பெண்ணின் வயதும் பொன்னியின் செல்வன் படமும்.....
- லதா ராமகிருஷ்ணன்
’மௌனம் சம்மதம்’ என்ற திரைப்படம்தான் நான் தியேட்டருக்குச் சென்று பார்த்த கடைசிப் படம் என்று நினைக்கிறேன். மம்முட்டிக்காக இமயமலையின் உச்சிக்கு மேலாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டேகூட எந்தப் படத்தையும் பார்க்கும் முனைப்பு ஒரு காலத்தில் இருந்தது.
எத்தனை அறிவார்த்தமாகப் படங்களைப் பற்றிப் பேசினா லும் எள்ளிநகையாடினாலும் தியேட்டருக்குள் சென்று அமர்ந்துவிட்டால் பின் அந்தப் பெரிய திரையில் யாராவது அழுதால் என்னால் எப்படி அழாமலிருக்க முடியும்?!
எழுத்தோ, சினிமாவோ - வாசிப்பவை, காண்பவை எல்லாமே ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு குழுவின் கற்பனை மட்டுமே என்ற எண்ணமேற்பட்டுவிட்டால் பின் அவற்றிலிருந்து மனம் ஒருவிதத்தில் அந்நியப்பட்டு விடுகிறது.
பின், தொலைக்காட்சிப்பெட்டி வந்தது. சின்னத்திரையில் நடக்கும் கதையோடும், காட்சிகளோடும் ஒன்றாமலேயே அதை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பது பழகி விட்டது.
வெகுநாட்களுக்குப் பிறகு 'தெனாலி' படம் தியேட்டருக் குச் சென்று பார்த்தபோது அதில் மனிதர்களின் கனபரிமா ணங்கள் மிகமிகப் பெரிதாய் தலையை, கண்களைக் கிறுகிறுக்கச் செய்தன.
அதுவும் கதாநாயகி ஜோதிகா அண்ணனுடன் செல்லும் போது அணிந்திருக்கும் அதி குட்டைப் பாவாடை...... அதுநாள்வரை காதலனுடன் தான் கதாநாயகி அப்படி அணிந்துகொண்டு நடன மாடுவாள். அல்லது, காபரே நடனக்காரி அப்படியொரு ஆடையில் ஆடுவார். ஏதோ வொரு வகையில் அண்ணனுடனான அந்தக் குட்டைப் பாவாடைக்காரத் தங்கச்சியைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியாயிருந்தது.
பின், வீட்டில் ஆங்கில சேனல்களில் சிலகாலம் சில படங்கள். அதே படங்கள் பல மாதங்க ளுக்குத் திரும்பத் திரும்பக் காட்டப்படுமாத லால் அவற்றையும் சீரியல்கள் போலப் பார்த்துக்கொண்டிருக்கலாம். DA VINCI CODE, ANGELS AND DEMONS, THE ORIGINAL SIN, THE SCENT OF A WOMAN, THE DEVIL'S ADVOCATE - இப்படி சில படங்கள்.
இப்போதெல்லாம் இரண்டு மூன்று மணி நேரம்தொடர்ந்து எந்தப் படத்தையும் பார்க்க முடிவதில்லை. அலுப்புத் தட்டிவிடுகிறது. நிறைய காட்சிகளை முன்னூகித்துவிட முடிகிறது. நடப்பதைக் காட்டுகிறோம் என்ற பெயரில் மிகக் கொடூரமான காட்சிகள் காட்டப்படுகின்றன. பார்க்க முடிவதில்லை.
இரண்டொரு வருடங்களுக்கு முன்பு பார்த்த கவிஞர் லீனா மணிமேகலையின் படைப்பு ’மாடத்தி’ மனதுக்கு நிறைவையளித்தது.
இப்போது அதிகம் பேசப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்கவில்லை. அதைப் பற்றி நிறையப் பேசப்பட்டுவிட்டன; பேசப் பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆனால், எனக்கு இதில் படத்தைப் பார்க்கா மலே நிறைவளித்த அம்சம் - அதில் வரும் இரண்டு கதாநாயகிகளின் வயது. அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்குக் கதாநாயகி அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது.
கதையில் வரும் பிரதான பெண் பாத்திரத்தின் நடுத்தரவயதைப் பிரதானமாகக் கொண்ட கதைகள்,அல்லது பெண்ணின் கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்ட கதைகள் அத்தகைய கதாநாயகிகளைப் படத்தில் நடிக்கவைப்பதுபோல் அல்லாமல் (அத்தகைய படங்களிலும் அதிகபட்சமாக கதையில் வரும் பிரதான பெண் பாத்திரத்தின் வயது 36 வயதி னிலே என்றுதான் அதிகபட்சமாக இருக்கும்!) இயல்பாக 40 வயதைக் கடந்த நடிகைகள் கதாநாயகிகளாக இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகத் தோன்றுகிறது.
கல்கி கதையில் அந்தப் பாத்திரங்கள் நடுத்தர வயதுக்காரர்களா தெரியவில்லை. ஆனாலும், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை (அல்லது, இந்திய சினிமா என்றே சொல்லலாமா?) இது மிக மிக அரிதான விஷயமே.
No comments:
Post a Comment