LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 16, 2014

மயிலிறகாய் வருடும் நிர்வாணம்

நந்தமிழ் நங்கையின் கவிதைத்தொகுப்பு

புதுப்புனல் வெளியீடு; முதல் பதிப்பு 2012, விலை: ரூ.60, 80 பக்கங்கள்


_லதா ராமகிருஷ்ணன்



ஏறத்தாழ 80 கவிதைகள் அடங்கியுள்ள தொகுப்பு இது. கவிஞர் நந்தமிழ்நங்கை பனிக்குடம் இதழின் துணையாசிரியராகப் பணியாற்றியவர். முடிவில்லா உரையாடல்என்ற தலைப்பில் பெண் நாடகப் பிரதிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழில் முனைவர் பெற்றுள்ள இவர் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப்பணியாற்றுகிறார். கவிஞரின் தமிழ்மொழித் தேர்ச்சியும், இலக்கியப் பரிச்சயமும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் புலப்படுகின்றன.

வரைபடம் என்ற தலைப்பிட்ட கவிதை ஒரு பெண் வீட்டு விலக்காகியிருப்பது குறித்துப் பேசுவது. வலி, பயம், உதிரப்போக்கு என எதுவுமே நேரடியாகச் சொல்லப்படவில்லை. எனினும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. குறிப்பாக ‘தொற்றுகிறது அச்சம் லேசாக/ ஆடையில் பதிந்த வரைபடத்தில்என்ற வரிகள் கவித்துவம் மிக்கவை.

அதுபோலவே காமம் என்ற தலைப்பில் இடம்பெறும் கவிதையும், உடல் உறுப்பு எதையும் குறிக்கும் சொற்களின்றியே நுட்பமாக அந்த உணர்வை, அலைக் கழிப்பை விவரிக்கிறது.

காமம்
மெழுகிய தரையின் விரிசலிலிருந்து
புடைத்தெழுந்த சாணத்தின்
பசிய வாசனையில்
ஊறித் திளைத்த
காமம் நடுநிசியில்
பக்கத்தில் படுத்திருக்கும் அம்மாவையும்
தங்கையையும் தாண்டி
மாலை அரும்பிய மல்லிகையை ஏந்தி
சுற்றித் திரிகிறது
விடிவெள்ளி எழும் மட்டும்
பின்
அடுப்பைப் பற்றவைத்துப்
புலரிய காலையில்
புகுந்து ஒடுங்கியது
பஞ்சாரக் கூடைக்குள்.


இலக்கிய வெளியில் இயங்கும் பெண், பெண்களின் பிரத்யேகப் பிரச்னைகளை மட்டுமே எழுதவேண்டும்[அதற்கான தேவை இருப்பதால், அல்லது, தனிக் கவனம் கிடைத்துவிடுவது எளிது என்பதால்] என்றவிதமான முன்நிபந்தனைகள் ஏதுமின்றி மனதை வருடும், வலிக்கச் செய்யும் வாழ்வியல் நிகழ்வுகள், மனிதர்கள் அனைவரையும் நெகிழ்வோடும், உக்கிரத்தோடும் பதிவுசெய்திருக் கிறார் கவிஞர்.

இழந்துபோன காலம், உறவுகள், கிராமம் ஆகியவை குறித்த ஏக்கமும், தத்து வார்த்தப் பார்வையும் இடம்பெற்றுள்ள கவிதைகள், இயற்கைக்காட்சிகளில் மனம் கொள்ளும் பரவசம், அமைதியைப் பதிவுசெய்யும் கவிதைகள், வாழ்வின் புதிர்களை அவதானிக்கும் கவிதைகள் என வாழ்வின் பல்பரிமாணங்களைப் பேசும் கவிதைகள் இத்தொகுப்பில் வாசிக்கக் கிடைக்கின்றன. தாத்தாவிற்காக ஏங்கும் சிறுமி மனம், காதலைத் தகிக்கும் மனதோடும், தத்துவார்த்தமாகவும் பார்க்கும் யுவதி மனம் என நுண்ணுணர்வு மிக்க ஒரு மனதின் பல நிலைகள் இந்தத் தொகுப்பில் விரிந்து மனம் வீசுகின்றன.

கீழ்க்காணும் கவிதை தமிழ்க்கவிதைகளில் மிக மிக அதிகமாகப் பேசப்பட்டுவிட்ட காதலைப் பற்றிய வித்தியாசமான, கவித்துவம் மிக்க கவிதை:

காலமறியும்
இருகால்களை மடக்கிப்
பூனைபோல் உற்றுநோக்குமென்,
மீன் பற்றிய விருப்பங்களுக்குச்
செவிசாய்க்க முடியாத உன்னை
அணுஅணுவாய் ரசிக்கத்தான் முடிகிறது
வானம் வெளிறிய மழைக்காலப் பொஉழ்தொன்றில்.

பின்பொருநாள்
உடலொட்டிக் கடக்கும் தும்பிகள்
ஒருகணம் உன் பெயரையும்
உச்சரித்ததாக நினைவு
காதலோ பொழுதோ
உன்னையும் நனைவிக்காதா என்ன?

காலமறியும் இப்படியாகப்பட்ட காதற்கதைகள்.


ஊரின் இயற்கையெழில், தாத்தாவின் ஞாபகம் என மனதை நெகிழவைக்கும் கவிதைகளும், கவி வரிகளும் இந்தத் தொகுப்பை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும். இன்றும் என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம்பெறும்

‘கொல்லைப்புறப் படியடியில்
 குழிபறித்துப் புதைத்தேன்
தேன்சிட்டின் அழைப்புக்குரலையும்
மருதாணிப்பூவின் மணத்தையும்

என்ற வரிகள்_

சிநேகத்தின் சந்தனவாடை[உறுத்தல்], போன்ற சொற்றொடர்கள் வாசிப்பின்பம் தருபவை.

சில கவிதைகள், பெரும்பாலான கவிதைத்தொகுப்புகளில் வழக்கமாகக் காணப் படுவது போலவே அதிக உரைநடைத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. உதாரணம் ‘மழைஎன்று தலைப்பிட்ட கவிதை. அதே சமயம், அவற்றை ஈடுசெய்வதுபோல் வேறு பல கவிதைகளில் தமிழ் மனமும், தாய்மண்ணின் மணமும், இயல்பாக, இரண்டறக் கலந்து கிறங்கடிக்கிறது.

அத்தனை கவிதைகளிலும் துல்லியமாகத் தெரிகிறது கைத்தட்டலுக்காகவோ, கவனங்கோரலுக்காகவோ வலிந்து கவிதை புனைய முனையாத, கவிதையில் தோய்ந்து, தன்னைக் கரைத்துக்கொண்டு வலிநிவாரணம் தேடும், வாழ்வாங்கு வாழும் இன்மனம்!




0


[* மலைகள் இணைய இதழில் வெளியானது]

No comments:

Post a Comment