LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, August 12, 2021

அருள்பாலிப்பு - ‘ரிஷி' (லதா ராமகிருஷ்ணன்)

அருள்பாலிப்பு

 ரிஷி'

(லதா ராமகிருஷ்ணன்)

புதிதாய்ப் பிறந்திருக்கும் நாளை யொரு

பிள்ளையைப்போல் கையிலேந்திக்கொண்ட

அந்தப் பாடல்

தன் மாயக்கோலால் பஞ்சுமிட்டாயை

வரவழைத்து

அதன் மென் உதட்டில்

ரோஜாவர்ண மிட்டாய்த்துளியை

மிருதுவாகத் தடவுகிறது.

இனிப்புணரும் அந்தக் குழந்தைவாய்

அதன் விழிகளாய்

விழிகள் அதன் வாயுமாய்

கூடவே யதன் சின்னக்கைகால்கள்

மேலுங்கீழுமாக

ஒரு தாளகதியில்அசைவதுமாய்

குழந்தையின் மொத்தமும் ஆனந்தம்

பொங்க

விகசித்துச் சிரிக்கிறது.

சரசரவென்று வளர்ந்துவிடும்

குட்டிப்பெண்ணை

மூடப்பட்டிருக்கும் பள்ளிக்குள் கைப்பிடித்து

அழைத்துச்செல்லும் பாடல்

அவளோடு கலந்துரையாடவும் குலுங்கிச்

சிரிக்கவும்

கத்தி ரைம்ஸ் சொல்லவும்

காற்றின் போக்கில் கைகளால்

ஏரோப்ளேன் ஓட்டவும்

இன்னும் சில பிள்ளைகளையும் அங்கு

கொண்டுவந்துசேர்க்கிறது.

மதியவெயிலில் நாள்பிள்ளை நாவறண்டு

தவிக்கையில்

எப்படித்தான் அந்தப்பாடல்

குச்சி ஐஸாக மாறியதோ!

மாலை வீடு திரும்பும் வழியில்

வீதியோரமாக சோப்புநுரைக்குமிழ்களாக

தலைக்குமேலே தவழ்ந்துவந்தது.

மெல்ல மெல்ல வளர்ந்து யுவதியாகிவிடும்

நாளின் கையில்

ஒற்றை ரோஜாவைத் தருகிறது.

அந்த ரோஜாவை அன்பளிப்பதற்காகவே

யாரையேனும் ஆசைதீரக் காதலிக்க

வேண்டுமென்று தவிக்கும் பெண்மனதைப்

பார்த்துக் கண்சிமிட்டும் பாடல்

அப்படியென்றால் எனக்கில்லையா என்று

கேட்பதுபோல் தோன்றுகிறது.

மனம் தழுதழுத்து நிற்கும் நாளின் கையில்

நான்கு வானவிற்களைத் திணிக்கும் பாடல்

நேசம் பொங்கக் கையை நீட்டி

'அந்த நாலிலிருந்தும் உனக்குப் பிடித்த

வண்ணங்களை எடுத்து

புதிதாயொரு வானவில் செய்து

எனக்குத் தா' என்கிறது.

அந்த நான்கு வானவிற்களையும்

ஓரமாக வைப்பவள்

எண்ணிறந்த வானவிற்கள் 

இரண்டறக்கலந்தொளிருமொரு

எளிய கவிதையை

எழுத ஆரம்பிக்கிறாள்.

 

 

 

No comments:

Post a Comment