LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label சகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில ரிஷி. Show all posts
Showing posts with label சகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில ரிஷி. Show all posts

Tuesday, October 18, 2016

சகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில ரிஷி

சகமனிதநேயத்தோடு தரப்படும் 
சிறுகுறிப்புகள் சில
ரிஷி




சிறுபத்திரிகை யெழுத்தாளராக இருக்கவேண்டுமா?

சிறிதும் சுரணையில்லாம லிருக்கவேண்டும்.
சுண்டைக்காய்களை பொங்குமாக் கடல்கள் என்று 
ஃபிலிம் காட்டினால்

ஆமாஞ்சாமியாய் தலையை வேகவேகமாக ஆட்டி
கட்டாந்தரையில் நீச்சலடித்து

தர்மதாதாக்களை மகிழ்விக்கவேண்டும்.
ஆடுரா ராமா ஆடுராஎன்று மனிதர்கள் 
அதிகாரக் குரலில் ஆட்டுவித்தால்

அசல் மந்தி கூட அசையாது குந்தியிருக்கும்.

ஆனால், படைப்பாளி குபீரென்று எழுந்து
கடகவென்று குட்டிக்கரணமடித்துக்காட்ட வேண்டும்.
வாலைச் சுண்டியிழுத்தால்

புலியாய் சீறும் பூனைகூட.

ஆனால் எழுத்தாளர் பணிவாய் எழுந்து 
பலிமேடையில்
தன்னைத்தான் வாகாய்க் கிடத்திக்கொண்டு

கழுத்தை நீட்டிக் காத்திருக்கவேண்டும்

கில்லட்டீனுக்காய்.
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி

கழுதையில் ஏற்றி
வழியெங்கும் சாட்டையால் அடித்தபடி

பதிலைச் சொல் பதிலைச் சொல்
என்று குதிக்கும் கருணாமூர்த்திகள், கர்மப் பிரபுக்கள் முன்
கைகூப்பி நிற்கவேண்டும்….
தனமதிகாரசெல்வாக்குத்திமிர்பிடித்த

பணமுதலைகளுக்கு முன், 
அவர்தம் 
பரிவாரங்களின் முன்
மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஊர்ந்து செல்லவேண்டும்.
உன்னைப்போல் உண்டோஎன்று போற்றிப் பரவியவாறே

ஒண்ணொண்ணாய் நம் முதுகுத்தண்டின் வட்டுகளை

பெருமுதலாளி வெட்டிப்போட வாகாய்
மடங்கி ஒடுங்கி நிற்க வேண்டும்.
, மறந்துவிடலாகாது _
மருந்துக்கும் மனசாட்சி யிருக்கக்கூடாது.
நம் மதிப்பார்ந்த சக படைப்பாளி
மெகா விற்பனைக்கான 
product, brand name
ஆக
மாற்றப்படுவதைப் பார்த்தும் வாளாவிருக்கவேண்டும்.
தப்பித்தவறி எதிர்ப்புத் தெரிவித்தாலோ
தாக்கப்படுவது திண்ணம்.
இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்

கவனமாயிருக்கவேண்டும்.
இல்லையென்றால்

கட்டம்கட்டப்படுவீர்கள்.
முற்றிய மனநோயாளியாய்.
வெட்டாட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
நாம் தாயமாகப் போகிறோமா?
மாயமாகப் போகிறோமா?