ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் பீரங்கிகள்.

அவரவர் அந்தரங்கம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் அந்தரங்கம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

காதல் எப்படி நிகழும்
காதலில் என்ன நிகழுமென்று
காதலிப்பவர்களுக்கும் தெரியும்
காதலைக் காதலிப்பவர்களுக்கும் தெரியும்
இருந்தும்
குறுகுறுவென்று பார்த்தாரா
குறும்புப்பேச்சுகள் பேசினாரா
கட்டியணைத்தாரா
கன்னத்தில் முத்தமிட்டாரா
கட்டுக்கட்டான கடிதங்களில் கலவிசெய்தாரா
என்று கேட்டுக்கொண்டே போன தோழியை
குறுக்கிட்டுத் தடுத்தவள்
”அந்தரங்கம் புனிதமானது” என்றாள்.
காலங்கடந் தொரு நாள்
தன் காதலன்
குறுகுறுவென்று பார்த்ததை
குறும்புப்பேச்சுகள் பேசியதை
கட்டியணைத்தை
கன்னத்தில் முத்தமிட்டதை
கட்டுக்கட்டான கடிதங்களில்
கலவிசெய்ததை
கட்டுரைகளாக
நினைவுக்குறிப்புகளாக
Autofictionகளாக
கிடைத்தவெளிகளிலெல்லாம்
அம்பலமேற்றத் தொடங்கியவளைப் பார்த்து
அப்படியானால் இப்போது என் புனிதம் கெட்டுப்போய்விட்டதாவென
அப்பிராணியாய்க் கேட்கிறது
அந்தரங்கம்.

புத்தகங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புத்தகங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு புத்தகத்திடம் நம் பிரியத்தை எப்படிச் சொல்வது?
மயிலிறகைப் போல் மிருதுவாய்த் தடவிக்கொடுக்கலாம்.
சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறு முத்தம் தரலாம்.
படுக்கையில் அருகில் வைத்துக்கொண்டு தூங்கலாம்.
போகுமிடமெல்லாம் அதையொரு குழந்தைபோல் கையிலேந்திக்கொண்டிருக்கலாம்.....
புரியவைக்கமுடியுமோ புத்தகத்திடம் நம் அன்பை?
புத்தகம் உயிருள்ளதா அற்றதா?
தனக்குள் காலத்தையும் காலாதீதத்தையும் ஒருங்கே உள்ளடக்கியிருக்கும்
புத்தகத்தின் உயிர் ஒன்றல்ல, பலப்பல
என்றொரு அசரீரி ஒலிப்பது என்னுள்ளிருந்தா புத்தகத்திலிருந்தா?
வினாக்களுக்கு பதில்களையும் பதில்வினாக்களையும்
வரிவரியாய்ப் பொதிந்துதந்தவாறு _
”விலைகொடுத்துவாங்கி யென்னைப் படி
வாங்கமுடியாதவர்களுக்குப் படிக்கக்கொடு
வெறும் தாள்களிலிருந்து என்னை படைப்புநிலைக்கு உயர்த்திய
கர்த்தாவைக் கொண்டாடு.
என்னைப் படித்து சிறிதேனும் உன் மனது
திறந்துகொண்டால் போதும்
வசமாகிவிடும் உன் பிரியமெல்லாம் எனக்கு”,
என்றபடி சிரிக்கும் புத்தகத்தின்
இல்லாத கன்னத்தில் விழும் குழியை
என்றும்போல் இன்றும் அதிசயமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும் வாசக மனம்
தீராக்காதலில் வேர்விட்டபடி….

நன்றிக்குரியவர்கள்…… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நன்றிக்குரியவர்கள்……

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஆளரவமற்று நீண்டுகொண்டிருந்த தெருக்களும் சாலைகளும்
பாலைவனமாய்க் காய்ந்திருக்க
ஆங்காங்கே நிரம்பிவழிந்துகொண்டிருந்த குப்பைத்தொட்டிகளைத்
துழாவிக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்களின் கைகளில்
மரகத மாணிக்க வைர வைடூரியங்கள் கிடைக்கச் செய்ய
வக்கில்லாத என் கவிதைகள்
வெளியே வர வெட்கப்பட்டு
மனதின் குரல்வளைக்குள் மூச்சுத்திணறிக் கிடந்தன.
தெருவோரத் திருப்பத்தில் சோர்ந்து அமர்ந்திருந்த பெரியவரிடம் _
பெரிதாக எதையும் தரமுடியாத என்னை மனதாரச் சபித்தவாறே _
தண்ணீர்புட்டியையும் மாரி பிஸ்கெட் பாக்கெட்டையும்
பத்து ரூபாயையும் நீட்டினேன்.
நன்றி கூறி வாங்கிக்கொண்டதோடு
’பத்தாவது வரை படித்திருக்கேம்மா – படிக்க ஏதாவது புத்தகம் தரமுடியுமா?’
என்று கேட்ட மாத்திரத்தில்
என்னை குபேரனாக்கிவிட்ட வள்ளன்மைக்கு
என்னவென்று நன்றி சொல்வது!

அப்பால்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //2020 APRIL 19 - மீள்பதிவு/

அப்பால்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர்.
’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர்.
கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார் பார்’ என்பார் சிலர்.
’கணக்கற்றோரின் கனவுகளையும் கவலைகளையும்
சுமந்து சுமந்து களைத்துப்போயிருப்பார்
கொஞ்சம் களைப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று
கதவடைத்திருக்கும் கோயிலின் முன் நின்று
கன்னத்தில் போட்டுக்கொண்டே வாஞ்சையோடுசொல்லிக்கொள்வார் சிலர்.
’Collective Spirit இன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள கிடைத்த அரிய பெரிய வாய்ப்பு’
என்பார் சிலர்.
’விலங்குகளுக்கும் பறவைகளுக்குமான
விடுமுறை’ யென்பார் சிலர்.
’மனிதனின் தான் என்ற அகங்காரம் குறையவும்
திமிர் அடங்கவும்
தீ நுண்மி உதவினால் போதும்’ என்பார் சிலர்.
’உதவுமா’ என்பார் சிலர்;
’போதுமா’ என்பார் சிலர்.
’வீதிகளெல்லாம் எத்தனை சுத்தமாயிருக்கின்றன’
என்பார் சிலர்.
’மீதி நாட்களிலும் இப்படி வைத்திருந்தால் என்ன’
என்று காட்டமாய் விமர்சிப்பார் சிலர்.
முகத்திற்கான 'மாஸ்க்' தெருவின் அந்த முனைக் கடையில் பதினைந்து ரூபாயும்
இந்த முனையில் முப்பது ரூபாயும் விற்பதைப் பார்த்து
'அது அத்தியாவசியப் பொருளா இல்லையாவென
யாரிடம் கேட்க' என்று அலுத்துக்கொள்வார் சிலர்.
’இப்பொழுது உணவுக்கு வழியேயில்லையே’
என்று அழுதிருப்பார் சிலர்.
'இப்போது கிடைக்கும் உணவு எப்போதும் கிடைத்தால் எத்தனை நன்றாயிருக்கும்'
என்று நினைத்துக்கொள்வார் சிலர்.
இன்னும் ஒரு வாரத்தில் கடையைத் திறந்துவிட லாம் என்று நிம்மதிப் பெருமூச்செறிவார் சிலர்.
திறந்தபின் எதிர்கொள்ளவேண்டியவைகளை எண்ணி வருந்தியிருப்பார் சிலர்.
’இந்த கோர நாட்களில் கவிதையெழுதுதல்
சரியா தவறா’ என்று கேள்வியெழுப்புவார் சிலர்;
குற்றவுணர்வுகொள்வார் சிலர்..
’கட்டாயமாக எழுதவேண்டும்’ என்று
உறுதியெடுத்துக்கொள்வார் சிலர்…..
மனிதவோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் தீநுண்மி.
அவர் மனவோட்டப் புதிர்வட்டப்பாதைகள் என்றேனும் தட்டுப்படுமோ அதற்கு?.

’ன்’, ‘ள்’ விகுதிக்கப்பாலான உண்மைக்கவியின் மண்வாழ்க்கை -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //2021, APRIL 21 - மீள்பதிவு//

’ன்’, ‘ள்’ விகுதிக்கப்பாலான
உண்மைக்கவியின் மண்வாழ்க்கை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*சமர்ப்பணம்: சக கவி யவனிகா ஸ்ரீராமுக்கு)

தனக்கிருக்கும் ஒரே வயிற்றை
இரு பாகங்களாக வகுத்துக்கொண்ட கவி
அவற்றிலொன்றை
நேசத்துக்குரிய நிறைய நிறைய வார்த்தைகளால்
நிரப்பிக்கொண்டிருந்தான்.

கும்பியின் ஒரு பாதி பசிச்சூடு தாளாமல்
கொதித்தெரியும்போதெல்லாம்
மறுபாதியிலிருக்கும் சொற்கள் நீராகாரமாகும்;

நிறைவான அறுசுவை உணவுமாகும்.
தனக்கிருக்கும் ஒரேயொரு தலையை
இருபாகங்களாக வகுத்துக்கொண்ட கவி
ஒரு பாதி உச்சிமண்டையில் சூரியன்
செங்குத்தாய் வந்திறங்கி
அருவப்பொத்தல்களிடும்போதெல்லாம்
மறுபாதி சிரசில்
மாயத்தொப்பியொன்றை தரித்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான்.

எரிக்கும் சூரியக்கதிர்கள் அந்தத் தொப்பியில்
பட்டுச்சிதறி
கவி நிற்கும் பக்கங்களிலெல்லாம்
சிற்றருவிகளாகும்!

தனக்கிருக்கும் ஒரே நாசியின் இரு துவாரங்களில்
இருவேறு நாற்றங்களை
ஒருங்கே உள்வாங்கவும்
பழகிக்கொண்டுவிட்ட கவி _

தனக்கிருக்கும் ஒரே மனதை
இரு பாகங்களாக வகுத்துக்கொள்ளும்
வழியறியாமல் -
அரசியல்வாதியோடும் திரைக்கலைஞர்களோடும்
வாய்கொள்ளா சிரிப்புடன் நின்றுநின்று
வெளிச்சம் தம்மீது வாகாய்ப் படரவைத்து
வரகவியாய்த் தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும்
எத்தனமின்றி -
பித்தாய் பிறைசூடி
எத்தாலும் கவிதைகளே நிறைதுணையாகத்
தன்னந்தனியாய்
சென்றுகொண்டிருக்கும் வழியெல்லாம்
அவன் _

(‘ன்’, ‘ள்’ விகுதியை இங்கே
முன்னிலைப்படுத்துவோரை
என்ன சொல்ல….)

எழுதிய
வாசிக்கப் பழகிய
கவிதைவரிகள்
அவனுக்காய்
சிவப்புக்கம்பளம் விரித்தபடி....


மலையும் மலைமுழுங்கிகளும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

மலையும் மலைமுழுங்கிகளும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

................................................................................................................................................................

 *2016இல் எழுதிய கவிதைகள் என்று நினைக்கிறேன். நான் மிகவும் மதிக்கும் கவிஞரை யாரோ கொச்சையாக மதிப்பழித்துக் கருத்துரைத்திருந்தற்காக வருந்தி அந்தத் தாக்கத்தில் எழுதிய கவிதைகள் என்று நினைக்கிறேன். எல்லா நேரங்களிலும் எல்லோருடைய நியாயமற்ற எதிர்வினைகளுக்கும் எதிர் வினைகள் புரிந்துகொண்டேயிருக்க முடிவதில்லை. அவர்களுக்கு நம்முடைய எதிர் வினைகள் நியாயமற்றவையாகத் தோன்றக்கூடும். எனவே, இம்மாதிரி சமயங்களில் கவிதையெழுதுவதே வடிகாலாய்; வலிநிவாரணமாய்.

..........................................................................................................................................................................

1
யாருமே நுழையமுடியாத அடர்ப்பெருங்காட்டிற்கப்பால்
ஆகாயமளாவ
அடிக்கு அடியிருந்த வழுக்குப்பாறைகளெங்கும்
படர்ந்திருந்தன பலவகை முட்கள்.
கைக்காசை செலவழித்து,
மெய்வருத்தம் பாராதொழித்து
உயிரைப் பணயம் வைத்து
கயிறு அறுந்துவிழுந்தபோதெல்லாம்
காற்றை இறுகப்பிடித்துக்கொண்டு
உள்ளங்கைகளெங்கும் சிராய்த்துக்
குருதி பெருக
உடலின் அயர்வில் உயிர் மயங்க
மலையை வாகாய் சீரமைத்ததோடு
படிக்கட்டுகளையும் செதுக்கி முடித்தான்.
ஆர்வமாய் ஏறியவர்கள்
சிகரம் தொட்ட பின் சுற்றிலும் பார்த்தால்
காணக்கிடைத்ததெல்லாம் சொர்க்கம்!
நறுமணப்பூக்களும்
மூலிகை மரங்களும்
அதியமான் நெல்லிக்கனிகளாய்க் கிடந்தன!
அரிய புள்ளினங்கள்!
பரவும் தரிசனப் பேரொளி!
மாற்றான் சிந்திய வியர்வையில்
முன்னேறுவது எப்படி என்று
முப்பதே நாட்களில் கற்றுக்கொள்வதில்
கைதேர்ந்த சிலர்
விறுவிறுவென ஏறத்தொடங்கினார்கள்.
எல்லாவற்றையும் செல்ஃபியில்
சிக்கவைத்ததோடு
அருமருந்து மூலிகைகளையும்
அள்ளித்திணித்துக்கொண்ட பின்
கடைவிரிக்கத் தோதான இடத்தைக்
கச்சிதமாய்க் கணக்குப் பண்ணியவாறே
கீழிறங்குகையில்
காலந்தாக்கி சற்றே உடைந்திருந்த
ஒரு படிக்கட்டு முனையை
கவனமாய்ப் படம்பிடித்துக்கொண்டார்கள்.
கடைசிப்படியில் காலைவைத்ததுமே
கூவத்தொடங்கினார்கள் –
கேவலம் ஒரு படிக்கட்டைக் கூட
சரியாகக் கட்டத் தெரியவில்லை யென்று.
இன்னொருவன் மாங்குமாங்கென்று உழைத்து
முதுகுடையத் தாங்கிப்பிடித்து
நிமிர்த்தி நிற்கவைத்த மலையைத்
தமக்கு வெள்ளிக்காசு தரும் சுற்றுலாத்தலமாக
மாற்றிக்கொண்டதோடு நில்லாமல்
மலையபிமானத்தோடு நடந்துகொண்டவனை
வசைபாடும் வித்தகம்
சில மெத்தப்படித்த மேல்தாவிகளுக்கே உரிய
’ஹை_ஃபை’ வர்த்தகம்.
அதுபற்றியும் பேசுமோ என்றேனும்
அவர்களின் ஏதாவதொரு ‘பென்னம்பெரிய’ புத்தகம்….?

2
எத்தனை நாட்களுக்குத்தான்
எட்டியுதைத்துக் கொண்டேயிருப்பீர்கள்
ஏறிவந்த ஏணியை?
நூலேணியாக இருந்திருப்பின்
கால்சிக்கித் தலைகீழாகி
நீங்கள் உருண்டுபுரண்டிருக்கக்கூடும்.
மரத்தாலானது என்றால்
நீங்கள் உதைக்கும் உதைக்கு
அதன் கட்டைகள் சில உடைந்தும்
கயிறு பிரிந்தும்
தெறித்துவிழுந்து
கடைசிப் படியில் நீங்கள்
கிடக்கநேர்ந்திருக்கும் இதற்குள்.
ஆனால், வெறும் ஏணியல்ல அது –
மலை.
அற்பர்களின் காணெல்லைக்கப்பாலிருக்கிறது
அதன் தலை.
காசின் சுவடறியாது அதன் விலை
என்பதே என்றுமான உண்மைநிலை.
இது வெறும் எதுகை-மோனை யில்லை.
அந்தரவெளியே அதன் தஞ்சமாக –
‘கிருஷ்ணகல்யாண’க் கச்சேரிகளுக்கும்
பொச்சரிப்புகளுக்கும்.
என்றுமிருந்ததில்லை பஞ்சம்.
உங்களால் உய்த்துணரவியலா
ஓராயிரம் சிலைகள்
அதனுள்
உயிர்த்தெழக் காத்திருக்கின்றன.
எத்தனைதான் எட்டியுதைத்தாலும்
முட்டிமோதினாலும்
நொறுங்கிமுறியப்போவது
உங்கள் எலும்புகளே
என்பதைக்கூட உணரமுடியாத அளவு
அத்தனை வீராதிவீரர்களா நீங்கள்?
கோராமையாக இருக்கிறது.
எட்டியுதைக்க மட்டுமே பணிக்கும்
உங்கள் கால்களை
நீங்கள் உண்மையிலேயே மதிப்பவராயிருந்தால்
கட்டப்பாருங்கள் அவற்றின் உதவியோடு _
குட்டிக் குன்றையாவது.