LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label களம் ‘ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label களம் ‘ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Wednesday, October 24, 2018

களம் ‘ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)


களம்
ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)


வீரம்செறிந்தவர்களும்கூட
ஒரு வனவாச காலத்திற்குப் பிறகே
வெளியே வந்திருக்கிறார்கள்….
கூர்குறையா வாட்களோடு......
உள்ளுறைந்திருந்த காலமெல்லாம்
அதன் முள்முனை அவர்களைக்
குத்திக்கிழித்துக்
காயப்படுத்திய நாட்களின் நினைவுகளும்
தழும்பாகாமலே குருதிபெருக்கிக்
கொண்டிருந்திருக்கும்….
இருக்கும் இன்னமும்.
குகைக்குள் குரல்வளையிறுக
ஒடுங்கியிருந்த நாட்கள்போய்
இன்று கதிரவனின் கிரணங்கள்
மேலே படுவதாய்
மகோன்னத ஆகாயத்தைப்
பார்க்க முடிவதாய்
என்னவொரு ஆசுவாசம்!
காலைப் பிணைத்திருந்த
கொடூரப் பாறாங்கல்
கழண்டுபோய்விட்டதாய்….
என்றாலும்,
கண்ணில் படும் வழிப்போக்கர்களை
யெல்லாம் _
வயிற்றுப்பிழைப்புக்காக நீண்டதூரம்
அலைந்து களைத்திருப்பவர்களை
யெல்லாம் _
குகைகளிலிருந்து தம்மைக் காப்பாற்ற
வக்கில்லாத
கோழைகளாகவும்
அவ்வகையில் குற்றவாளிகளாகவும்
கைபோனபோக்கில் எழுதி சிலர்
காறித்துப்புவது எதற்கு?
குகைகளில் சிலர் இருந்ததே
இப்பொழுதுதான் தெரியவருகிறது.
கேட்டமாத்திரத்தில் கைவேலையை
யெல்லாம் விட்டுவிட்டு
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்துவிட
வேண்டுமென்றால் எப்படி?
அவரவர் குகைகளைச் சுமந்தபடி
அன்றாடம் வாழ்பவர்களுக்கும்
அவரவருக்கான அவகாசம் பெற
உரிமையுண்டுதானே?
அவரவருக்கான விடுதலையைத்
தீர்மானிக்கவும்
அவரவருக்கான முன்னுரிமைகளை
முடிவுசெய்யவும்…..