என் அம்மா
சுனாமியாகப் பொங்காத சாகரம்
சூறாவளியாகாத காற்று
சுட்டுப்பொசுக்காத நெருப்பு
சுக்குநூறாகாத திடம்
சடசடவென்று முறிந்துவிடாத மரம்
கையில் தம்பிடிக் காசில்லாத நேரம்
என் அருகில்
கதவை விரியத்திறந்திருக்கும் சிறுசேமிப்பு வங்கி
எரியுங் குளிரில் போர்த்தக் கிடைத்த
அரிய மேலங்கி
இரவில் காலந்தாழ்த்தி படுக்கையில் தலைசாய்த்து
’பச்சை புட்டி அமிர்தாஞ்சனை நான்
நெற்றியில் தேய்த்துக் கொள்வதை
எனக்குத் தெரியாமல் கண் திறந்து
கவலையோடு பார்க்கும்
எதிர்பார்ப்பற்ற பரிவு
என்னவென்று சொல்லவியலா அன்பு
சுருங்கிவரும் உடலுக்குள் சதாசர்வகாலமும்
சுழன்றுபெருகியோடிக்கொண்டிருக்கும்
ஜீவநதி
கருகாத பூ
ஒண்டுக்குடித்தன வீடோ
இன்றுள்ள இரண்டறைகள் கொண்ட
வாடகைக் குடியிருப்போ _
அரண்மனை, அரியணை, அரசவை,
மணிமகுடப் பிரக்ஞையற்று
பிரபஞ்சவெளியில் மிதக்கும் ஒரு
பறவைச் சிறகிழை
தனதேயான வானவில் நிறங்களையெல்லாம்
வாரி வழங்கும் பட்டாம்பூச்சி்
தொட்டுவிடலாகும் தொடுவானம்
என்றும் என் கவிதையில்
எட்டாச் சொல்……
(*சமர்ப்பணம்: என் அம்மா பாக்யலட்சுமிக்கு)
No comments:
Post a Comment