சிவனும் சில தாண்டவங்களும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நடிப்பவர்களை நமக்கே நன்றாகத் தெரியும்போது
நடராஜ –சிவனுக்குத் தெரியாதா என்ன?
நன்றாக நடிப்பவர்கள்
சுமாராக நடிப்பவர்கள்
பணத்துக்காக நடிப்பவர்கள்
புகழுக்காக நடிப்பவர்கள்
நடராஜன் அறிவான் நானாவித மனிதர்களையும்.
நாக்கில் நரம்பற்றவர்களை
நாகவிஷங்கொண்டவர்களை _
நடராஜனுக்கு நெருக்கமானவராகத் தன்னைக்காட்டிக்கொள்ள
நடிப்பவர்களையும் அவனுக்கு மிக
நன்றாகவே தெரியும்.
நடிப்பது தானெனில் நடிப்புக்கலை
நடிப்பது எதிரணியாளனெனில் நடிப்பொரு பொய் புனைசுருட்டு.
நடிப்பது தானெனில் நல்லதுக்கு
நடிப்பது எதிரணியாளனெனில்
நாசம் விளைவிக்கவே…..
நியாயத்தராசுகளில்தான் எத்தனை அலைவுகள்,
ஏற்ற இறக்கங்கள்!
நியாயவான்களாக நடிப்பதிலோ
நாளெல்லாம் ஆர்வம் சிலருக்கு.
சிவராத்திரியில் சிவன் தூங்கினானென்று சர்வநிச்சயமாய்ச் சொல்லும் குரல்
அதே நிச்சயத்தோடு ஊழல்செய்யும்
சக மனிதர்களை சுட்டத்துணியுமோ
சந்தேகமே.
சிவனின் நாளுக்கு 24 மணிநேரம்தானா?
அர்த்தராத்திரி நமக்கானதுதானா?
சொல்லமுடிந்தால்
நான் சிவனாகிவிடமாட்டேனா?
சிவன் ஆடலில் லயித்தபடியிருப்பான் –
அதுவும் சுடுகாட்டில்
அவனுக்கு எதுவும் கேட்காது.
அப்படியே கேட்டு எதிர்ப்புக்குரல் எழுப்பினாலும்
அதை அங்கேயிருக்கும் இறந்தவர்களின் ஆவிகள் அல்லது ஆன்மாக்கள் மட்டுமே செவிமடுக்கும்
என்ற அனுமானத்தில்
சில பலவற்றைப் பேசிக்கொண்டிருக்கும் குரலைக் கேட்டு
ஒரு கணம் ஆட்டத்தை நிறுத்தி அரைக்கண் மூடி
சிரித்துக்கொள்ளும் சிவனுக்கு
உண்டொரு நெற்றிக்கண் சர்வநிச்சயமாய்.
No comments:
Post a Comment