LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, October 15, 2022

புல்லுருவிகளுக்கும் புல்தடுக்கிகளுக்கும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 புல்லுருவிகளுக்கும் புல்தடுக்கிகளுக்கும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு வார்த்தையை நான் சொன்னதுமே
அதன் பொருளை அகராதியில் தேடுகிறாய்
பின் அதை நான் பார்த்த விதம்
சரியில்லை என்கிறாய்
புரிந்துகொண்ட விதம்
சரியில்லை என்கிறாய்
பயன்படுத்திய விதம்
சரியில்லை என்கிறாய்.
வா, வந்து உட்கார் என்னெதிரே –
கற்பிக்கிறேன்’ என்கிறாய்
’வித்தகனாக்குகிறேன் பார் உன்னை
வார்த்தை விளையாட்டில்’ என்கிறாய்
கல்லைச் சிலையாக்குவதாய்
சொல்லைக் கற்றுத்தருகிறேன்’’
என்கிறாய்
நில்லாமல் மேற்செல்கிறேன்.
*** ***
வார்த்தைகளைக்கொண்டு நான் செய்யும்
கழித்தலிலும் கூட்டலிலும்
நீட்டலிலும் பெருக்கலிலும்
குற்றங் காண்பதிலேயே கவனமாயிருக்கும்
உன் சொற்குவியல்களெங்கும்
கரையான் புற்று வளர்ந்தவாறு.
*** ***
குழந்தையா நான்
ஒரு சொல்லை கைபோன போக்கில்
இறைத்துவிட?
அல்லது முழுப் பிச்சியா
உச்சியை அடிவாரம் என்று அறைகூவ?
அழிச்சாட்டியம் செய்ய?
அப்படித்தான் என்று
உன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ளும்
முனைப்பில்
நீ கூறத் துணிந்தால்
உனை வேரறுக்க என்னிடம்
வேறு நிறைய நிறைய வார்த்தைகள்
உண்டு.
*** ***
உன்னிடமுள்ள வார்த்தைகளையெல்லாம்
துலாக்கோலின் ஒரு பக்கத் தட்டில்
கொட்டி
கைதட்டி யெனை அழைத்து
அதட்டலாய்க் கூறுகிறாய்:
"வை உன்வசமிருப்பதை –
யாருடையது அதிக கனமென்று
பார்த்துவிடலாம்"
_ பாவம் நீ
வார்த்தைகள் சிறகு முளைத்தவை என்பதை
உன் அகங்காரத்தில்
அறவே மறந்துவிட்டாய்
*** ***
மனதில் ததும்பும் வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
மென்மலர் போல்
வானவில் போல்
தண்காற்று போல்
தருநிழல் போல்
எரி தழல் போல்
பெருவரம் போல்
அற்புதப் பொற்பதம்போல்
கற்சிலையுருகுகலைபோல்......
கொஞ்சமும் இரக்கமின்றி
மளமளவென்று பிய்த்தெடுத்து
வெளியே கடைபரப்பி
என் கைத்தட்டலையும் கண்ணீரையும்
விலையாகக் கேட்டதும்
விதிர்த்துப்போனேன்
*** ***
உன்னைச் சுற்றி உதிரிப்பூக்கள்
மலையாய்க் குவிந்திருப்பதாய்
பீற்றிக்கொள்கிறாய்.
சரமாய்த் தொடுக்க
நாரும் விரல்களும் அவசியம்தானே.
காற்றில் பறந்துவரும் வாசமுள்ள
மலர்கள்
எல்லோருடைய பார்வைக்கும்
தெரிந்துவிடுவதில்லை.
ஒரு சிறு பூவே பெருங்குவியலாக மாறும்
சூட்சுமம்
உனக்குப் புரியாதவரை
என் விரல்களும் நாரும் வீண் என்கிறாய்.
அதனாலென்ன பரவாயில்லை.
"உன் கண்கள் இரண்டு புண்களாகாமல்
பார்த்துக்கொள்"
என்று சொல்லிச் செல்கிறேன்.
அப்பாலுக்கப்பால்......
*** ***
எனக்கான மொழிநிழலை
நானே தேடிக்கொள்வேன்.
நான் வாசிக்கும் ஒவ்வொரு நூலும்
எனக்குக் கற்றுத்தரும்
நாலும் நாலாயிரமும்.
வல்லவனாகவே இரு –
முடிந்தால் நல்லவனாகவும்.
எனில்
சொல்லுக்கும் எனக்கும்
அணுக்கமான பந்தம்
எல்லாம் தெரிந்தும்
நடுவே இடைத்தரகர் நீயெதற்கு?
விலகிச்செல் மரியாதையாய்.
மூக்கை நுழைக்கப் பார்க்காதே.
இது முதுபெரும் முதலைகள் உள்ள அகழி.

ரௌத்ரம் பழகுதல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ரௌத்ரம் பழகுதல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஓரமாக ஒதுங்கியிருக்கவே விரும்புவேன்
அதையே காரணங்காட்டி
நீ ஒதுக்கித் தள்ள நினைத்தால்
ஓர் உதை விட்டு மையத்திற்கு வந்துவிடுவேன்.

சாமரங்கள் தேவையில்லை யென்றால்
சாமரம் வீசத் தயார் என்றா பொருள்?

தெரியாததை தெரியாதென்றுரைக்க
மனத்தெம்பு வேண்டும்
உலகிலுள்ள எல்லாமும் நல்லாத் தெரிந்ததாக
நாளெல்லாம் பாவனை செய்யும் உனக்கு
அது நிச்சயமாக இல்லைதான்.
பாவம் நீ.

ஆனால், பாவம்பார்ப்பதால்
என்னை பிடித்துத் தள்ளி விட அனுமதிப்பேன்
என்று நீ நினைத்தால்
உன்னை மோதி மிதிப்பதென் அறமெனத்
தெரிந்துகொள்.

இருளிலிருக்கப் பிடிக்கும் என்று சொன்னால்
அதற்காக என்னை குகைக்குள் தள்ளிவிட்டு
நன்மை செய்ததாக
ஊருக்குள் தம்பட்டமடித்துத் திரிந்தால்
விசுவரூபமெடுத்துவந்துன்னை
நார்நாராய்க் கிழித்தெறிய
தாராளமாய் முடியும் என்னால்.

பேர் பேராய்ப் போய் புலம்பியழக்கூடும்
உன்னை யொரு புழுவினும் கீழாய்ப்
பார்த்து
என் வழி நடப்பேன்.
என்ன செய்ய இயலும் உன்னால்?

ஒரு கூட்டத்தில் தனித்துத் தெரிய நான்
பிரயத்தனம் எதையும் செய்வதில்லை.
அதற்காய்
அடையாளம் அழித்து என்னையொரு
மொந்தைக்குள் திணிக்க முயற்சித்தால்
முற்றிலுமாய் இல்லாமலாக்க முனைந்தால்
மறுகணம் உன் கையை
முறித்துப்போடவும் தயங்க மாட்டேன்.

நான் (பாரதியாரின் வரிகள்)

 பாரதியாரின் வரிகள் 

நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்
மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான்
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்!
பாரதியார்

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;

  பாரதியாரின் வரிகள்

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப்

பிறவொன் றில்லை;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்;
பாரதியார்

நீக்கமற…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நீக்கமற….

 ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

வீடுவந்து சேர்ந்த பிறகும்

நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை

தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள

அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்

நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத் தைக்க

கிழிந்த நாளொன்றிலிருந்து சில நூலிழைகள் நைந்து தொங்க

உட்கார்ந்த நிலையில் என் பாதங்கள் இருமாடிப்படிகளிலேறிச் செல்லும்நேரம் வலியெடுக்கும் முழங்கால்கள்

முதுகுமாக மாறிக்கொள்ள

வழங்க வழியில்லாத உணவின் அளிப்புக்காக

அந்தத் தெருமூலையில் சுருண்டுகிடக்குமொரு உருவம்

அழகென்பதன் அர்த்தமாக இருந்திருக்கும் அக்காலம்

திரும்பிக்கொண்டிருக்கலாகும் இச்சமயம் அதனுள்

புள்ளுக்கும் புல்லுக்கும் இடையான வேறுபாடு

உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லை

யெனச் சொல்லுமாறு ஊரு பேரு காரு தேரு

நீறு சேறு பேறு வேறு கூறு பாரு

போகுமாறு

பாரு பாரு நல்லாப் பாரு

பயாஸ்கோப்பு படத்தைப் பாரு

என்னான்னு வந்து பாரு என்றழைக்கும் மனம்

கூவியவாறிருக்க

கேட்டுக் காலெட்டிப் போட்டபடி போய்க்கொண்டிருக்கும் என் மெய் உயரத்தைச்

சிறிதே கூட்டிக்காண்பிக்க விரும்பி அணிந்துகொண்டிருக்கும் காலணிகளில் ஒன்று என்னை வீதியோரம் உருட்டப் பார்ப்பதை

ஜன்னல்வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த அணிலின் குட்டிவால் சற்றே விலகிக் காட்டியதில் பதறும் மனம்

நிதானமாய் நிறுத்தி அழுத்திக் கேட்கும்

வழக்கம்போல்

நான் எங்கே இருக்கிறேன்……

அழகு - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அழகு

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

சுடர்விடும் கண்களில்லை; அடர்கூந்தல் அலைபாயவில்லை;

கன்னம் குழியவில்லை;

குரலில் தேன் வழியவில்லை;

குலுங்கிச் சிரிக்கும் அரிய பொழுதுகளில்

சதைப்பிடிப்பற்ற அந்த தேகத்தில் ஆங்காங்கே

எலும்புகள் புடைத்து சுருக்கங்கள் வெளிப்பட்டன.

குறுக்குமறுக்கான வினோத வரிசையிலிருந்த பற்கள்

COLGATE, SENSODYNE DABUR RED பற்பசை விளம்பரங் களுக்கான வெண்மையில்

மின்னவில்லை.

என்ன யிருந்தாலும் அதிபலவீன தருணமொன்றில்

கதிகலங்கிநின்றவனை

கைப்பிடித்தழைத்துச்சென்றொரு ஆலமர நிழலில்

அமரச்செய்தவளின் கனிவு

அழகோ அழகு!

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி

என்றவனின் கண்ணம்மா

என்னமாயிருந்தாளோயார் கண்டது?