கவிதை
‘ரிஷி’
முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி.
முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன்.
சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்…
சற்றே மூச்சுத்திணறுகிறது.
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான்
‘நட்புக்கான கோரிக்கைகள்’ பக்கம் நகர முடியும்.
தவறாக நினைத்துவிடவேண்டாம்.
அதுசரி, நட்பென்றாலே பரஸ்பரம் தானே?
இதில் என்ன தனியாய் ‘mutual friend’? - சாதா தோசை மசாலா தோசை கணக்காய்…
ஏதும் புரியவில்லை.
Mutual friend, actual friend ஆகிவிடமுடியுமா ?
Actualக்கும் Factualக்கும் இடைத்தூரம்
என்ன?
தொலைவா, விரிவா, பள்ளமா, அகழியா?
மனம் அதன் போக்கில் தனியாவர்த்தனத்தில் லயித்தபடி…..
எத்தனை அன்போடு என்னை நட்பாக்கிக்கொள்ள முன்வந்திருக்கிறீர்கள்!
‘எந்தரோ மகானுபாவுலு – அந்திரிக்கு வந்தனம்’
(சுந்தரத் தெலுங்கிலும் பாட்டிசைப்போம்; சமஸ்கிருதம் செத்த மொழியெனில், சாகுந்தலம்?)
நிற்க, சில முன்நிபந்தனைகளோடு கூடிய எதிர்பர்ர்ப்புடையவர்களுக்காய்
இந்த எளிய சுயவிவரக்குறிப்பு.
எனக்கு ‘மோடி’யைப் பிடிக்கும்; மாதொருபாகன் புதினம் பிடிக்காது;
‘One Part Woman’ என்ற அதன் ஆங்கிலத் தலைப்பு ஆபாசத்தின் உச்சம்.
எச்சம் போட்டுச் செல்லும் காக்காயை விரட்டுவதா, அல்லது
தலையைத் துடைத்துக்கொள்வதா
எதைச் செய்ய முதலில் என்ற கேள்வியே எப்போதும் மிச்சமாகும்.
மனப்பிறழ்வில்லை என்றாலும் மணிக்கணக்காய் என்னோடு மட்டுமே
பேசிக்கொண்டிருக்கப் பிடிக்கும்.
பிறப்பெனும் விபத்தால் முற்படுத்தப்பட்ட சாதியினள்.
(அதனால் ஆணவக்கொலையை ஆதரிப்பவள் என்று அர்த்தமல்ல)
SBIயில் தற்போதைய சேமிப்பு 80 ரூபாய்.
குணம்நாடிக் குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மனங்கொண்ட நட்பை
அவர்தம் ஒரு சொல்லுக்காய், செயலுக்காய் பல்லுமேல ஒண்ணுபோட்டு
கழுதைமேல் ஏற்றிவிடல் இயலாத காரியம்.
(நானே கரும்புள்ளி குத்தி அத்துவிட்டுவிட நேரலாம். அது வேறு விஷயம்)
சாதியின் பெயரால் ஒரு சககவியைச் சிறுமைப்படுத்தவோ
அவர் கவித்துவத்தைச் சேற்றில் துவைத்தெடுக்கவோ
ஒருபோதும் ஒப்பாது என் மனம்.
உன்னதமாக உணரும் ஒவ்வொரு கவிதையும் எனக்கோர் புனிதப்பயணம்.
எழுதியவர் கடவுள். தூணிலும் இருப்பார்
- துரும்பிலும் இருப்பார்.
உள் கடந்து உள் கடந்து உன்மத்தக் கள்வெறியில்
என்னிடமிருந்து உன்னிடமிருந்து அவரிடமிருந்து எவரிடமிருந்தும்
நல்வினையாய்க் கிடைக்கும் சொல்வளங்களைச்
சேகரித்தபடியே
வாய்த்த ஒற்றையடிப்பாதையில் என் வழிச்செலவு தொடரும்.
”சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா?” என்று உங்கள் நல்ல கவிதை யென்னை
வாய்நிறைய நலம்விசாரிக்கும்போதெல்லாம்
கண்கலங்கிவிடும்.
என்மீது சகதியை வீசுபவர்களோடு ஒண்டிக்கு ஒண்டி சண்டையிடவே விரும்புகிறேன்
யாரையும் துணைக்கழைத்ததில்லை; யாரும் தோள்கொடுத்ததுமில்லை.
அதனாலென்ன பரவாயில்லை. அவ்வாறே
’நான் காய்விட்டிருப்பவரோடு நீயும் காய்விட வேண்டும்’ என்று என்னைக் கட்டாயப்படுத்தக்கூடாது நீங்கள் -
சரிதானே?
மாற்றுக்கருத்தென்றாலும் மடேரென என் தலையைக் கருங்கல்லில் மோதாமல்
வாய்வார்த்தையாய் சொல்லலாமே!
சுவரிருந்தால்தான் சித்திரம் -மித்திரர்களாவதும் சாத்தியம்.
அதி கவனம் தேவை. பத்திரம்.
அறவுரைக்கத் தொடங்கிவிட்டேனோ நானும்?
’அடச் சே’ என்று தோன்றினால் Unfriend செய்துவிடுங்கள் friendஆகும் முன்பாகவே!
இறுதியாய் ஒரேயொரு வேண்டுகோள்
முகநூல் வெளியின் உள்ளோ, வெளியிலோ நட்பினராவோமெனில்
பின்னொரு காலை ‘
ஏதேனுமொருநாள் நான் உங்களை அலைபேசியில் அழைக்க நேர்ந்தால் _
Familiarity breeds contempt’ என்ற உறுதியான சுருக்குக் கயிறு இறுக்கினாலும்
இருவர்க்கிடையேயான ஹாட்-லைன் என்று நான் மனதார நம்பும் கைப்பேசியை
அருகிலிருப்பவர் கையில் கொடுத்து பதிலளிக்கச்
செய்து
என்னை அவமதித்துவிடாதீர்கள்.
ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகிறேனே என்று விருப்பம் தெரிவித்தால்
காதுகேளாததாய் பாவனை செய்து என்னை அசிங்கப்படுத்திவிடாதிர்கள்.
*
No comments:
Post a Comment