LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label மண்ணாந்தை மன்னர்கள் ‘ரிஷி’. Show all posts
Showing posts with label மண்ணாந்தை மன்னர்கள் ‘ரிஷி’. Show all posts

Tuesday, October 18, 2016

மண்ணாந்தை மன்னர்கள் ‘ரிஷி’

மண்ணாந்தை மன்னர்கள்
ரிஷி


யாரோ கையில் கோலைக் கொடுத்துவிட்டு
காலணாக் கிரீடத்தையும் சூட்டிவிட்டார்கள். 
கேட்கவேண்டுமா கர்வத்துக்கு?
ஆசானாகத் தன்னைக் கற்பிதம் செய்துகொண்டுவிட்ட மண்ணாந்தையொன்று
பேசலாகாப் பேச்செல்லாம் பேசிமுடித்து
நீசத்தின் உச்சத்தில் நின்றபடி
கெக்கலித்துக்கொண்டிருந்தது.
கொக்கரக்கோவென்று கூவியா 
பொழுது விடிகிறது?
கடி துடி அடி மடி
படி இடி குடி முடி
யொவ்வொன்றுக்கும் உன் அகராதியில்
அதிகபட்சம் பத்து அர்த்தங்களென்றால்
அவர் அகராதியில் நூறுபோல்
இவர் அகராதியில் ஆயிரத்திற்கு மேல்!
கவிதையின் அரிச்சுவடி தெரிந்திருந்தால்
கவியின் மனப்பிறழ்வுக்காய் முதலைக்கண்ணீர் 
வடித்திருக்க மாட்டாய். 
கவிதையெழுதும்போதெல்லாம் கவிஞர் காதலனாய் 
கிறுக்கனாய்
மாறுவது உனக்குத் தெரியுமா?
சொட்டுச்சொட்டாய் சேகரித்த முத்துகளை
கொட்டாவி விட்டபடியே கையாடல் செய்யப்புகும் உன்
கீழ்மையை ஒளிக்க
எப்படியெல்லாம் பீடாதிபதியாகித் தொங்குகிறாய் தலைகீழாய்
‘Ten Commandments’
தருவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும்.
தன்னைத்தான் சிலுவையிலறைந்துகொண்டு கவிதை படைக்கும் கவிஞர்
ஒரே சமயத்தில் தனிச் சொத்தும் பொதுச்சொத்துமாய்….
உனக்கெல்லாம் எங்கே புரியப்போகிறது இது?
அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்அறிவாயா?
கோபிகிருஷ்ணனின்உள்ளேயிருந்து சில குரல்கள்கேள்விப்பட்டிருக்கிறாயா?
நாராய் நாராய் செங்கால் நாராயும்
வாராய் என் தோழி வாராயோவும்
தேரா மன்னாவோடு ஒட்டி முட்டும் இடங்கள்
என்னவென்று கேட்டால்
இந்த நூலில் கொஞ்சம் 
அந்த நூலில் கொஞ்சம் எடுத்தாண்டு
கம்பவுண்டர் பட்டங்கள் நாலைந்து பெற்றுவிடல் எளிது.
எம்பாவாய் கம்புமாவிலிருந்து கிளம்பியதாய்
விளம்பிவிட்டால்
பின், புதுக்கண்டுபிடிப்பாளரன்றோ நீ!
சிரிக்காதே வெட்கங்கெட்டு.
பாட்டி சொல்லக் கேட்டதில்லை?
புழுத்துப்போகும் வாய் பொய் பேசினால்”.
வீசும் காற்றுக்குச் சுருக்கிடப்பார்க்கும் உன் 
மடமையை என்னென்பது...
சிற்றிதழ் வெளி யோர் வழுக்குப் பாறை;
இங்கே கரணம் தப்பினால் மரணம்.
அழகுநடை பழகுவதான பாவனையில் சற்றே 
தெனாவெட்டாய் நடந்தால்
வினாடி நேரத்தில் கழுத்து உடைய
விழுந்திடுவாய் அதலபாதாளத்தில்.
கெட்ட முட்டாள் கனவானா யிருப்பதைக் காட்டிலும்
பெட்டிக்கடை வைத்துப் பிழைப்பது எவ்வளவோ மேல்
Ø