LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, January 16, 2016

பொருளதிகாரம் - _ 1 _ ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

பொருளதிகாரம் - 1

ரிஷி



கத்திக் கத்திக் களைத்த தொண்டைக்குள்

ஒரு கோலி சோடா புட்டியை ஊற்றிக்கொண்டவர்

திரும்பவும் பெருங்குரலெடுத்துப் பட்டியலிடத்

 தொடங்கினார்-


கோலி சோடாவின் கேடுகள் பற்றி;

தன் பேச்சைக் கேட்காமல் கோலி சோடாவைக் 

குடித்துக்கொண்டிருக்கும்

படித்த முட்டாள்களைப் பற்றி.


புட்டிக்குள்ளிருக்கும் கோலிகுண்டை 

சிறைப்பிடித்திருப்பது

சித்திரவதை, அநியாயம் என்று 

சுட்டிக்காட்டியபடியே

ஒரு ‘லிம்க்கா’வை வாயில் விட்டுக்கொண்டு

அடுத்த ஒலிவாங்கியிடம் சென்றார்

அந்தப் பெட்டிக்கடைக்காரருக்குப் பணம் 

தராமலே.


மினரல் வாட்டர் புட்டி தயாராய் மேஜைமீது 

வைக்கப்பட்டிருக்க

ஜனரஞ்ஜகத் திரைப்படக் கலைஞர்கள்

மேடையில் வரிசையாய் வீற்றிருக்க

மாற்று இலக்கியத்தின் தேவை குறித்து மிக நீண்ட

உரையாற்றி

மற்ற பேச்சாளர்களின் நேரத்தை அபகரித்துக் கொண்டவர்

காலம் பொன்னானது என்று கைக்கடிகாரத்தைப்
 பார்த்தபடி கூறினார்;


முத்தாய்ப்பாய் எத்தாலும் பேணுவோம்

சமத்துவம் எனச் சொல்லி

அரங்கிலிருந்து வெளியே சென்றார்

அவருடைய கைப்பெட்டியைத் தூக்கமாட்டாமல் 

தூக்கியபடி

ஒரு குழந்தைத் தொழிலாளி பின்தொடர


அடுத்து,

இன்னொரு கோட்-சூட் போட்டுக்கொண்டு

இந்தியக் கலாச்சாரம் பற்றி உரையாற்றத் 

தொடங்கினார்.

தமிழை வாழவைக்கவேண்டும் என்றார்

அந்த மொழிக்கே உரிய தனிச்சிறப்பான
ழகரத்தைப்

பிழையாக உச்சரித்து.

எளிமையாக வாழவேண்டும் என்றார்;

பழம்பெருமை போற்ற வேண்டும் என்றார்.

இடையிடையே ’கார்ப்பரேட்’ஐ வசைபாடி முடித்த

பின்
இரவு காக்டேய்ல் பார்ட்டிக்குக் கிளம்பிச் சென்றார்

புதிதாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி

செய்யப்பட்டிருந்த சொகுசுக் காரில்


[*17 ஜனவரி 2016 திண்ணை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது]

No comments:

Post a Comment