’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’யார் மணிகட்டுவது’ என்பதை
’யார் கட்டிவிடப்போகிறார்கள்’
என்றும்
’யாரும் கட்ட வரமாட்டார்கள்’
என்றும்
’யாராலும் கட்டிவிடமுடியாது’
என்றும்
பேர்பேராய்த் தந்த பொருள்பெயர்ப்பைப்
பெரிதும் நம்பிக்கொண்டிருந்த
பூனை _
இரவுபகல் பாராது
விரும்பிய நேரமெல்லாம்
பாய்ந்து பிடுங்கி
பற்களால் பெருங்கூர் வளைநகங்களால்
பிய்த்தும் பிறாண்டியும்
தானியங்கள் நிறைந்திருக்கும்
கோணிப்பைகள்
பால் பாக்கெட்டுகள்
அந்த அறையில்
சலவை செய்யப்பட்டு
அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்
புதுத்துணிமணிகள்
பார்த்துப் பார்த்து கவனமாய்
எழுதிய
கவிதைகள்
கணக்குவழக்குகள்
பத்திரப்படுத்திய முக்கிய
ஆவணங்கள்
போர்வைக்கு வெளியே நீண்டிருக்கும்
பிள்ளைகளின் கணுக்கால்கள்
பிறந்தகுழந்தையின் மென்கன்னம்
என கிழித்துக் குதறி ரத்தம்
கசியச் செய்து
ரணகாயமுண்டாக்கிக்கொண்டிருந்தது
இத்தனை காலமும்……
எலிகளிடமிருந்து ஆட்களைக்
காக்கும்
வீட்டுக்காவலனாய்
விட்டால் காட்டுராஜாவாகக்கூடத்
தன்னை பாவித்துக்கொண்டிருக்கும்போலும்……
இன்று தன் கழுத்தில் மணி
கட்டப்பட்டது எப்படி
என்ற விடைதெரியாமல் அது
நழுவிப் பம்மி இருள்மூலையில்
பதுங்க _
’பாவம் பூனை, அதன் பிரியத்தைப்
புரிந்துகொள்ள
மனமற்றோர் மாபாவிகள் என்று
’பிராணியெல்லாம் மனிதனுடைய
கொத்தடிமைகளே’
என்று நித்தம் நித்தம்
அத்தனை திராணியோடு
அடித்துப்பேசிக்கொண்டிருந்தவர்கள்
கோபாவேசமாக சீறத்தொடங்க
_
பேய்மழைக்குக் குடை விரித்த
பாங்கில்
வீடுகள் ஆசுவாசமடைய _
மணியோசைக்கு பயந்து பூனை
இருள்மூலையில் மலங்க மலங்க
விழித்துநிற்க_
’இந்தக் கதையில் நீதி உண்டோ ?’
எனக் கேட்டவரிடம்
உண்டென்றால் அது உண்டு;
‘இல்லையென்றால் அது இல்லை’ என்று
வெறும் உருவகமாகிவிட்ட பூனை
மனிதக்குரலில் ’மியாவ்விட்டு
மேலும் சொன்னது :
கற்க கசடற.
எனக் கேட்டவரிடம்
உண்டென்றால் அது உண்டு;
‘இல்லையென்றால் அது இல்லை’ என்று
வெறும் உருவகமாகிவிட்ட பூனை
மனிதக்குரலில் ’மியாவ்விட்டு
மேலும் சொன்னது :
கற்க கசடற.
No comments:
Post a Comment