LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, February 20, 2016

எந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து…..

எந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து…..

லதா ராமகிருஷ்ணன்

ரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத் தமிழ் இலக்கியவெளியில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் கவிஞர் சொர்ணபாரதி (இயற்பெயர்: முகவை முனியாண்டி) கல்வெட்டு பேசுகிறது என்ற சிற்றிதழைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக வெளியிட்டுவருவதன் மூலம் எழுதும் ஆர்வமுள்ள பலருக்குக் களம் அமைத்துத் தருபவர். நுட்பமான கவிஞர். கல்வெட்டு பேசுகிறது இதழ்களில் இடம்பெற்றுள்ள தலையங்கங்கள் இவருடைய சீரிய சமூகப் பிரக்ஞைக்கும், அரசியல் பிரக்ஞைக்கும் சான்று பகர்பவை.

சமீபத்தில் ‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ என்ற தலைப்பிட்ட இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. நல்ல இலக்கிய நூல்களை ஆர்வமாக வெளியிட்டு வரும் தோழர் உதயக்கண்ணனின் அன்னை ராஜேஸ்வரி பதிப்பக  (bookudaya@ gmail. com) வெளியீடு இது. சென்னையில் நடந்த இந்த நூலுக்கான அறிமுக விழாக் கூட்டத்தில் கவிஞர்கள் கிருஷாங்கினி, அரங்க மல்லிகா, தமிழ் மணவாளன், நான் மற்றும் பலர் கலந்துகொண்டு நண்பர் சொர்ணபாரதியின் கவிதைவெளி குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம்.

Description: C:\Users\Mveer\Desktop\DSC_0014.jpg


எந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்  தொகுப்பில் இடம்பெறும் என் எண்ணப்பதிவுகள்

_லதா ராமகிருஷ்ணன்

யோசித்துப்பார்த்தால் நாம் [நான் அல்லது நீங்கள் அல்லது அவர்(கள்)] எப்போதுமே மற்றவர்களோடு தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால், நம்மோடு நாம் பேசிக்கொள்வதேயில்லையா….? கண்டிப்பாக பேசிக்கொண்டுதானிருக்கிறோம்.  நம் எண்ணம் என்பது உண்மையில் நம்மோடு நாம் நடத்துகின்ற தொடர் உரையாடல் தானே! இன்னும் சொல்லப்போனால், மற்ற எவரோடும் பேசிக்கொண்டிருக்கும் போதுகூட நமக்குள் நாம் நடத்துகின்ற இந்த ‘நம்மோடு நமக்கான’ உரையாடல் (குறுக்கீடுகளோடும், குறுக்கீடுகளின் றியும்) நடந்துகொண்டேதானிருக்கிறது.

இதில் கவிதை என்பது என்ன? கவிதைக்கான தேவை என்ன? இலக்கியப் படைப்புகள் யாவுமே (மேம்போக்கானவை உட்பட) ஒரே சமயத்தில் பல பேரோடு நாம் மேற்கொள்கின்ற உரையாடல்கள்தான். ஒரு கருத்தை, அல்லது உணர்வை ஒரே சமயத்தில் பலருக்கு எடுத்துச்செல்லும் எத்தனம்தான். ஆனால், நல்ல படைப்பு அல்லது நிஜமான படைப்பு என்பதைப் பொறுத்தவரை, எழுதும்போது படைப்பாளி இந்த உரையாடலை முதலில் ஆத்மார்த்தமாக தனக்குத் தானே, தானாகிய தன்னிலிருந்து கிளைபிரிந்திருக்கும் எண்ணிறந் தோரிடம்தான் மேற்கொள்கிறார்.

இதில், கவிதையின் அளவில், ‘மந்திரமாவது சொல்’ என்பதற்கேற்ப, தான் மொழியும் எந்தவொரு வார்த்தையும் விரயமாகிவிடலாகாது, அனர்த்தமாகிவிடலாகாது, அதீதமாகிவிட லாகாது என்ற முழுப் பிரக்ஞையோடு, மிகச் சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு கவிதையை உருவாகுவதில் கவிஞர் தன்னோடு தான் பரிபூரண மான உரையாடலை, தொடர்புறவாடலை நிகழ்த்திவிட்டதாக ஒரு நிறைவமைதியைப் பெறுகிறார். தொடர் அலைக்கழிப்பே கூட கவிதையில் நிறைவமைதி தருவதாகிவிடு கிறது.

இவ்விதமாய், ஒரு கவிஞரின் கவிதை அவருக்குள் இருக்கும் அனேகரிடம் பரிவதிர்வை முதலில் ஏற்படுத்துகிறது. .பின், அவர்களிடமிருந்து கவிஞருக்கு வெளியே எழுத்துவடிவில் பரவுகிறது. இந்தப் பரிவதிர்வு ஒரு கவிதை தெளிவாக, ஒற்றையர்த்தத்துடன் புரிந்துவிடு வதால் ஏற்பட்டுவிடக்கூடியதல்ல. புரிதலுக்கும் மேலாக கவிதைக்குள் இடம்பெற்றிருக்கும் ஏதோ ஒன்று வாசக மனதைத் துளைத்து ஊடுருவுகிறது. இங்கே வாசகர் என்பது கவிஞருக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்களைக் குறிக்கிறது.

கவிதை வெறும் நாட்குறிப்பு அல்ல என்பதை நாமெல்லோருமே ஏற்றுக்கொள்வோம். நாட்குறிப்பாகவே எழுதப்பட்டிருக்கும் விஷயங்களிலும், தன்னிலை விளக்கமாகவே எழுதப்பட்டிருக்கும் விஷயங்களிலும் அவற்றைத் தாண்டி வேறு பலவற்றையும் உள்ளடக்கும் ஒரு விரிவெளி, ஆழ்பள்ளத்தாக்கு இடம்பெற்றிருக்கும்போது மட்டுமே ஒரு கவிதை கவிதையாகிறது எனலாம்.

முப்பது வருடங்களுக்கும் மேலாக நவீன தமிழ் இலக்கிய உலகில் உத்வேகத்தோடு இயங்கிவரும் தோழர் சொர்ணபாரதி கனிவான மனிதர். சமூகப் பார்வையும், அக்கறையும் கொண்டவர். குறிப்பாக, வட சென்னை வாழ் இலக்கியத் தோழர்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய படைப்புகளுக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு, கல்வெட்டு பேசுகிறது’ மாத இதழைத் தொடங்கி, நிறைய இடையூறுகளுக்கிடையில், பொருளாதாரச் சிக்கல்களுக்கிடையில் ‘இன்றளவும் அதைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுவருபவர்.

‘நான் தான் கவி ; நானே கவி’ என்று தன்னை அடிக்கோடிட்டுக் காட்டிக்கொள்ளும் பகீரதப் பிரயத்தனங்களோ, ‘நவீனத் தமிழ்க்கவிஞர்கள் பற்றிய வரலாறுகளில், பட்டியல்களில் தன் பெயர் இடம்பெறவில்லையே’ என்ற புலம்பல்களோ தோழர் சொர்ணபாரதியிடம் என்றுமே கிடையாது! கவிதை எழுதக் கிடைத்ததே அரும்பெரும் கொடுப்பினையாக ஆரவாரமற்று, தொடர்ந்து கவிதைகள் எழுதிவருகிறார்.

இவருடைய கவிதைகளில் மிக எளிமையான மொழியில் / கவிதைக் கட்டமைப்பில் எழுதப்பட்டவையும் உண்டு. அடர்செறிவான மொழியில் பூடகமும், இருண்மையுமாக எழுதப்பட்டவைகளும் உண்டு!. தமிழ்க்கவிதைகளைத் தொடர்ந்து வாசித்துவருபவர் என்றவகையில் நவீன தமிழ்க்கவிதைப் போக்குகள், தேக்கங்கள், அரசியல்கள் எல்லாமே அறிந்தவர். அவரளவில் கவிதைக்கான கருவை அவர் முன்கூட்டியே தீர்மானித்துக்கொள் பவராகத் தெரியவில்லை. (சமூக அக்கறையோடு சில கருப்பொருட்களைத் தெரிவுசெய்து கொள்ளலாம். ஆனால், அதுவே, எதை எழுதினால் உடனடி கவனம் கிடைக்கும் என்ற கணிப்போடு எழுதுதல் கவிதைக்கு நியாயம் செய்வதாகாது). ஒரு கருத்தை, உணர்வைக் கவிதையாக எழுதவேண்டிய தேவையை உணரும்போது, அந்த வடிகாலுக்கான அவசியத்தை உணரும்போது மட்டுமே எழுதுபவராகவே தெரிகிறார் தோழர் சொர்ணபாரதி. அப்படி எழுதப்படும் கருப்பொருள் அதற்கான மொழிநடையைத் தானே முடிவுசெய்து கொள்கிறது என்பதை இவருடைய கவிதைகளின் மூலம் நிறுவமுடியும்.

‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ என்ற தலைப்பிட்ட இந்தக் கவிதைத் தொகுப்பில் ஏறத்தாழ 50 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. வாழ்வின் நிலையாமை, வாழ்வில் நேரும் உறவுகளின் நிலையாமை, தனிமை, அந்நியமாதல், சமூக ஏற்றத்தாழ்வுகள், இயற்கை, சுற்றுச்சூழல் மாசு என மனிதவாழ்வைக் கட்டமைக்கும் பல்வேறு இன்றியமையாத அம்சங்கள் தோழர் சொர்ணபாரதியின் கவிதைகளாகியிருக்கின்றன. காலத்தை சிறு சிறு கணங்களாகச் செதுக்கிப் பார்க்கும் நுண்ணுணர்வும், நுட்பமும், விழைவும், வேட்கையுமாய் விரிந்துகொண்டே போகிறது சொர்ணபாரதியின் கவிவெளி.

தொகுப்பின் தலைப்பைக் கொண்டு இடம்பெற்றுள்ள கவிதை ‘எந்திரங்களினால் கிடைக்கும் நன்மைகளை அனுபவித்துக்கொண்டே அவை குறித்து அங்கலாய்க்கும் வழக்கமான மனோபாவத்திலிருந்து மாறுபட்டு ‘எப்படியாயினும் / எந்திரங்கள் மிக அன்பானவை / அவற்றோடு பயணிக்கப் பிடிக்கிறது / வாழ்ந்திடவும் ‘ என்று நிறைவுறுகிறது. ‘அவை வரையறுக்கப்பட்ட / செயல் திட்டங்களுடனான / மூளைகளைக் கொண்டவை / அவற்றின் இதயமும் கூட / மூளைக்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும்–’ என்பதாய் விரிந்துகொண்டே போகும் கவிதையில் ‘எந்திரம்’ தொடர்ந்து குறியீடாகச் செயல்பட்டுக் கொண்டே வருவது ,கவிதையின் இறுதிவரிகளான ‘அவற்றோடு பயணிக்கப் பிடிக்கிறது / வாழ்ந்திடவும்‘ என்ற வரிகளில் தெளிவாகிவிடுகிறது!

பொருளற்ற வார்த்தைகளின் பொருள்’ என்ற கவிதையில் வரும் அணிலும் அழகிய, அழுத்தமான குறியீடு. ஒரு கவிதையில் இடம்பெறும் இத்தகைய குறியீடுகளே, அவற்றின் இடப்பொருத்தமே கவிதையை கவிதையாக்குகின்றன என்று தோன்றுகிறது.

வழக்கமான நான் – நீ கவிதைகள் இந்தத் தொகுப்பிலும் உண்டு. ஏற்கனவே நிறையப் படித்துவிட்ட அயர்வை உண்டாக்குபவை சில. நெகிழ்வூட்டுபவை நிறையவே!

மறைந்திருக்கும் உன் உயிரின் / ஓசை கேளாது நீயோ/ வந்துபோன உறவுகளைப் பற்றியும்/ விவரித்துக்கொண்டிருக்கிறாய் (புறக்கணித்தல்) போன்ற வரிகளில் அரிய வாழ்க்கைத் தத்துவங்கள் வெகு இயல்பாக, எனில் வலியோடு வெளிப்படுகின்றன

‘வரமும் – சாபமும்’ கவிதை நேர்ப்பேச்சாக, உரைநடைத்தன்மையோடு அமைந்தாலும் நெகிழ்வூட்டத் தவறவில்லை. ‘பச்சைத் தவளைகள்’ கவிதை ‘பழந்தமிழ் பாடல் மரபில் எழுதப்பட்ட, முழுக்க முழுக்கக் குறீயீடுகளாலான நவீனக் கவிதை.

கடவுள் எப்போது உருவாகலாம் / உருவாக்கப்படலாம் (பொம்மை வெளி) என்று ஒரே சமயத்தில், நாலே வார்த்தைகளில் ‘கடவுள்’ என்பதன் விரிந்துகொண்டே போகும் இருமுனைகளைச் சேர்க்க முடிந்திருப்பது தோழர் சொர்ணபாரதியின் கவித்துவத்திற்கு, கவியாக அவர் பெற்றிருக்கும் ‘விரிந்த’ பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு!

தள்ளுபடிகள் பல்லிளித்துப் / பயமுறுத்தின எல்லாக் கடைகளிலும்’ (தீபாவ(ளி)லி) என்ற வரிகள் ‘பல்லிளிக்கும் விளம்பர பிம்பங்களையும், தள்ளுபடி விலையில் தரப்ப்டும் தரமற்ற பொருளையும் ஒருசேரக் குறிக்கின்றன!. BEST SELECTION OF WORDS IN THE BEST ORDER’ என்ற கவிதைக்கான கோட்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது! இதுபோல் நிறைய ‘மிகத் திருத்தமான’ வார்த்தைகளையும், அவற்றின் இடப்பொருத்தத்தையும் இந்தத் தொகுப்பில் கணிசமாகவே எடுத்துக்காட்ட முடியும். மாதிரிக்கு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கவிதைகளின் சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன:

‘உயிர்களோடு
வெடித்த தசைத்துணுக்குகளும்
கந்தகத் துகளோடு
வண்ண வெடிகளாய்
விற்பனைக்கு                               
                                                                     [தீபாவ(ளி)லி]

‘வாழ்வின் மொத்த வலியும்
ஒரே முள்ளாய் மனதில் தைக்க
புரிந்தது
ராமு சேர்வைத் தாத்தாவின் வார்த்தைகள்
வரமா – சாபமாவென                        

[வரமா _ சாபமா]


’அன்பின் மணம் நிறைந்த மலர்களை
இதயத்தில் வைத்துப் பூட்டிக்கொள்வதால்
என்ன பயன்?
கொஞ்சம் வெளியில் எடுத்துக்
கூந்தலில் சூடிக்கொள்ளேன்
பின் எப்படி உணர்வது நான்
உன் அன்பின் வாசத்தை ?   

                                                                         [இறுக்கம்]


‘ஒன்றின் வருகை இரண்டிகாகாது
இரண்டிருப்பது ஒன்றுக்குகந்த தல்ல.

ஒன்றின் ஈவு இரண்டு
இரண்டின் ஈவுமிரண்டு   

[வெறுமையின்]

’எல்லா மீன்களும் தங்கள் வளையத்தைப் பெரிதாக்க
என் சுகதுக்கங்கள் மீது கற்களை நட்டன.

எவ்வித அடையாளமுமற்றுக் கரைந்துபோகும்
எனக்கான விழிப்புகளே என்னைத் தள்ளி வைத்தன.

’எங்கும் சிதறிக் கிடக்கிறது
பயன்படுத்தவியலா குன்றிமணிகளாய் காலம்’

[தொடரும் யாசிப்பின் இடைவெளி]



இதயத்தை பிழிந்த சாறாய் அன்பையே
முழுவதும் நிரப்பினாய் என் மனக்கிண்ணத்தில் 

[தொடரும் யாசிப்பின் இடைவெளி]


’மீண்டும் கூட்டுக்குள் புகுந்த
வண்ணத்துப்பூச்சிபோல்
புடவை போர்த்திய எலும்புக்கூடாய்க்
கிடந்தாள்
கண்ணாடிப்பெட்டிக்குள் விழிகள்
வெறித்தபடி.’

[காரணம் அறிந்திலனே]


’என்னுள் படிந்த படிமமான உன் வானவில்லையென்
மனப்பதிவிலிருந்து பெயர்த்தெடுக்க
முடியாதுன்னால்
என் சகியே

[மூன்றாம் நிலவிற்கு]

‘எப்பொழுதிலும் நான் காதலிக்கிறேன்
அல்லது காதலிக்கப்படுகிறேன்
யாவரைய்ம், யாவராலும்
நண்பனாக அல்லது எதிரியாக.

[உரையாடலின் உள்ளே]



‘மனிதப் பாலைவனங்களில் மனம் தேடியலையும்
ஒட்டகமாய் நான்.

[பெயரில் மூழ்கி]



_ தன்னில் கவிதை உருவாகும் பாங்கை ‘இப்படித்தான்’ என்ற கவிதையில் நுட்பமாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் தோழர் சொர்ணபாரதி. 

அணுத்திரள்களின்
வலைப்பின்னல் சேமிப்பில்
கணக்கற்ற சிதறல்களின்
நினைவுக்கிடங்கில்
……………………………………………………………..
………………………………………………………………
…………………………………………………………………….
ஐந்தின் இடை சிக்கிய
ஆறாம் தூரிகையின்
அசைவற்ற
மறுப்பையும் மறுத்து
அவ்வப்போது இயல்பாய்
வெளிப்படுகின்றன
வெண்பாலைவனத்தின்
வெற்றிடத்தில்
வரிகளின் நடவுகள்

_ கவிதைகளைப் பற்றிப் பேசுவதை விட கவிதைகளை வாசித்து அனுபவங்கொள்வதே ஆனந்தம். எனவே, இந்த ‘எந்திரங்களோடு பயணிப்பவனை’ப் பற்றி பிறர் சொல்லக் கேட்பதைவிட நாமே படித்து உணர வேண்டும்! நவீனத் தமிழ்க்கவிதைவெளியில் பட்டியல்களும் பிரகடனங்களுமாக நிலவி வரும் ’அரசியலுக்கு’ மத்தியில் ‘கவிதை எழுதக் கிடைத்ததே பெரும் கொடை; கொடுப்பினை!’ என்ற தெளிவோடு ஆரவாரமற்று,  தொடர்ந்து உத்வேகத்தோடு இயங்கிவரும் தோழர் சொர்ணபாரதிக்கு ஒரு வாசகராக, சக-கவிஞராக என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் என்றும் உரித்தாகிறது.

_ லதா ராமகிருஷ்ணன்

26.11.2014

No comments:

Post a Comment