சொல்லடி சிவசக்தி
*************************
குக்குறுங்கவிதைக்கதைகள் 6 - 10
ரிஷி
*
6.தன்மானம்
தளர்நடை யிட்டுக்கொண்டிருக்கும்
குழந்தையாய் பாவித்து
தடுக்கிவிழுந்துவிடலாகாது என்று
தாங்கிப்பிடிக்க வந்தவளை
தள்ளிப்போகச் சொன்னவர்
'இதைவிட
திமிராய் நடக்கிறேன் என்று
வசைபாடுபவர்களே
இசைவானவரெனக்கு’ என்றார்.
7. அடிப்படைவாதம்
…………………………………….....................
பாரதியெனும் கவிப்பெருவெளியை
அடிப்படைவாதமாகக் குறுக்கிவிடலாகாது என்று சொல்லப்புகாமல்
உயிருக்கு பயந்தும்
படைப்பியக்கம் அழியாமல் பாதுகாத்துக்கொள்ளவும்
கவிஞர் அடிப்படைவாதத்தை முன்வைத்தாரென
காரணகாரியங்களை
மனோதத்துவத் துறைக் குறிச்சொற்களைக் கொண்டு
விளக்க முற்பட்டதைக் கேட்டு
அறிவுத்துறையிலும், இலக்கியத்துறையிலும்கூட
அடிப்படைவாதிகள் இருப்பதை யறிந்து
மௌனமாய் அங்கிருந்து வெளியேறினார்கள் மாணாக்கர்கள்.
8. சூது
அதிக அதிகமாய் இன்று விற்பனையாகிக்கொண்டிருப்பது
அதில் ராஜா ராணி மந்திரி இளவரசன் என எல்லோரும்
அன்றைய அரசியல் தலைவர்கள்.
அடங்கா ஆர்வத்தோடு
காசுவைத்தும் வைக்காமலும்
டயமண்ட் ஆர்ட்டின் இஸ்பேடு, க்ளாவர்
எல்லாவற்றிலும்
ACEம்
வேண்டாதவர்களை வெட்டிவீழ்த்தவும்
வேண்டியவர்களைக்கொண்டு வெற்றிபெற்றும்
வேண்டியவர் வேண்டாதவர் வேண்டும்போது வேண்டியவண்ணம் மாறி மாறி வந்துவிழும்படி
சீட்டுக்குலுக்குவதெப்படி என்று
கவனமாய் அவதானித்தபடி
விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்
அறிவுசாலிகளாய் நடுநிலையாளர்களாய் அறியப்படுபவர்களும்
தம்மைத்தாம் ’ஜோக்கரா’க பாவித்து.
9. மதம் பிடித்தவர்களும்
பிடிக்காதவர்களும்
முழங்கிக்கொண்டிருப்பவர்
’மதப்பற்றுக்கும் மதவெறிக்கும்’ வித்தியாசமுண்டு
என்றார்.
'மதம் பிடித்தவருக்கும் மதம் பிடித்தவருக்கும் கூடத்தான்'
என்று முணுமுணுத்துக்கொண்டார் வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர்.
செவிமடுத்துவிட்ட பேச்சாளர் சீற்றத்தோடு
முறைத்துப் பார்த்து
’அரைகுறை அறிவில் கருத்துரைக்கிறாய்
அற்பப்பதரே
துணிவிருந்தால் உரக்கச் சொல்’ என்றார்.
தவறாய் ஏதும் சொல்லவில்லையே என்று
தான் சொன்னதை
திரும்பவும் உரக்கச் சொன்ன பார்வையாளர்
அவையோரால் முற்றுகையிடப்பட்டு
அங்கிருந்து குண்டுகட்டாய் அகற்றப்பட்டார்.
10. புத்துயிர்ப்பு
படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள்
என்று பரிந்து பேசினால்
புரிந்துகொள்ளாமல் அறிவுகெட்டதனமாக
எதிர்வினையாற்றுகிறீர்களே’ என்கிறவர்
என்றேனும் கேட்கக்கூடும்
எங்குமாய் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் அந்த அசரீரியை:
”இறப்பவருக்கேயாகுமாம் RESURRECTION”
No comments:
Post a Comment