எது நல்ல கவிதை?
- லதா ராமகிருஷ்ணன்

ஒற்றை பாணியையே நல்ல கவிதை என்று நிறுவுவது சரியல்ல.
வாசகரின் எதிர்பார்ப்புகள், அனுபவங்கள், மனத்தடைகள் என பல பரிமாணங்களை உள்ளடக்கியதாகவே இருக்கும் இந்தக் கேள்விக்கான பதில் அல்லது பதில்கள் என்று தோன்றுகிறது.
கவிஞர் வைதீஸ்வரனின் வலைப்பூவில் இன்று புதிதாய் இடம்பெற்றுள்ள அவர் கவிதை அத்தகைய ஒன்று.
கவிஞர் காலமற்றவர் என்பதற்கு சாட்சியமாகும் கவிதை இது!
உள்ளே ஒரு ஓசை
வைதீஸ்வரன்
வயது ஒரு உயிர்மானி
காலத்துக்குள் நம்மை
எறும்புகளாக்கி மெல்ல நகர்த்தி
வளர்ப்பதும் வதைப்பதுமாக
திக்குத் தெரியாத சம்பவக் காட்டுக்குள்
இழுத்துச் செல்லுகிறது
வருஷங்களை வாழ்வாகச் சித்தரிக்கிறது
வெவ்வேறு பிம்பங்களை
எழுப்பி அழித்து ‘நான்’ என்று
நம்பவைத்து நடுவாழ்க்கை
பள்ளத்தாக்குகளில் விழுத்துகிறது.
மேலும் எழுந்து வந்து நமக்குள்
தன்னேய்ப்பை உணர்ந்து தடுமாறும் சமயம்
கைத்தடியைக் கொடுத்து கரையேற்றி விடுகிறது
நகரமுடியாமல் விதி முடிந்த வீதியில் நின்று
திரும்பிப் பார்க்கும் போது
வயது இருந்ததாகத் தெரியாமல்
சுவடற்ற கனவாய் தொலைந்து விடுகிறது.
சிரிப்பதற்கு எனக்கு வாயில்லை

No comments:
Post a Comment