LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label உள்வட்ட எதிரிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label உள்வட்ட எதிரிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Thursday, May 24, 2018

உள்வட்ட எதிரிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


 உள்வட்ட எதிரிகள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


தயாராக சில வார்த்தைகள் வாக்கியங்களை 

சிலர்

எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள்.


தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்

துல்லியமாய்ச் சொல்லத் தெரிந்த அவர்கள்

ஊரில் நிலவும் குழப்பங்கள் 

துயரநிகழ்வுகள்

இயற்கைச்சீற்றங்கள் 

என

ஒன்றுவிடாமல்

தங்களுக்கான பயிற்சிவாய்ப்பாகப் 

பயன்படுத்திக்கொள்வார்கள்.


தேர்ச்சியே நோக்கமாய்

குறிபார்த்து அவர்கள் எறியும்

வார்த்தைகுண்டுகள்

தங்கள் இலக்கையடையத் தவறுவதேயில்லை.


அவர்கள் எறியும் சொற்குண்டுகள் உண்டாக்கும் 

ரணங்கள் 

ஆறாக்காயங்கள் 

நிவர்த்தியற்ற ஊனங்கள் 

உயிர்போகும் வலி

எதுவும் வெளிப்பார்வைக்குத் தெரியா

உட்காயங்களாய்.


நிராயுதபாணிகளின் உயிரை உறிஞ்ச இங்கே

நிறைய நிறைய பேர்.


சிலரின் அடையாளம் தெளிவாய்த் தெரிய



இன்னும் சிலருடையதோ 

பலவகையான நேயங்கள்பரிவுகளின் பெயரால்

நெய்யப்பட்ட போர்வையில்

பொதியப்பட்டிருக்கிறது.


வெடிகுண்டின் திரியில் தீவைக்கவேண்டிய

லைட்டரையோ

அல்லது எலெக்ட்ரிக் பொத்தானையோ

தன்னுள் ஒளித்திருக்கும்

அந்தப் பொதியின் மிக அருகே அமர்ந்தபடி நாம்


அடையாளம் தெரிந்தவர்களை

அறம்பாடிக்கொண்டிருக்கிறோம்.


அடையாளம் தெரிந்தவர்களை மட்டும்.