LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, March 11, 2025

தமிழகமே இதை………. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தமிழகமே இதை……….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தமிழகமே இதை எதிர்க்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை மதித்துப் போற்றுகிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை பதித்துக்கொள்கிறது மனதில் என்கிறா ரொருவர்
தமிழகமே இதை மிதித்துச் செல்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை வரவேற்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை விரட்டியடிக்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை சிரமேற்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமேஇதை கரித்துக்கொட்டுகிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதைப் புரிந்துகொள்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை அரிந்தெறிகிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதைக் காறி உமிழ்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதைக் கூறி மகிழ்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இந்தத் தலைவர் பெயரை உச்சரிக்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இந்தத் தலைவர் பெயரால் எச்சரிக்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே திரண்டெழுகிறது என்கிறா ரொருவர்
தமிழகமே புரண்டழுகிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை …………………………………………………………………………
தமிழகமே இதை ………………………………………………………………………..
தமிழகமே இதை………………………………………………………………………………
தமிழகமே இதை…………………………………………………………………………….
கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளவும் என்று
வகுப்புகளுக்கேற்ப கேள்வித்தாள்களில் தவறாமல் இடம்பெறுகிறது _ ’தமிழகமே இதை’
பதினாறு வருடங்களுக்கு முன்பு இறந்துபோன தாத்தா
பத்துவயதுச் சிறுவனாக மட்ராஸில் காலடியெடுத்துவைத்தபோது
பல வீடுகளின் கதவுகளில் ‘TOLET’ வார்த்தை
பூட்டுக்குப் பூட்டாய் தொங்கிக்கொண்டிருப்பதைப்
பார்த்து
ஏதும் விளங்காமல்
இத்தனை வீடுகளுக்கு உரிமையாளரான ’TOLET’
எத்தனை பெரிய பணக்காரராயிருக்கவேண்டும்!’
என்று வாயைப் பிளந்ததாக
வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் கதை
நினைவுக்கு வருகிறது ஏனோ…….
வீணாகும் தேர்தல் செலவை மிச்சப்படுத்த
வார்டு வார்டாக வரிசையில் மக்கள் நின்று
வாக்களிப்பதற்கு பதிலாக
’தமிழகமே’ என்ற ஒரேயொருவரை
ஓட்டுப்போடச் செய்துவிடுவார்களோ…..

கலைடாஸ்கோப் கவிதைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கலைடாஸ்கோப்  கவிதைகள் 

 ‘ரிஷி’ 

(லதா ராமகிருஷ்ணன்)

1. அவரவர் உலகங்கள்

"செவ்வக வடிவம் உலகமெனில்
நாம் சிறிய கோடுகளா? பெரிய கோடுகளா?
இணைக்கும் புள்ளிகளா? வரையும் எழுதுகோலா?
வெள்ளைத்தாளா? விழிகளா? பார்க்குந்திறனா ?
விரல்களா? வேறு ஏதாவதா?" என்று
இருவருக்கிடையேயான இணைபிரியா நெருக்கத்தை அடிக்கோடிட்டுக்காட்டவேண்டிக் கேட்டவளிடம்
"உலகம் உருண்டை" என்று மட்டுமே
அறிவாளியாய் சொன்னவனுக்கு
அதைக் கேட்டு அவள் ஏன்
அப்படி உடைந்துபோனாள்
என்று இன்னமும் புரியவில்லை.


2அஷ்டாவதானம்
அன்பை ஒரு கையால் எழுதியவாறே
மண்டையையொன்றைப் பிளக்க
மறுகையால் கோடரியைத் தேடிக்கொண்டிருக்க,
வாழ்வின் நிலையாமையை வாய் போதிக்க
வகையாய் சிக்க ஏதேனும் பெண் கிடைப்பாளா
என்று கண் அலைய,
சமூகத்துத் துர்வாடைகளுக்கெல்லாம் எதிர்ப்புகாட்டுவதாய் மூக்கு சுளித்து,
காதுகள் கவனமாய் ஊர்வம்பை உள்வாங்கியபடி.....


3. புதிர்விளையாட்டு
காயம்பட்ட ஒருவரை
ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக்
கொண்டுசெல்வதற்கும்
பாடையில் தூக்கி சுடுகாட்டிற்குக்
கொண்டுசெல்வதற்கும்
இடையே
குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களாவது
உண்டுதானே...?


4. ஆபத்தானவர்கள்
அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி
அக்கிரமக் கருத்துரைத்து
அமைதியிழக்கும் ஊருக்காகவும்
அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும்
கவனமாய்
’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள்.




5. ஊருக்கு உபதேசம்?
நாவடக்கம்
வேண்டும்
நம்மெல்லோருக்கும்.

Monday, March 10, 2025

சொப்பனவாழ்வு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொப்பனவாழ்வு

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தலைக்குள்ளாகத்
தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாய்க்
காணும்
அந்த வானவில்லின்
சிறுதுளியைப் பறித்துச்
சின்ன மயிற்பீலியாய்
வாழ்வுப்புத்தகத்திற்குள் பத்திரப்படுத்தி
வைப்பதே
தர்க்கங்களுக்கப்பாலான
தூலக்கனவாய்.......

ஆழிசூழ் உலகும் ஆயிரமாயிரம் அனர்த்தங்களும் - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஆழிசூழ் உலகும்

ஆயிரமாயிரம் அனர்த்தங்களும்

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
’மந்திரமாவது சொல்’ என்றேன்
’மனப்பாடமாகத் தெரியாதே’ என்கிறார்கள்.

’கற்றது கையளவு’ என்றேன்
’சற்றே பெரிதாயிருக்கும் என் புத்தகம்’
என்கிறார்கள்.

’இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்றேன்
’நாளை உனக்கு அறுபத்திநான்கு வயதாகப்போகிறது
– மறந்துவிடாதே’ என்கிறார்கள்.

’வானம் வசப்படும்’ என்றேன்
’வேணாம் விலைபோகாது’
என்கிறார்கள்.

’உடுக்கை இழந்தவன் கைபோல’ என்றேன்
’படுக்கை என்று தொடங்கவேண்டுமல்லவா
அடுத்த வரி’ என்கிறார்கள்.

’மாங்காய் மடையா’ என்றேன்
’இல்லை, மூலைக்கடையில் கிடைக்கும் காய் –
இது கூடவா தெரியாது’ என்கிறார்கள்.

இதற்குமேல் தாங்காது என்று
வாய்மூடி வழிசென்றவாறு.

ஆழிசூழ் உலகென்றானபின்
நீரைக்கண்டு பயந்தழுது
ஆவதென்ன? கூறு……

போயும் போயும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 போயும் போயும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’தூய’ கவிதையைத்
துரத்தித்துரத்திப் பகடி செய்பவர்களில்
ஒருவர்
அரசியல்வாதியொருவரின் அருகில் நிற்கும்
படங்களாகவே பதிவேற்றிக்கொண்டிருக்கிறார்;
பழிப்பவர்களில் ஒருவர்
திரைப்படவாதியொருவரின் அருகில் நிற்கும்
படங்களாகவே பதிவேற்றிக்கொண்டிருக்கிறார்.

புத்துயிர்ப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புத்துயிர்ப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மனதின் கனவுகளையெல்லாம்
விழுங்கித் தீர்த்தபின்
என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் வயிறு
பசியோடு அழுதுகொண்டிருக்கும் மனதை அமைதிப்படுத்த
ஆறுதலாய்
அதற்கு ஊட்டச்சத்தளிக்கிறது _
புதிதாய்க் கனவு காண.

நாக்குகள் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நாக்குகள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு நாக்கைப் பல நாக்குகளாகப் பெருக்கும் தொழில்நுட்பம்
தெருக்கோடியில் புதிதாகத் திறந்திருக்கும்
மனிதார்த்த மையமொன்றில் கற்றுத்தரப்படுகிறது என்று
ஒலிபெருக்கியில் அலறிக்கொண்டே போனது ஆட்டோ…
போன வருடம் இதே நாளில் சிறிய விமானமொன்று
துண்டுப்பிரசுரங்களைத் தூவிவிட்டுச் சென்றது.
தாவியெடுத்துப் பார்த்தால் அதில் தரப்பட்டிருந்த
கட்டணத்தொகையில் தலைசுற்றியது.
முற்றிலும் இலவசமென்று இப்போது சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது.
Pied Piper of Hamelin பின்னே போகும் எலிகளில் ஒன்றாய்
போட்டது போட்டபடி ஆட்டோவைப் பின்தொடர்ந்தேன்.
’பலநேரங்களில் எதிர்வினையாற்றமுடியாமல்தானே இருக்கிறது –
இதில் பல நாக்குகளின் தேவையென்ன?’
என்று தர்க்கம் செய்யத் தொடங்கியது அறிவு.
’ஒரு நாக்கை வைத்துக்கொண்டே
நேற்றொன்றும் நளையொன்றுமாய்
கருத்துரைத்துக்கொண்டிருக்கிறோம்
இதில் இருபது நாக்குகள் இருந்தாலோ……?’
என்று உறுத்தியது மனசாட்சி.
ஓங்கிக் குட்டியதில் இரண்டும் வாய்மூடி
ஏங்கியழுதபடி தத்தமது மூலையில் ஒடுங்கிக்கொண்டன.
பின் அன்பொழுக அவற்றிற்கு எடுத்துரைத்தேன்:
’ஒரு நாக்கு கூறுவதை மறுநாக்கு மீற,
ஒரு நாக்கின் கண்ணியம் மறுநாக்கில் மண்ணாகிப்போக,
எதற்கும் பொறுப்பேற்காமல் தப்பித்துவிடலாம்.
தவிர, பரபரப்புச் செய்தியாகிவிடுவதும் சுலபம்.
கலகம் கருணை உலகம் உருண்டை யில்லை
யாம் தாம் பீடத்தி லாம் நாம் -சரிநிகர் சமானமாம் –
எனக்கு ஸ்விட்ஜர்லாந்து -உனக்கு மூத்திரச்சந்து.
முந்து முந்து -கந்துவட்டிக் காலத்தில்
இலவசமாய்த் தரப்படும் நாக்குகளோடு
போனஸாக ஆளுக்கொரு குரல்வளையும் உண்டு
என்று பேசிக்கொள்கிறார்கள்.
யோசிக்காதே போ போ வேகம் போ
பிணம் தின்னும் சாத்திரம் என்ற
மூன்றே சொற்களைக்கொண்ட வாசகம்
சூசகமாய் எத்தனை கற்களை உள்ளடக்கியது
என்று எடுத்துரைக்க
அவற்றின் Permutations and combinations ஐ
விளக்கிக்கூற
எண்ணிறந்த நாக்குகள் எம்மாத்திரம்?
திரும்பிப் பார்க்காமல் மேலே செல்.
முன்னே செல்வது முன்னேற்றமாகாதென்று
முனகாதே மண்டூகமே – சென்று வா நாக்குகளை மொண்டுவா….’
ஆத்திரத்தை ஒரு கண்ணிலும் அன்பை மறு கண்ணிலும்
காட்ட முயற்சித்ததில்
கண்ணாடி நொறுங்கிப்போயிற்று …..
ஆயிற்று….
இதோ ஆட்டோ நின்றவிடத்திலுள்ள கட்டிடத்தில்
நானும் நுழைய
கொழகொழவெனத் தரையெல்லாம்
அறுந்துகிடக்கின்றன நாக்குகள்
வழிந்தோடும் குருதியோடு.
உயர்த்திப் பிடித்த வாட்கள் கத்திகள்
ரம்பங்கள் பிளேடுகளோடு
முழங்கிக்கொண்டிருக்கின்றன
’குரலற்றவர்களின் குரல்கள்!’

Sunday, March 9, 2025

மகளிர் தின சிறப்புமலர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மகளிர் தின சிறப்புமலர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

முதல் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து (பெண் அமைச்சர் கள், பெண் விமான ஓட்டிகள், பெண் ஆட்டோ ஓட்டிகள், மாணவிகள் – ஆரம்பப்பள்ளி முதல் பொறியியல் கல்லூரி வரை முகம் மலரச் சிரித்தபடி நின்றுகொண் டிருந்தார்கள்).

இரண்டாம் பக்கத்தில் முக்கால் மார்பு தெரியும்படியான ஒரு நடிகையின் படம் (அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருக் கும் Peeping Tom கிசுகிசுக்களுக்கும் இந்தப் படத்திற்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை. அதனாலென்ன?).

மூன்றாம் பக்கத்தில் மூக்குத்தியம்மன்(அவளுக்கான படை யல், பாடல், செய்யவேண்டிய நேர்த்திக்கடன், அவளுக்கு எங்கெல்லாம் கோயில்கள் இருக்கின்றன என்ற விவரங்களோடு).

நான்காம் பக்கத்தில் கபடி விளையாடும் பள்ளி மாணவி களின் படமும் பாராட்டும் (பாவம், வெயிலும் புழுதியும் மண்டிக்கிடக்கும் மைதானத்தில் ஏன் அந்த நிகழ்வை வைத்தார்களோ – பார்க்க வருத்தமாயிருக்கிறது).

ஐந்தாம் பக்கத்தில் மனோரஞ்ஜிதப்பூவை காதலியோடு ஒப்பிட்டு ஒரு காதலன் எழுதும் கவிதை.(நேற்று – இன்று – நாளைக்கானது; காலத்திற்குமான அரதப்பழசுக் கவிதை).

ஆறாம் பக்கத்தில் ஒரே சமயத்தில் ஒருவனின் நல்ல மனைவியும் இன்னொருவனின் கள்ளக் காதலியுமான பெண்ணின் கணவன் தூங்கும்போது கடப்பாரையால் அவன் மண்டையில் ஓங்கியடித்துக் கொலைசெய்த செய்தியின் விரிவாக்கம். (பின் எப்படி கணவன் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினரிடம் சொன்னாள் என்ற உங்கள் கேள்வி தர்க்கபூர்வமானதே. தெரிந்துகொள்ள நாற்பத்தியெட்டாவது பக்கத்திற்குச் செல்லவும்).

ஏழாம் பக்கத்தில் ஒரு கையின் ஐந்து விரல்களால் ஒரே சமயத்தில் ஐந்துகோலங்கள் போடும் சாதனைப்பெண் ணின் கதை.( இது எப்படி சாத்தியம் என்று கேள்விகேட்பவர்கள் பெண்ணின விரோதிகளாகக் கொள்ளப்படுவார்கள்).

எட்டாம் பக்கத்தில் தன்னுடைய குடிசையின் வாசலோரமாய் வடை பஜ்ஜி சுட்டு விற்றுக்கொண்டிருக்கும் மூதாட்டி (பிறந்ததிலிருந்தே ஏழையாக இருக்கிறாரே – இது ஏன் என்று யாரும் கேள்வி கேட்டுவிடலாகாது – அவருடைய அயரா உழைப்பைப் பாராட்டி கைதட்டினாலே போதுமானது).

ஒன்பதாவது பக்கத்தில் ஒரு பெண் இந்தக் கையால் விமானமோட்டி அந்தக் கையால் விளம்பரத்திற்கான சோப்பை எடுத்துத் தோளில் தேய்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறார். (ஏன் விளம்பரங்களில் வரும் பெண்கள் எல்லோருமே உள்ளங்கை களில் சோப்பைக் குழைக்காமல் நேரடியாக ஆடையற்ற தோள்களில் மயக்கும் பார்வையோடு தேய்க்கத் தொடங்குகி றார்கள்?)

பத்தாவது பக்கத்தில் ’பெண் நுகர்பொருளல்ல’ என்று கட்டுரை யின் ஆரம்பத்தில் ஆவேசமாகக் கைகளை உயர்த்தியபடிக் கூவும் பெண்ணைக் காட்டித் தன் ஆபரணங்களை வாங்கச் சொல்லிக்கொண்டிருந்தது நகைக்கடை விளம்பரம்.

பதினைந்தாம் பக்கத்தில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசு வென்ற பெண் கையிலுள்ள ஆயுதத்தால் வாசகர்களில் யாரையோ குறிபார்த்துக்கொண்டிருந்தாள்.

பதினெட்டாம் பக்கத்தில் எட்டாம் வகுப்பு மாணவியொருத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டத்தை அத்தனை ரசித்து ருசித்து அக்குவேறு ஆணிவேறாக அலசிக்கொண்டிருந்தார் கட்டுரையாளர்.

இருபதாம் பக்கம்..... முப்பதாவது பக்கம்...... ஐம்பத்தியெட்டாவது பக்கம்....எண்பதாவது பக்கம்……

நூறாவது பக்கத்தில் மீண்டுமொரு மகளிர் தின வாழ்த்து.
இம்முறை அந்தப் பத்திரிகையில் பணிசெய்யும் பெண்கள் – முகம் மலரச் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்)

யார் நீ? -- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 யார் நீ?

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


ஓர் அதி அழகிய பசும் இலை
அதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே
வதங்கிச் சுருங்கி நிறம் மங்கி இறந்துவிழுவதைப் போல் _
அத்தனை இனிமையான பாடல்
அதைக் கேட்டு மனம் நெக்குருகிக்கொண்டிருக்கை யிலேயே
அபஸ்வரமாக ஒலிக்கத் தொடங்குவதைப் போல் _

பட்டுப்போன்ற குட்டிப்பாப்பா மளமளவென்று வளர்ந்து
பொறுக்கியாகி அலையத் தொடங்குவதுபோல் _
கட்டித் தொடுத்த மல்லிகைகள் கணத்தில்
கொட்டும் தேள்கொடுக்குகளெனக் கூர்த்துக் கருத்துவிடு வதைப்பொல் _

சாலையோர நிழலின் கீழ் பாதுகாப்பாய் நடந்துகொண்டிருக்கும்போதே
நேர்மேலே நிமிர்ந்திருக்கும் மரமொன்று இரண்டாகப் பிளந்து உச்சிமண்டையில் விழுவதைப்போல் _

இன்னும் என்னென்னவோபோல்

உன் கவிதைவரிகளின் நுட்பத்தோடு கூடவே வரும்
வன்மம் நிறை உரைநடையில்
கொச்சைப் பேச்சில்
கோணல்வாய்ச் சிரிப்பில்
அரசியல் சார்ந்த பொய்ப்பித்தலாட்ட வரிகள்
பேசப்படுவதும் எழுதப்படுவதுமாய் _
அய்யோ.....