இப்படியும் சில கலகக்காரர்கள்
'நான் சொல்வதெல்லாம் உண்மை
பிறர் சொல்வதெல்லாம் பச்சைப்பொய்
என்பது உட்குறிப்பாக.
ஊறுகாயை ஊமத்தம்பூ என்று
ஒருபோதும் சொல்லேன் என்கிறார்.
இதில் ஊறுகாய் புகழப்படுகிறதா
இகழப்படுகிறதா என்பது
ஊமத்தம்பூவைப் பார்த்திருந்தால் மட்டும் புரிந்துவிடப்போகிறதா என்ன?
பொழுது விடிந்ததிலிருந்து இலக்கிய
சமூக வெளிகளில்
'இப்படியுமப்படியும் நகராமுடியாத அளவு வேலையோவேலை
அதற்காக இதைச் சொல்லாமலிருக்க முடியுமா
போ போ துண்டைக் காணோம் –
துணியைக் காணோம் என்று திரும்பிப்போ '
என்று கனஜோராக கர்ஜிக்கிறார்.
கைத்தட்டல்கள் கேட்டதாக
அவருக்குத் தோன்றுவது இயல்புதானே.
’என்னைக் கூடத்தான் யார்யாரெல்லாமோ
குத்தகைக்கு எடுத்திருப்பதாகச்
சொல்லிக்கொள் கிறார்கள்’
என்று குறும்பாய் கண்சிமிட்டும் வானத்தைக் குட்டலாமென்றால்
அது எட்டமுடியாத உயரத்திலிருக்கிறதே
என்று அவருக்குக் கோபம்கோபமாக வருகிறது.
அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டவர்களெனக்
கொண்டு
Sponsorகளின் அரசியலை, அடாவடித்தனங்களை
கண்டுங்காணாதிருப்பதே
அறச்சீற்றமாகப் பழகியவர்
நான் எனும் பிம்பத்தை விசுவரூபமாகக்
கட்டியெழுப்பிக் கொண்டே
சிலைகளின் உயரத்தைக் கண்டிக்கத் தவறுவதேயில்லை!
No comments:
Post a Comment