LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 7, 2018

தீராத் தனிமொழி சீதையின்…… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


தீராத் தனிமொழி சீதையின்……

ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)


அசோகவனத்தில் என்னை சிறைவைத்திருந்தவருக்காக
ஆயிரம் வழக்குரைஞர்கள், அத்தனை வாய்தாக்கள்,
குறுக்குவிசாரணைகள்பொய்வாக்குமூலங்கள்பிறழ்சாட்சிகள்
அன்றிலிருந்து இன்றுவரை…..

 அதெப்படி மனம் வந்ததோ தெரியவில்லை _
என் மணாளனையும் மிருகத்தனமாய் என்னைக் கடத்திக்கொண்டுபோனவனையும்
தாங்களாகவே தராசிலிட்டு
பின்னவனே பேராண்மையாளன் என்று நான் எண்ணியதாகக்கூட
துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய்ச் சொன்னவர் பலபேர்…..

 அவர்களில் பெண்ணியவாதிகளும் கூட இருந்ததைக் கண்டு
கண்கலங்கிக் கருத்தழிந்த காலம் நிழலாய்ப் பின் தொடரும்…..

கனலுக்குள் திரும்பத்திரும்ப இன்னும் எத்தனை காலம்
இறங்கிக்கொண்டேயிருக்கவேண்டுமோ…..

சூர்ப்பனகை மதிப்பழிக்கப்பட்டதற்கு பதிலடியாய் நேர்ந்தது இது
என்று தீர ஆராய்ந்து பேசுவதாக
திரும்பத்திரும்பச் சொல்பவர்கள் உண்டு.

 நீதிமான்களேநியாயவான்களே
அடிக்கு அடி அசோகவனம் வெருட்ட, அவமானம் உயிர் உருக்க
தினம் சுருக்கிட்டுச் செத்த மனம் _
ஐயோ என்னவொரு கனம்….

 சுமந்தவாறு வழியேகிக்கொண்டிருக்கும்
என் எளிய பிரார்த்தனை இதுவே.
உங்கள் வீட்டுப்பெண்கள் எல்லோரும் பத்திரமாயிருக்கட்டும்.
வரித்தவனோடு வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை வாய்க்கட்டும் அவர்களுக்கு.

துஞ்சாமல் நானங்கே துவண்டிருந்த அவலத்தை 
எண்ணுந்தோறும்
நெஞ்சு பதறும் அதிரும் சிதறும் கதறும்.

என் ஆறா ரணத்தின் வலி சொல்லுக்கப்பால் 
வெகுதொலைவில்.

ஆன்றோரே சான்றோரே -
உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்  _

அன்றாடம் என்னை வரிகளில் கடைபரப்பி
கூறுபோட்டு கூவிக்கூவி விற்காதீர்கள்.

No comments:

Post a Comment