LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, October 7, 2012

என்னுரை - டாக்டர். ஜி.ஜெயராமன்



[*ஊற்றுக்கண்கள் என்ற வெல்ஃபேர் ஃபவுண் டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் சார்பில் பார்வையற் றோருக்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி களில் பரிசுபெற்ற சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் இடம் பெற்றுள்ளது]

பார்வையின்மை வாழ்வில் உண்டாகும் ஒரு நிலை. இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போ தும், எந்த அளவிலும் உண்டாகலாம். பார்வை யின்மையின் அளவையும், வாழ்வில் அது உண்டாகும் காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இதனை நான்கு பெருங் கூறுகளாகப் பகுக்கலாம். அவையாவன: 

1] பிறப்பிலேயே உண்டாகும் முழு பார்வை யின்மை
2] பிறப்பிலேயே உண்டாகும் பகுதி பார்வை யின்மை
3] வளர்ந்த பின் உண்டாகும் முழு பார்வை யின்மை
4] வளர்ந்த பின் உண்டாகும் பகுதி பார்வை யின்மை


இந்த நான்கு பார்வையின்மை நிலைகளும் பல்வேறு வித்தியாசங்களைத் தோற்றுவிக்கக் கூடும் என்றாலும்,  எல்லோருக்கும் பொது வாகச் சில தடைகள் பார்வையின்மையால் உண்டாகிறது. அவை அனுபவம் பெறுதல், அனுபவ வெளிப்பாடு, வெளிப்பாட்டை எழுத் தில் வடித்தல், எண்ணியதை எண்ணிய உடனேயே எழுதமுடியாமைபோன்றவையாகும்.


தன்னுள்ளே பொங்கும் கடலாக, சீறும் ஊற்றாகத் தாக்கும் உணர்ச்சி அலைகளை வெளிப்படுத்த ஒரு படைப்பாளி பயன்படுத்தும் சாதனங்களில் எழுத்தும் ஒன்று. அந்த எழுத்து வர்ணனை,  வாதம்,  உணர்ச்சி ஆகிய மூன்றில் ஒரு முறையிலேயே அல்லது,  அந்த மூன்றில் எல்லாமே வெவ்வேறு அளவில் கலந்து படைக்கப்படுகிறது. ஆதிமனிதன் வாய்மொழியாக வெளிப்படுத்திய இதை காலத் தையும், இடத்தையும் வென்று, அவற் றைக் கடந்து, கொண்டுசெல்ல உருவானதே வரிவடிவம். இந்த வரிவடிவம் பார்வையை அடிப்படையாகக்கொண்டிருப்பதால் அதுவே பார்வையற்றவர்களின் படைப்புகள் வெளிப்படுவதற்கு ஒரு தடையாக விளங்குகிறது. பெருங்கவிஞன் மில்ட்டன் கூட இந்தத் தடைக்கு உட்பட்டே தன் பெருங்காப்பியத்தைப் படைக்கவேண்டியிருந்தது.ஆனால், இக்காலத்தில் புள்ளி எழுத்தும்[ப்ரெய்ல்] ஒலிநாடாவும், தட்டச்சும், கணினியும் இப்பிரச் னையை ஓரளவுக்குக் குறைக்கின்றன.


வர்ணனைகளுக்கு ஆதாரம் அனுபவம். ஊர்க்குட்டையைக் கண்டவுடன் கண்டவன் கடலைக் கற்பனை செய்யலாம். ஆயினும் அந்தக் கடல் உண்மையான கடலின் வேகத் தையும் ஆழத்தையும், ஆற்றலையும் முற்றிலுமாகக் காட்டுமா?  எல்லாவிதமான கற்ப னைகளுக்கும் அடிப்படைக் கூறுகள் அனுபவத்திற்கு உட்பட்டுத்தான் இருக்கின்றன.  எனவே, அனுபவக்குறை பார்வையற் றோர் படைப்புகளில் ஒரு தடைக்கல்லாகவே அமைகிறது.


நான் இதை உலகிற்குச் சொல்லியே ஆகவேண்டும் என்ற உந்துதல் பெருகும்போது படைப்பாளி அதற்கான சொற்களை,  கருத்தோவியங்களைத் தானாகவே படைத்துக் கொள்கிறார். இத்தகைய சொல்லாட்சிகள் மொழியை வளப்படுத்துகின்றன. பார்வை யற்ற படைப் பாளிகள் சில வேளைகளில் இத்தகைய அருஞ்சொற்கள் உருவாகக் காரண மாகலாம்.


வாதங்கள் அறிவின் அடிப்படையில் நடைபெறுகின்றன. [அப்படித்தான் நம்பப்படுகி றது].அவற்றுக்கு புத்தியின் தெளிவே அதிக முக்கியத்துவம் பெறக்கூடியது. அதில் பார் வையின்மை எந்தத் தடையையும் விதிக்கத் தேவையில்லை. பார்வையற்றவர்கள் அதிகம் உணர்ச்சிகளை அனுபவிப்பார்கள். வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு அளவு களில் உணர்ச்சியால் தாக்கப்படுபவர்கள் அவர்கள். எனவே, உணர்ச்சிகளை வெளிப் படுத் துவதிலும் அவர்களுக்கு அதிகமான  தடைகள் இருக்கத் தேவையில்லை.


ஐந்து வயதுக்கு மேல் பார்வையிழப்பு உண்டானால், அது இடை யில் வந்த பார்வை யிழப்பாகவே கொள்ளப்படுகிறது. இதை பார்வை  உள்ளவனின் மரணம், பார்வையற் றவனின் பிறப்பு என்று அறிஞர்கள் கொள்கின்றனர். பிறப்பும் இறப்புமே மனிதனின் அடிப்படையான அனுபவங்கள். ஆனால், இதனைப் பற்றி சொல்லக் கூடியவர்கள் யாரு மில்லை. இரண்டுநிலைகளில் பேச்சுக்கோ,  எழுத்துக் கோ வழியில்லை. ஆனால், அந்த அனுபவங்களை வாழ்வில் [ஏறக் குறைய] அனுபவித்தவர்கள் தங்களது புனர்ஜென்மத் தின் இயல்பைப் பற்றி பேசமுடிந்தால் அது தனித்தன்மை கொண்ட ஓர் அனுபவமாக அமையும்.


 [* 30.09.2012 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது ]

No comments:

Post a Comment