LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, May 2, 2019

கட்டண உரை - லதா ராமகிருஷ்ணன்


கட்டண உரை

லதா ராமகிருஷ்ணன்

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்தியவர்கள், வருபவர்கள் முன்கூட்டியே பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள். அதுவே எரிச்சலூட்டியது.

அந்தக் குறிப்புக்கான எதிர்ப்புணர்வின் விளைவாகவே ஆர்வத்தோடு வந்திருக்கக் கூடிய சிலபலர் வந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது.

இலக்கியவாதிகளுக்கு உரிய சன்மானம் தந்து மரியாதை செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதைவிட்டு இப்படிச் செய்தால் ஆர்வமுள்ள மாணாக்கர்கள், 300 ரூபாயில் இரண்டுநாட்கள் வீட்டுச்செலவை சமாளிக்க முடியும் என்ற நிலையுள்ள எளிய இலக்கிய ஆர்வலர்கள் போகமுடியாத நிலை வரும்.


பணமுடையோர் - இலக்கியம் தெரிகிறதோ இல்லையோ பந்தாவாக வந்து உட்கார்ந்து கொள்வது அதிகம் நடக்கும். காட்சிப்பொருளாகப் புத்தகங்களை வாங்கி நிரப்பும் வழக்கமுடைய நிறைய திரைப்படவாசிகள், பெருமுதலாளி கள் இருக்கைகளை ஆக்கிரமிப்பார்கள்

இத்தனை பேர் ஆர்வமுள்ளவர்கள் இலவசமாக வருகை தரலாம்என்பது போன்ற சலுகைகள் தரப்பட்டால் அது வாசகர்களை எத்தனை அவமானமாக உணரச் செய்யும்.

இந்த கட்டண முறை எழுத்தாளருக்கு வேண்டுமா னால் ஏதோ ஒருவகை ஒளிவட்டத்தைத் தருவதாக இருக்கலாம். உண்மையான வாசகர்களை இது மதிப்பழிக்கும் செயலே.

இலக்கியவெளியிலாவது இதுநாள்வரை ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு வெளிப்படையாகவாவது தெரியாமலிருந்தது. இந்தவிதமான கட்டண உரை முறையில் அந்த சமத்துவம் அழிந்துவிடும்

அவரவர்வசதிக்கு ஏற்றார்ப்போல் கட்டணம் நிர்ணயித்து ஒருசிலர் கூடி இலக்கியக்காப்பாளராக இயங்கும் போக்கு அதிகரிக்கும்

எந்த இலக்கியவாதியின் உரைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அவரே ஆகச்சிறந்த படைப்பாளி என்பதான ஒரு பொய்க்கணிப்பு உருவாகும். புதிய அளவுகோல்கள் புழக்கத்திற்கு வரும்.


கட்டண உரை
கண்டனத்திற்குரியது.


இதற்கான எதிர்வினைகள்
போகப்போக கண்டிப்பாக ஏற்படும்




நானென்பதும் நீயென்பதும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நானென்பதும் நீயென்பதும்….
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அதெப்படியோ தெரியவில்லை
அத்தனை நேரமும் உங்கள் கருத்துகளோடு
உடன்பட்டிருந்தபோதெல்லாம்
அறிவாளியாக அறியப்பட்ட நான்
ஒரு விஷயத்தில் மாறுபட்டுப் பேசியதும்
குறுகிய மனதுக்காரியாக,
கூமுட்டையாக
பாலையும் நீரையும் பிரித்தறியத் தெரியாத பேதையாக
பிச்சியாக,
நச்சுமன நாசகாரியாக
ஏவல் பில்லி சூனியக்காரியாக
சீவலுக்கும் பாக்குக்கும்
காவலுக்கும் கடுங்காவலுக்கும்
வித்தியாசம் தெரியாத
புத்திகெட்ட கேனச் சிறுக்கியாக
மச்சு பிச்சு மலையுச்சியிலிருந்து
தள்ளிவிடப்படவேண்டியவளாக
கள்ளங்கபடப் பொய்ப்பித்தலாட்டப்
போலியாக
வேலி தாண்டிய வெள்ளாடாக
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
நாசகாரியாக
பள்ளந்தோண்டிப் புதைக்கப்படவேண்டியவளாக
வெள்ளத்தில் வீசியெறியப்படத்தக்கவளாக
சுள்ளென்று தோலுரித்துக் குருதிபெருக்கும்
கசையடிக்குகந்தவளாக
அக்கிரமக்காரியாக
அவிசாரியாக
துக்கிரியாக
தூத்தெறியாக
உங்கள் தீராத ஆத்திரத்திற்குப்
பாத்திரமாகிவிடுகிறேன்.
ஆனாலுமென்ன?
நீங்கள் என்னை நோக்கி
எனக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது
என்று சொல்லும்போது
அது உங்களுக்குமானதாகிவிடுகிறது!




சூன்யப்புள்ளியில் பெண் - எனது முதல் மொழிபெயர்ப்பின் அதே தலைப்பில்....

சூன்யப்புள்ளியில் பெண்   
- முதல் மொழிபெயர்ப்பின் அதே தலைப்பில் –   இரண்டாவது!
_ லதாராமகிருஷ்ணன் 





Woman at Point Zero (Arabic: امرأة عند نقطة الصفر‎, Emra'a enda noktat el sifr) என்ற நாவல் Nawal El Saadawi என்பவர் ஃபிர்தாவ்ஸ் என்ற தூக்குதண்டனைக் கைதியை சந்தித்து சமூகத்திலும் சிறைவாசத்திலும் அந்தப் பெண் அடைந்த துன்பங்களைக் கேட்டறிந்து எழுதிய நூல் இது. முதலில் பேசமாட்டேன் என்று மறுக்கும் அந்தக் கைதி பின் மெல்ல மெல்ல மனந்திறந்து தன் அனுபவங்களைப் பற்றிக் கூறுகிறாள். (அவளுடைய நேரடி அனுபவங்களைக் கேட்டறிந்து
(published in Arabic in 1975. The novel is based on Saadawi's encounter with a female prisoner in Qanatir Prison and is the first-person account of Firdaus, a murderess who has agreed to tell her life story before her execution. The novel explores the issues of the subjugation of women, female circumcision, and women's freedom in a patriarchal society.)
எட்டு பத்து வருடங்களுக்கு முன் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் முயற்சியில் என் மொழிபெயர்ப்பில் உன்னதம் வெளியீடாகப் பிரசுரமான இந்த முக்கிய மான படைப்பு இப்போது கவிஞர் சசிகலா பாபுவின் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடாகப் பிரசுரமாகி யிருக்கும் தகவல் எதேச்சையாக அறியக் கிடைத்தது.
தலைப்பு - என் மொழிபெயர்ப்பு நூலுக்கு நான் வைத்த அதே தலைப்பு - சூன்யப்புள்ளியில் பெண்!
ஒரு நல்ல நூலுக்கு இரண்டு மொழிபெயர்ப்புகள் வருவது நல்லதே! ஆனால், இப்போது வந்திருப்பது இரண்டாவது மொழிபெயர்ப்பு என்று எத்தனை பேருக்குத் தெரியும் என்பது கேள்விக்குறி.
Top of Form