LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, August 14, 2018

விசுவாசம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

விசுவாசம்
’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)



எல்லோருமே யாருடைய அல்லது எதனுடைய விசுவாசிகளாகவோதான் இருக்கிறார்கள்.


விசுவாசம் உண்மையில் நல்ல விஷயம்தான்….

பிரச்னை என்னவென்றால்
தன்னுடைய விசுவாசத்தை அறிவார்த்தமானது என்றும்
இன்னொருவருடைய விசுவாசத்தை
ஆக்கங்கெட்டதாகவும்
அன்றாடம் அவர்கள் மண்ணில் கையடித்து
சத்தியம் செய்துகொண்டே யிருக்கிறார்கள்.

விசுவாசிகளில் ஒருசாரார் மறுதரப்பினரை
மின்னஞ்சலிலும் குறுஞ்செய்தியிலும் முகநூலிலும்
அச்சு ஒளி ஒலி ஊடகங்களிலும்
யூ-ட்யூப், ட்விட்டர், சுவரொட்டிகள் சோப்பு விளம்பரங்கள்
என ஒன்றுவிடாமல்
எல்லாத்திசைகளிலிருந்தும் வந்தபடி
வழிமறித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

அதேபோல் மறுசாராரும்.

அதற்கென்றே செய்துவைத்திருக்கும்
கண்ணுக்குப் புலனாகாதவகையில்
ஒருபக்கமாகவே சரிந்திருக்கும் 

துலாக்கோலை கக்கத்திலிடுக்கிக்கொண்டு
உலாவந்துகொண்டிருக்கிறார்கள்.

சதாசர்வநேரமும்
மல்லாந்தபடியே பக்கம்பக்கமாய்
ஒருவர்மேல் ஒருவர்
காறித்துப்பிக்கொள்கிறார்கள்.

உன் விசுவாசத்திற்குரியது / குரியவர் உத்தமரா என்று எதிர்தரப்பிலிருந்தொருவர்
எகத்தாளச் சிரிப்போடு பெருங்குரலெடுத்துக்கூவ
பதிலுக்கு உன் விசுவாசத்திற்குரியவர் பத்தரைமாற்றுத்தங்கம்
என்று நீதான் மெச்சிக்கொள்ளவேண்டும் என்று
முதல் தரப்பினர்
தாவிக்குதித்துக் கூச்சலிடுகிறார்.

குறிப்பு: வசைகளில் மிக நாகரீகமானவை மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளன.

அனைத்துத் தரப்பு விசுவாசிகளும்
சதாசர்வகாலமும்
எதாவது நஞ்சைக் கக்கிக்கொண்டே
துக்கப்படுத்துவதும் துக்கித்திருப்பதுமாக
அரிதாய்க் கிடைத்திருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும்
அற்பமானதாக்கிக்காட்டப்
பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடையதை மட்டுமா?


No comments:

Post a Comment