அகாலப்புள்ளிகள் மேலாய் ஒரு பயணம்!
‘ரிஷி’
(சிற்றிதழ் வெளியில் பல் பரிமாணங்களில் தொடர்ச்சியாக இயங்கிவரும் நண்பர் சி.மோகனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. கவிஞர் ஷங்கர ராம சுப்பிரமணியன், யவனிகா ஸ்ரீராம், யூமா வாசுகி, யவனிகா ஸ்ரீராம் நான் இன்னும் சிலர் மோகன் குறித்து உரையாற்றி னோம். அவ்வமயம் நான் வாசித்த கவிதை இது.
சி.மோகனுடைய ஏற்புரை http://tamilsnow.com/?p=69782 இணையதளத்தில் காணொளி யாக இடம்பெற்றுள்ளது.
ஆறிலிருந்து அறுபதுக்கு மேலான பருவங்களின் அகாலப் புள்ளிகள் மேல்
படர் அடர் பாசிகளின் மீதாய் காலாற நடைபழகிக்கொண்டிருக்கிறாய்…
பயணத்தின் சுகம் கண்டுவிட்டால் பின் கல்லென்ன, முள்ளென்ன!
உன் பார்வைப் பரப்பெங்கும் எல்லையற்று விரிந்துகிடக்கும்
கண்ணுக் கெட்டாத் தொலைவின் வர்ணஜாலக் குறியீடுகள்!
அலைபாய்வே நிறைவமைதியான மனமும் அன்பே குணமுமாய்
இன்சொல்லே எந்நாளும் உன்னிலிருந்து கிளம்பும் பாங்கில்
தளும்பும் சிநேகிதம்.
ஒரு அமரகாவியப் புகைப்படத்தில் உன்னோடு தோள்சேர்த்து நிற்கும்
என்னருமைக் கவி ஷங்கர ராம சுப்ரமணியனின் கண்ணின் ஒளி காண
என்ன தவம் செய்தேனோ?!
மாற்றிதழ்க்காரர்களுக்கெல்லாம் உன் பெயர் முத்திரை வாசகம்!
உனக்கு நீயே வழங்கியவாறிருக்கும் வாசிப்பனுபவம்
உன்னால் எங்களுக்கு வாய்க்கும் வரமாகும்!
மனதை மயிலிறகால் வருடித்தரும் உன் குரல்!
சத்தமிடாமல் எனில் ஒருபோதும் சமரசம் செய்யாமல்
இயங்கிக்கொண்டிருக்கிறது
இன்றளவும் பழுதடையா உன் எழுதுகோல்!
முழுமையென்பதும் பின்னமே என்றுணர்ந்தவாறு
உன் வழியேகுகிறாய்
உடன் வருபவர்களை அரவணைத்தபடி.
நேற்றும் இன்றும் நாளையுமாய் தன் பாட்டில்
நம்மை வாழவைத்திருக்கும் காற்றுக்கு
என்னவென்று நன்றிசொல்வது என்று புரியாமல்
எப்பொழுதும் போல்
அரைகுறையாய் தன்னை நிறைவாக்கிக்கொள்கிறது இக்கவிதை.
No comments:
Post a Comment