பூவின் வாசனைக்குத்
தூலவடிவம் தருபவன்!
(*சமர்ப்பணம்: இசைமேதை இளையராஜாவுக்கு)
‘
‘ரிஷி’
இசை உனக்குள் கருக்கொள்ளும்போது
நீ உருவிலியாகி
ஒரு காற்றுப்பிரியாய் பிரபஞ்சவெளியில்
அலைந்துகொண்டிருப்பாய்…...
இசையை முழுமையாய் உருவாக்கி
முடிக்கும்வரை
நீ மனிதனல்ல _ தேவகணம்தான்.
உன் உயிரில் கலந்த இசை
என்னை ஊடுருவிச் செல்லும் நேரம்
காலம் அகாலமாகும்;
காணக்கிடைக்கும் சிந்தா நதி தீரம்……
இதயம் எல்லோருக்கும் இருக்கிறது;
மனமும்; ஆன்மாவும்
அப்படியெனில்
இசையென்பது உன்னில் என்ன?
அழகிய பூவுக்கு வடிவம் உண்டு.
வரையலாம்.
அந்தப் பூவின் நறுமணத்திற்குத்
தூலவடிவம் தருவதுதான்
உன் இசையென்னும் அருவமாக _
ஆகிறாய் நீ
ஆன்ற புத்துயிர்ப்பை அருள்பாலிக்கும்
பெருமானாய்!
உன் கையில் இசையொரு
அட்சயபாத்திரமாக
அன்றாடம் எத்தனையெத்தனை பேரின்
உறுபசியாற்றிக்கொண்டிருக்கிறாய்!
நேற்றும் இன்றும் நாளையும்
ஊற்றுநீராய் சுரந்தபடியே இருக்கும்
உன் இசையில் தாகமாற்றியபடி
முன்னேகும் வழிப்போக்கர்களுக்கு
நிழல்தரவும் நீயே உன் இசையை
அங்கங்கே நட்டுவைத்திருக்கிறாய்
நெடுமரங்களாய்!
நாள் முழுக்க நடந்து கடந்த களைப்பு மீற
நாங்கள்
எங்கள் அவமானங்களின், ஆற்றாமைகளின்
கன்றிச்சிவந்த காயங்களோடு
கட்டாந்தரையில் தலைசாய்க்கும் நேரம்
தூணோரமாய் நின்றபடி
கனிவோடு எங்களைப் பார்த்துப்
புன்முறுவலிக்கும் உன் இசை
தன் மயிற்பீலி வருடலால்
எங்களுக்குக் களிம்பிட்டு வலியாற்றி
கலிதீர்த்துக் காப்பாற்றிக் கரைசேர்க்கிறது.
கரையில் ஓடமாக அசைந்துகொண்டிருப்பதும்
உன் இசையல்லாமல் வேறேது?
கண்ணெதிரே காணும்
காணக்கூடாதனவற்றிலிருந்து
ஒரு கவசமாய் எம்மைக் காப்பதும்
இந்த கொரோனா வைரஸ் காலத்தில்
கைவசமாகும்
நோய் எதிர்ப்புச்சக்தியாவதும்
உன் இசையொன்றே யாக _
என்றுமான நன்றி யொன்றே
என்னாலாகும்
எளிய கைம்மாறாக….…