LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label இங்கிருந்து வெளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label இங்கிருந்து வெளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Tuesday, July 10, 2018

இங்கிருந்து வெளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இங்கிருந்து வெளியே….
‘ரிஷி'
(லதா ராமகிருஷ்ணன்)


  இத்தனை அலைச்ச லுக்குப் பிறகும் இரண்டாம் சதுரம் வசப்படவில்லை யிதுவரை.

மூன்றாவது தொடுவா னத்திற்கப்பால்.

அந்தரத்தில் அவ்வப்போது 
தொங்கிக் கொண்டிருக்கும் நூலேணியில்
எத்தனை முறை ஏறியும்
நிலவுக்குள் நுழையவே முடியவில்லை.

விண்கலத்தில் ஏறிச்செல்ல நானொன்றும் விஞ்ஞானியல்லவே.

அருகிலிருந்து பார்க்க அது அவ்வளவாக அழகாகவும் இல்லையாக…..

ஒரு குழந்தைபோல் காற்றின் முதுகேறி எத்தனை நேரம்தான் பறந்துகொண்டிருப்பது?

ஆற்றங்கரையோரத்தில் கட்டிவைத்திருக்கும் அரிய தோணி அப்படியேயிருந்தாலும்
ஆற்றைக் காணவில்லை.

நேற்றின் ஒரு முனையும் இன்றின் மறுமுனையும்
இறுகித்திருகி முறுக்கிக்கொண்டிருக்கும் நாளைக்குள்
நிற்கத் தோதான நான்காம் சதுரமிருக்கும் என்று நம்ப வழியில்லை.

சுக்கானற்ற நாவாயாய்
பாதாளத்தில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் என் ரயில் வேறு
உலக உருண்டையின் பொன்சாய் வடிவமாய்
குறுகிய வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருப்பதும்
புரிந்துவிட்ட பிறகு _

திரும்பிடத்தான்வேண்டும் முதல் சதுரத்திற்கு….

என்னவொன்று _
சதுரம் சற்றே பின்வாங்கியிருக்கக்கூடும்
வடிவம் கொஞ்சம் சிதைந்திருக்கலாம்.

விட்டுவந்த மரகதப்புற்களும் மண்ணுளிப் புழுக்களும்
இன்னுமிருக்குமோ இருக்காதோ…..

ஆனாலும், ஆழ வேர்ப்பிடித்து அகலவிரிந்திருந்திருக்கும்
அந்த மரத்தின் அடியில்
நிற்க நிழலிருக்கும் எப்போதும்.
அதுபோதும்.