LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, March 7, 2025

சண்டைக்கு அழைக்கும் சமாதானத் தூதுவர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சண்டைக்கு அழைக்கும் சமாதானத் தூதுவர்கள்
- ‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கையில் கிடைத்த கற்கள் சில;
கவனமாய் கூர்தீட்டிவைத்துக்கொண்ட கற்கள் சில;
உடைந்த கண்ணாடிச் சில்லுகள்,
காலாவதியாகிவிட்ட அம்மிக்குழவிகள்,
அறுந்த சங்கிலிகள்
அம்புகள் விஷம்தோய்ந்த முனைகளோடு....
அத்தனையும் சொற்களாய்
உருமாறி வெளியே தெறிக்கும் வேகத்தில்
அப்பாவி மண்டை பிளந்து
ரத்தம் பெருக்கெடுக்க,
அநியாயமா யொருவரின் விழி சிதைய,
அவனை மனைவி பறிகொடுக்க
இவளைக் கணவன் இழந்தழிய,
கொள்ளைபோகும் மனிதநேயம்.
பிள்ளைகள் தேம்பியழ,
கிள்ளிவிட்டுத் தொட்டிலையும்
ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள்
சின்னத்திரையெங்கும்.....
அன்பின் பெயரால்
முகநூல்வெளியெங்கும் சொல்லாயுதங்களோடு
வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.....
நம்மை நாம் நாலாந்தர எதிரிகளாய் பாவிக்க
நம்மை நமக்கே நபும்சக எத்தர்களாய்க் காண்பித்து
கண்சிவக்க அத்தனை ஆங்காரமாய்
கத்திக்கொண்டிருக்கிறார்கள்
நமது குரல்களாய் தம்மைத்தாமே
பிரகடனம் செய்துகொள்பவர்கள்.
மறுக்கும் குரல்வளையை
அறுக்கத் துணிந்தவர்கள்.
மறவாமல் தற்காப்புக்கவசமணிந்திருக்கும்
அவர்களுக்கு
தெருவெங்கும் சகமனிதர்கள்
தீக்காயங்களோடு சிதறியோடுவதைப் பற்றி
எந்தவொரு கவலையுமில்லை.
இற்றுவிழுவோர் எண்ணிக்கை
எத்தனைக்கெத்தனை அதிகரிக்குமோ
அத்தனைக்கத்தனை அதிகமாய்
வந்துசேரும் விளம்பரங்களும்
வெளிநாட்டுப்பயணங்களும்.

வஞ்சனை சொல்வாரடீ கிளியே…. . ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வஞ்சனை சொல்வாரடீ கிளியே….

.
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவர் செத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
அவருடைய படுக்கையில் ஈக்கள் மொய்க்கத்தொடங்கிவிட்டன
என்கிறார்கள்.
அவருக்குப் பாடை தயார்செய்யவேண்டும் என்கிறார்கள்.
அங்கிருந்தொருவர் வேகவேகமாக
சற்று தொலைவிலிருந்த மரத்தடியை நாடிச் செல்கிறார்
இரங்கற்பா எழுத.
அந்நிய தேசங்கள் சிலவற்றில்
அடிக்கொரு நொடி
அந்த உயிரின் நேரப்போகும் மரணம் குறித்த BREAKING NEWS
வெளியாகிக்கொண்டேயிருக்கிறது.
கற்பனைத் தெர்மாமீட்டரை அவர் வாயில் திணித்து
வெறுங்காய்ச்சலை விபரீதமான விஷக்காய்ச்சலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
கொரோனாவைரஸை விடக் கொடியவர்கள்.
’அவர் சற்றே பலவீனமாயிருக்கிறார்.
ஆதரவாய் அருகிருந்து கவனித்துக்கொண்டால்
எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்பவரை
அசிங்கம்பிடித்தவர் என்று வைதுகொண்டே _
அங்கேயிங்கே யாரும் கவனிக்கிறார்களா
என்று பார்த்தவாறு
பிறந்தது முதல் அவரைப் பேணி வளர்த்த
அன்புக்குரிய அந்தப் பெரியவரின்
குரல்வளையருகே தன் இரு கைகளையும் நகர்த்துகிறார்
நெருங்கிய உறவுக்காரர்.
என்ன தோன்றியதோ, ஓடிவந்து
அந்தக் கரங்களைக் கடிக்கிறது ஒரு குழந்தை.
இன்னொன்று அவருடைய தலையைத் தடவிக்கொடுத்து
அவரைப் பார்த்துச் சிரிக்கிறது.
‘தூங்கு ஃப்ரெண்ட். நாங்கள் உன்னைப்
பார்த்துக் கொள்கிறோம்”
என்று சேர்ந்திசை பாடும் செல்லங்களைக் கண்டு
அந்த முகத்தில் களைப்பையும் மீறி
சின்னதாக ஒரு புன்னகை மின்னுகிறது.

என்றும் நிலுவையிலிருக்கும் வழக்கு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 என்றும் நிலுவையிலிருக்கும் வழக்கு.

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஊருக்கு இளைத்தவர்
வழியிலுள்ள பிள்ளையார் கோயில் ஆண்டி அல்லர் _
யாருக்கும் இங்கே இளைத்தவராயிருப்பவர்
எளிய மொழிபெயர்ப்பாளர்.
நினைத்தபோதெல்லாம் மொழிபெயர்ப்பாளரை
பழித்துக்கொண்டேயிருக்கலாம்
இலக்கியத்தைப் புரந்து காப்பதா யதற்குப்
பொழிப்புரை எழுதலாம்.
களித்துமகிழ வேண்டுமா –
காலால் எட்டியுதைக்கலாம் அவரை;
காலேயரைக்கால் வரியை மொழியாக்கம் செய்யாதவரும்
’காமெடி பீஸா’க்கலாம் அவரை;
கொந்தளித்தெழுந்து பல்லுயிரைக் குடித்த ஆழிப்பேரலையும்
நகைச்சுவைத்துணுக்காகும்போது
மொழிபெயர்ப்பாளரைப் பழிக்கக்கேட்டு
கெக்கெபிக்கெ யென்று சிரித்துமகிழ
ஆட்களாயில்லை?

IF ONLY OUR TONGUES WERE MADE OF GLASS....

 


Wednesday, March 5, 2025

மர்மக்கிளிவாழ்க்கை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மர்மக்கிளிவாழ்க்கை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
”எத்தனை காலம் என்று தெரியவில்லை
ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும்
ஒரு குகையில்
சிறைப்பிடிக்கப் பட்டிருந்தேன்.
எப்படியோ தப்பித்துவந்திருக்கிறேன்.
எனக்கு உண்ண கொஞ்சம் தானியம் கொடு –
நான் அவசியம் உயிர்வாழவேண்டும்’
என்றது அந்தப் பச்சைக்கிளி.

ஒரு கிண்ணத்தில் அரிசியும் பருப்பும்
கொண்டுவந்து தந்த பின்பு
’அவசியம்’ என்பதை விளக்கமுடியுமா?’
என்று கேட்டதற்கு
’வசியத்தின் எதிர் அல்ல’ என்று
கீச்சுக்குரலுயர்த்தி விளக்க முற்பட்டு
பின் தன் குட்டி மண்டையை இப்படியு
மப்படியும் ஆட்டி

"உன் வாழ்க்கை உனக்கு அவசியம் போலவே
எனது எனக்கு" என்று
நறுக்கென்று சொல்லிக் கிளம்பி
வேகம் கூட்டி

விர்ரென உயரே பறந்த பறவைக்கு
சிறகுகளிருக்கவில்லை யென்பது
சிறிதுநேரத்திற்குப் பிறகே உறைக்கிறது.....

கவித்திறன் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவித்திறன்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அந்தப் பிரமுகரின் பக்கத்தில் தான் அமர்ந்திருந்ததை
அதிகவனமாக
சுற்றிலுமிருந்தவர்களை ‘க்ராப்’ செய்துவிட்டு
வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் பதிவேற்றிக்கொண்டேயிருக்கிறா
ரொரு கவி.

அந்த ஆடம்பரவிழாவில் தான் விலையுயர்ந்த
ஆடையணிமணிகளுடன் கலந்துகொண்டதை அவசியமில்லாதபோதும்
அடிக்கடி பதிவேற்றிக்கொண்டேயிருக்கிறா
ரொரு கவி.

அந்தத் திரைப்படத் துவக்கநாள் பூஜைவிழாவில்
இன்றைய முன்னணி நட்சத்திரங்கள்,
கோடி ரூபாயில் எளிய வாழ்வு வாழ்ந்துவரும்
அரிதார சீர்த்திருத்தவாதிக் கலைஞர்கள்
அன்னபிறரோடு
தோளோடு தோளொட்டி வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருக்கும் தனது புகைப்படத்தை
தினந்தினம் பதிவேற்றி தன்னையும்
ஒளிவட்டத்தில் நுழைத்துக்கொள்ளப்
பகீரதப் பிரயத்தனம் செய்கிறா
ரொரு கவி….

அவரவர் வேலை அவரவருக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் வேலை அவரவருக்கு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
மீறல் என்பது மட்டுமே மந்திரச்சொல்லாக இருந்தது.
மீறல்களில் சின்ன மீறல் பெரிய மீறல்
தேவையான மீறல் தேவையற்ற மீறல்
அர்த்தம் மிக்க மீறல் ஆக்கங்கெட்ட மீறல்
இயல்பான மீறல் தருவிக்கப்பட்ட மீறல்
உள்ளார்ந்த மீறல் உருவேற்றப்பட்ட மீறல்
இன்னும் எத்தனையோ உண்டென்றறியாமல்
வெறுமே அந்த மந்திரச்சொல்லை உச்சாடனம் செய்தாலே
அற்புத விளக்கு ஒன்றல்ல ஆயிரம் கைவசமாகும்
என்று அரைகுறையாய் சொல்லித் தந்தவர்கள் தருகிறவர்களுக்கு
அதன்படி செயல்பட்டு அந்த இருட்குகைக்குள்
அகப்பட்டு
புதையலேதும் கிடைக்காமல் வதைபடும்
அப்பிராணி சீடர்களுக்கு
அடைக்கலமளிக்க அவகாசமிருப்பதேயில்லை.

ஒரே பாதை வெவ்வேறு கால்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரே பாதை வெவ்வேறு கால்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
அவரவர் பயணங்களுக்காகப் பாதையின் நீள அகலங்களும்
இருமருங்கிலுமான மரங்களும் மைல்கற்களும்
தெருவோரக் கடைகளும் திருப்பங்களும்
மறுசீரமைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
அவர் நடக்கும்போது அந்தச் சாலையோரங்களிலிருந்த
அருநிழற் தருக்கள்
அடுத்தவர் நடக்கும்போது மாயமாய் மறைந்துபோய்விடுகின்றன.
அதற்கு பதில்
அங்கே கூர்முனைக் கற்கள் இறைந்துகிடக்கின்றன.
அவர் நடக்கும்போதெல்லாம் அங்கே நாள்தவறாமல் இளநீர் வெட்டிக்கொண்டிருக்கும் வியாபாரி
அடுத்தவர் அவ்வழியே செல்லும்போது
வெடிகுண்டு வண்டியில் கூவிக்கொண்டே செல்கிறார்.
அவர் நடக்கும்போது வீசும் தென்றல்
அடுத்தவர் நடக்கும்போது சூறாவளியாகிவிடுகிறது.
அவர் நடக்கும்போது ஆயிரத்தெட்டு யோசனைகளோடு சென்றாலும்
வழுக்கிவிட அங்கேயிருக்காத சாணிமொந்தையும் போட்டுடைத்த பூசணிக்காயும்
நாறும் சாம்பார்ப் பொட்டலமும் செத்த எலியும்
குழியும் குண்டும் வழியெலாம் உருண்டோடும் கோலிகுண்டுகளும்
யாவும் அடுத்தவர் செல்லும்நேரம்
அங்கே ஆஜராகிவிடுகின்றன.
அப்படியுமிப்படியும் ஆடித் தள்ளாடித் தத்தளிக்கும் ஒருவரை
யடுத்தவர் தம்பிடி பெறாதவர் என்று எக்களிப்பதும்
வம்படியாய்ப் பிடித்திழுத்துத் தள்ளிவிடுவதும்
சாலைவிதிகளிலேயே மீறப்படாமல் மிக கவனமாய்ப்
பேணப்படுவதாகிறது.
அடிக்கடி விபத்துகள் நேரும் அந்த அபாயகரமான வளைவு
மட்டும் இருந்தவிடத்திலேயே இருந்துவிடுமா என்ன….

காரணகாரியம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 காரணகாரியம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கருத்துக் கந்தசாமி’ என்று
எதற்குச் சொல்லவேண்டும்?
கந்தசாமிகள் மட்டுமா
கருத்துச் சொல்கிறார்கள்?
அப்படிச் சொல்வது கந்தசாமி என்ற பெயருடையவர்க ளைப் பரிகசிப்பதாகாதா?
பழிப்பதாகாதா?
பொதுவாக சாமியையும் குறிப்பாக கந்த சாமியையும்
என்றுகூடச் சொல்ல முடியும்….
சீக்கியர்களைப் பார்த்துச் சிரித்துச் சிரித்து
சகட்டுமேனிக்கு பகடிசெய்து திரித்து
குலுங்கி வலிக்கும் வயிறுகளில் இன்னமும்
நகைச்சுவையுணர்வு செரிமானமாகாமலேயே……
கந்தசாமி என்ற பெயர்
அந்தப் பெயருடையவரை மட்டும் குறிப்பதில்லை
என்று புரிந்துகொள்ளவியலாத அளவு
அறிவீலியில்லை நான்.
இருந்தாலும்,
நானும் கருத்துச் சொல்ல
ஒரு காரணம் வேண்டாமா?
அதனால்தான்.......