LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, October 18, 2016

கோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும்

கோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும்
 ரிஷி

ரோமில் இருக்கும்போது ரோமானியர்களாக நடப்பதுதான் நல்லது”. 
(
ரோம் என்றால் மன்னனா மக்களா என்று யாரும் கேள்வி கேட்கலாகாது).

ரோம் தீப்பற்றி எரிகிறது.
கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸ் ஃபிடில் வாசித்துக்கொண்டிருக்கிறான்
இன்னமும்கூட.

காலப்போக்கில் நீரோ கிளை பிரிந்து பல்கிப் பெருகி
இன்று அடிக்கு அடி தட்டுப்பட்ட வண்ணம்…..

ரோம் தீப்பற்றி யெரியட்டுமே
அதற்காக இசையை வாசிப்பதும் ரசிப்பதும் எப்படி
இங்கிதமற்றுப்போகும்
என்று தர்க்கம் செய்யத் தெரிந்தவர்கள்
தேவையான பாதுகாப்புக்கவசங்களோடு
தலைமறைவாயிருந்தபடியே
தத்தமதான பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சிலர் கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறார்கள்
சிலர் தீயின் வெப்பத்தை அளக்க புதுக்கருவி தயாரித்துக்
கொண்டிருக்கிறார்கள்;
சிலர் தீ கருக்கிய இடங்களில் தண்ணீர் தெளித்து 
கோலமிடப் பார்த்துக்கொண் டிருக்கிறார்கள்;
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், 
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்என்று 
கண்ணதாசனின் வரிகளை இரவல் வாங்கியாவது
தவறாமல் தத்துவம் பேசுகிறார்கள் சிலர்;
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்என்று பாரதியை 
மனப்பாடமாய்ச் சொல்கிறார்கள் சிலர் 
(
மறந்தும் பின்பற்றமாட்டார்)

துக்கிரித்தன்மாய் தீயையையும் மூட்டி ஃபிடிலையும் வாசிக்கிறானே 
இக்கரை இக்கால நீரோ மன்னன், இவன் கொடுங்கோலனல்லவா 
என்று கேட்டுவிட்டால் போதும்
கண், காது, வாயைப் பொத்திக்கொண்டுவிடுகிறார்கள்.
காந்தியைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்களாம்.

இன்னும் சிலர் 
சில நேரங்களில் சில மனிதர்கள்என்று புன்சிரித்துக் கூறி
ஃபிடிலையும் அதைப் பிடித்திருக்கும் நீரோவின் கையையும்
வருடித்தருகிறார்கள்.

ஐயோ ரோம் எரிகிறதே என்றால்
புனரபி ஜனனம், புனரபி மரணம்
காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று 
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில்
ஆறுதலளித்து அவரவர் வழி சென்றவண்ணம்
சுற்றிலும் கேட்கும் வலியோலங்களை 
அலைபேசியில் படம்பிடித்தபடியே
அகன்றேகுகிறார்கள்.

நீரோ வாசிக்கும் இசைக்குத் தவறாமல் தலையாட்டியப்டி
தீயில் கருகும் சக ரோமானியர்களிடமிருந்து பார்வையை
அகற்றியபடி
சுற்றுலா செல்கிறார்கள்.

அனுமனுக்குஆச்சரியம் தாளவில்லை
அதெப்படி இந்திரஜித்தைப் போல இவர்களால்
நினைத்த நேரத்தின் அருவமாகிவிட முடிகிறது!

அதேசமயம், போர்க்களத்தின் ஒவ்வொரு அசைவும் 
அவர்களுக்குத் தெரிந்தேயிருக்கிறது என்பது
அவர்கள் பாடும் இரங்கற்பாக்களிலிருந்து புலப்படுகிறது….

நவீன தமிழ்க்கவிதையின் பொருள் போலவே
நீரோவின் தீயும்என்று 
கவிதை யாப்பதென்ன அவர்களுக்குக் குதிரைக்கொம்பா?

வால்நுனித் தீயைக் கடலில் முக்கி அணைத்தது தவறோ
என்று தனக்குத்தான் கேட்டபடியே அண்ணாந்த  அனுமன் கண்களில்  
புஷ்பக விமானம் தெரிகிறது வீங்கிப் புடைத்து.

எரியும் மக்களோடு ஸெல்ஃபி பிடித்துக்கொள்ளவும், 
கூடவே நீரோ க்ளாடியஸிடம் நலம் விசாரிக்கவுமாய்
ரோமுக்குப் புறப்பட்டுச் செல்வோர் எண்ணிக்கை 
அதிகமாகிக்கொண்டே.

No comments:

Post a Comment