அடிவருடிகள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவர் சொன்னார் அப்படி
இவர் சொன்னார் இப்படி
எப்படி சொல்லியிருக்கிறார் பார்த்தாயா
என்னமாய் சுட்டிக்காட்டியிருக்கிறார் கேட்டாயா
கேட்பாயா மாட்டாயா
கேட்டால் உய்வாய்
கேட்காவிட்டால் உன்னுடையது பொய்வாய்
என்று சந்நதம் வந்தாற்போல்
நாலாந்தர விளம்பரப் பாடலாய்
ஆலாய்ப் பறந்தபடி
இன்னுமின்னுமாய் ’ஜய்ஞ்ஜக்’ தாளம் தட்டிக்கொண்டேயிருந்தவரிடம்
Silly’ ஆக இருந்தாலும்
பரவாயில்லை
சுயமாய் உங்களுக்கே ஏதாவது தோன்றி
நீங்களாக ஏதாவது சொல்லும் நாளில்
சொல்லியனுப்புங்கள்
சாக்லேட் வாங்கி வந்து நான் செவிமடுக்கிறேன்
சண்டைபிடிக்கிறேன்
அல்லது சிலாகிக்கிறேன்
என்று சுருக்கமாக விடைபெற்றுக்கொண்டு
என் வழியே நடக்க ஆரம்பிக்கிறேன்
என் சீடரும் குருவுமாகிய நான்.
No comments:
Post a Comment