ரிஷியின் கவிதைகள்
நாள்கள்
1. ஒரு நாள்
நள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது
கொள்ளிவாய்ப் பிசாசாய்.
கால்கள் சென்றன தம்போக்கில்
கணினியை நோக்கி.
திரை யொளிரத்
தொடங்குவதற்காய் காத்திருக்கும் நேரம்
கரை மீறும் ஆத்திரம்.
பின், சுரங்கெட்ட பியானோ வாசிப்பாய்
விசைப்பலகை மீது தட்டத்தொடங்கும்
விரல்கள் சில.
திறந்துகொள்ளும் இணைய
இதழில் எழுதியுள்ளோர் பெயர்களைத்
துருவியாராய்ந்து
தயாரித்துக்கொள்ளப்படும் ‘ஹிட்-லிஸ்ட்’.
இவர் ஃபர்ஸ்ட், அவர் நெக்ஸ்ட்....
கதையோ கவிதையோ கட்டுரையோ-அட, உள்ளடக்கமோ சாரமோ – ஒரு பொருட்டில்லை யெப்போதும் _
விருப்பம்போல் கருப்பொருளைத்
திரிக்கத் தெரிந்தால் போதும் –
கொய்துவிடலாம் எளிதாய்
வேண்டுமட்டும் தலைகளை....
2. இன்னொரு நாள்
அன்று இணைய இதழைத் திறந்ததும் இதயமே நின்றுவிட்டதுபோல்..
கதை கவிதை கட்டுரை யெதிலும்
இடம்பெறவில்லை ஓரெழுத்தும்.
எல்லாம் வெள்ளைமயம்.
’கொள்ளை போய்விட்டதே எல்லாம்....
அய்யோ,
இனி எதைச் சாட, எதைக் குதற…?’
_ரொம்பவே பதறித்தான்
போய்விட்டார் பாவம்.
குய்யோ முறையோ வெனக் கூவத்
தொடங்கியது உள்.
மறுகணம் பிறந்தது ஞானம்.
ஐயோடீ!
கைபோன போக்கில் பதிவு
செய்யும் கருத்துக்கு
கதை கட்டுரையில் எழுத்துகள்
இருந்தால் என்ன,
இல்லாவிட்டால்தான் என்ன?
ஆனபடியால் வழக்கம்போல்,
இல்லாத படைப்புகளையும்
சொல்லியடிக்கத்தொடங்கிவிட்டார்
வில்லாதிவில்லனார்;
பின்னூட்டப் ‘பவர் ஸ்டார்‘!
3. அன்றொரு நாள்
இலைகளை மட்டும் நேசிக்கும்
வக்கிரப் பெருவழுதி என்று
தன்னை
அடையாளப்படுத்திக்கொண்டான் அன்றொரு நாள்
அந்த நவீன தமிழ்க்கவிஞன்.
‘செலக்டிவ் அம்னீஷியா’வில் தோய்த்தெடுக்கப்பட்ட சமகாலத் தமிழ்க்கவிதைச் சரித்திரத்திலிருந்து
புறந்தள்ளப்பட்டான்.
கருத்துச்சுதந்திரம் என்ற
பெயரில் அதையும் கேள்வி கேட்காமல் வெளியிட்டார்கள் தமிழிலக்கியத் தாளாளர்கள்.
அண்டசராசரமெங்கும் விண்டில
கண்டு ஆனந்தமாய்த் திரியும் கவிமனதிற்கு அதெல்லாம் ஒரு பொருட்டா என்ன!
’வாழ்ந்து மறைந்தவருக்கான உரிய
மரியாதையோடு’
அந்த வரலாற்றாசிரியர்
குறித்து இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்:
அவர் எழுதிய ஒரு கவிதையும்
நினைவுகூரப்படுவதில்லை.
’விலக்கப்பட்ட கனி’யான கவியிலிருந்து கிளர்ந்தெழும் வித்துகள் தமிழ்க்கவிதை வெளியெங்கும்
பிறவிப்பெருங்கடலாய்!
4. என்றொரு நாள்
தக்க இடத்தில் தூய தமிழ்; தேவைப்பட்டால் சமசு[?]கிருதம்.
அரசுப்பணம் ஆயிரங்கோடி
விரயமாகலாம், 2ஜி, கல்மாடி,
நிலக்கரியில்.
ஆன்ற
மொழிபெயர்ப்புப்பணிகளுக்குப் பயன்படலாமோ? – அநியாயம்.
’ஆங்கிலப்புலமை யிங்கே
யாருக்குமில்லை; தான் பெற்ற இன்பத்தை ஊருக்குக் கைமாற்றும்
மாண்புடையோர் இல்லவே யில்லை’.
என்றவாறு புறப்படும்
வன்மம்நிறை வசவுகள்.
இங்கே உழைப்புக்கேற்ற
ஊதியமின்றி பிழைத்துவரும் இனம் படைப்பாளிவர்க்கம்.
இதை எள்ளிநகையாடுவோரை
உன்மத்தர் என்னாமல் வேறென்ன சொல்லியழைக்க?
விடங்கக்கும் நாகங்களைக்
கண்டால் விலகிவிட வேண்டுமா? நையப்புடைத்துவிட வேண்டுமா?
ஐயம் தீர்ந்தபாடில்லை.
என்றொரு நாள் எழுத
ஆரம்பித்த கவிதை.
நீளும் இன்னும்.
5. முன்பொரு நாள்
சிலருக்கு பெயர் சிலருக்கு செயல், சிலருக்கு உவமை
சிலருக்கு கயமை;
சிலருக்கு குறியீடு
சிலருக்கு குறைபாடு, சிலருக்கு பக்தி சிலருக்கு
கத்தி;
சிலருக்கு பொறுப்பு
சிலருக்கு வெறுப்பு, சிலருக்கு புனிதம் சிலருக்கு
கணிதம்;
சிலருக்கு அறவியல்
சிலருக்கு அரசியல், சிலருக்கு வாலிவதம் சிலருக்கு
ஞானரதம்;
சிலருக்கு சுற்றுச்சூழல், சிலருக்கு கடல்வாணிபம்
காதலின் இலக்கணம், கேடுகெட்ட ஆணாதிக்கம்
உறவில் துறவு, துறவில் உறவு
அனர்த்தம், அண்டசராசரம் இன்னும் _
ஒரு சொல் ஒரு இல் ஒரு
வில்லுக்கப்பால்
விரி பரிமாணங்கள்.....
அறிந்தவரையான ‘க்வாண்டம் தியரி’ப்படி _
இருந்தேன் நானும்
வனவாச ராமன்
வாழ்ந்துமுடித்த
’முன்பொரு நாள்’!
6. பின்பொரு நாள்
மரங்களிடமும் மனம்விட்டுப்
பேசும் அன்புராமன்கள் -
மற்றவரெல்லாம் முட்டாளென்
றேசும் அகங்கார ராமன்கள் -
பலராமன்கள் - பலவீன
ராமன்கள் -
சொல்லிலடங்கா ராம
ரகங்கள்......
அகமும் புறமும் செறிவடர்ந்து, திறந்தமுனைகளோடு
தன்னை வாசகப்பிரதியிடம்
ஒப்படைக்கும் நவீன தமிழ்க் கவிதையாய்
கைத்தட்டலோ, கல்லடியோ சித்திரத்தன்ன செந்தாமரை மனம் படைத்த
ராஜாராமனின் கவித்துவம்
இத்தரையில் எத்தனையோ
ஆண்டுகளுக் கொருமுறை பூக்கும்
குறிஞ்சிமலராய் புலப்படும்
பின்பொரு நாள்.
0
No comments:
Post a Comment