LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, January 26, 2026

மாற்றுக்கருத்தாளர்கள் இங்கே மிகக் கொடிய ஃபாஸிஸ்ட்டுகள்!

 மாற்றுக்கருத்தாளர்கள் இங்கே மிகக் கொடிய ஃபாஸிஸ்ட்டுகள்!


..................................................................................................................................

எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் கதையொன்றில் பிரதான கதாபாத்திரம் மனநோய் மருத்துவரிடம் போயிருப்பார். மருத்துவர் கேள்விகள் கேட்கக் கேட்க பதிலளிக்கும் கதாநாயகன் நடுநடுவே ‘ரிலாக்ஸேஷன்’ என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துவார். அவர் முன்வைக்கும் கருத்துக்கும் அந்த வார்த்தைக்கும் சம்பந்தமிருக்காது. புரியாமல் குழம்பியவராய் மருத்துவர் அது குறித்துக் கேட்கும்போது ‘ஏன் டாக்டர், நடுநடுவே இந்த வார்த்தையை சும்மா சொல்லலாம்னுதான்’ என்பதாகவோ என்னவோ ஒரு பதிலைச் சொல்வார். நகைச்சுவைத் தொனியில் எழுதப்பட்ட கதையென்றாலும் அதன் உள்ளர்த்தம் அத்தனை நகைச்சுவையானதல்ல. அது சமூகத்தின் மீது, சில மேம்போக்கு ஆசாமிகள் மீதான விமர்சனம்.
இப்போது ஆளாளுக்கு எதிர்க்கருத்தாளரை ‘ஃபாஸிஸ்ட்’ என்று அடைமொழியிட்டு வசைபாடுவதைப் பார்க்கும்போது இந்தக் கதை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

மரியா மாண்டிஸோரி

 மரியா மாண்டிஸோரி



சர்வதேச மகளிர் தினத்தன்று எத்தனை பேர் மரியா மாண்டி ஸோரியை நினைவுகூர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நாளும் நினைக்கப்படவேண்டியவர் அவர். குழந்தைகளைப் பெரியவர்கள் மதிக்கவேண்டியதன், சக உயிராக, சம உயிராக பாவிக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தவர். குழந்தைகளுக்கு கல்வி என்பது, கற்றல் என்பது ஆனந்தமாக, ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து எடுத்துரைத்தவர்.

குழந்தையை வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளை, தன்னம்பிக்கையை, திறன்களைக் கொண்ட முழுமனிதனாக உருவாக்குவதே கல்வியின் முதலும் முடிவுமான நோக்கமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியவர்.

அத்தகையதொரு கல்விமுறையை உருவாக்கியவர்.

புகைப்படங்களைப் பொருள்பெயர்த்தல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, டிசம்பர் 31ஆம் நாள் பதிவேற்றப்பட்டது//

புகைப்படங்களைப் பொருள்பெயர்த்தல்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
முதல் புகைப்படத்தில் அவர்
உலகிலேயே அதிக உயரமான
மலையுச்சியில்
நின்றுகொண்டிருந்தார்.
மூன்றாவது புகைப்படத்தில் அவர்
விரிந்தகன்ற சமுத்திரக் கரையோரம்
கணுக்காலளவு அலைநீரில்
நடைபழகிக்கொண்டிருந்தார்.
முப்பதாவது புகைப்படத்தில் அவர்
அகழ்வாராய்ச்சிப் பகுதியிலிருந்த
ஆழ்குழிக்குள்
குனிந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.
முந்நூறாவது புகைப்படத்தில் அவர்
மலைப்பாம்பின் முதுகின்மீது
தலைவைத்துக்
கொஞ்சலாகப் படுத்திருந்தார்.
மூவாயிரத்தாவது புகைப்படத்தில் அவர்
மேகத்தினூடாய் மறைந்தோடும் நிலவைப் பிடிக்க காமராவைத் திரும்பிப்பார்த்தவாறே
தலைதெறிக்க ஒயிலாய் ஓடிக்கொண்டிருந்தார்.
முப்பதாயிரத்தாவது புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டதா தெரியவில்லை.
ஒருவேளை எடுக்கப்பட்டிருந்தால் அதில் அவர்
மூளைக்குள் சுற்றுலா செல்வதாக இருக்கும்
வாய்ப்புகள் அதிகம்.
இடையேயான எண்ணிறந்த புகைப்படங்களில்
பெரிய பெரிய பிரமுகர்களோடு நின்றுகொண்டிருக்கும்
அவரின் படைப்புகளை
அவரையன்றி யாரும் பேசுவதேயில்லை.

மொழித்துவம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, டிசம்பர் 23ஆம் நாள் பதிவேற்றப்பட்ட கவிதை//

மொழித்துவம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(*என் முதல் கவிதைத்தொகுப்பில் - அலைமுகம் - இடம்பெற்றுள்ள கவிதை)
........................................................................................................
நீலம் சிகப்பு மஞ்சள் பச்சை
கருப்பு வெளுப்பு மா பூ பலா
கண் மருந்து பால் ஈ புறா
அது இது எது எது
தினம் கணம் நிரந்தரம்
மரணம்
ஜனனம் புனரபி
ஸாம்ஸன் தலைமுடி
தகர்தூணுறு(ரு) வரு(று)
தேவ தரிசனம்!
தண்தீச்சுட ரொளிர்
தேஜோமயம்!
நிர்விசாரம் பெருகும்
விரிவெளிக் கதவருகாய்
இருகைப்புலிரோஜா சிரித்திருக்க
காற்றுக் கடிகாரம் கூறும்
நாளை படித்தாயிற்றென!
நிலவூறி யினிக்கும் நா!
நதியெல்லாம் நெஞ்சுள்ளாய்!
நட்டதழிந்தோட ஓட
விட்ட இடம் விடியும்!
சிறுகாற் பெருவளத்தா னாட்சியில்
செக்குமாடுயர்த்திய சிறகெங்கும்
பட்டொளி வீசிப் பறக்கும் காட்சி
காணப் போதுமோ கண்கோடி!

(* சமர்ப்பணம் : குட்டித்தோழனுக்கு)

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, டிசம்பர் 26ஆம் நாள் பதிவேற்றியது//

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நகசமும் நகரசமும் 'தும்பிக்கை-தந்த'ப் பிராணியின்
ஒருபொருட்பன்மொழியாக, பல்பொருளொருமொழியாகும்
நகாயுதம் குறிக்கும் பறவைகளிலும் விலங்குகளிலு முள
கொம்பும் வாலும் கடைவாய்க் கூர்பல்லும், வளைநகமும்,
வண்ணச்சிறகும் இன்னென்னவும் பதிலியாகுமோ உன் என் ஒரு சொல்லுக்கு?
நகுலன் சிவனும் அறிஞனும் பஞ்சபாண்டவர்களில் ஒருவனும் மட்டும்தானா? நல்ல கவியும்தானே!
நகிலம் நக்கிதம் நசலுண்டாக்க,
நிழல்யுத்தம் செய்தவன் மன நகுலம் மூச்சுத்திணறும் நாகமின்றியே.
நகதியன்ன நல்வார்த்தைகள் சொல்பித்து நசைநர்
நகுதத்தினடியில் வழிநடத்திக் கிடத்த,
அந்த நக்கவாரப் பக்கவாட்டுகளி லுள்ள நீர்நிலைகளில்
நக்கரமுண்டா வென்றறியும் நகுதாவும் உண்டோ?
நகேசனின் உள்ளாழத்தில் நடுங்கத்தொடங்கிவிட்டதோ நிலம்?
என் நகரூடத்திற்கும் நகாசிக்கு மிடையே உள்ளோடும் நரம்புகளின் சிக்குகளை சிடுக்குகளை நானே நேரிடையாய் காணமுடியுமோ?
நக்கிரை, நக்குடம் என்றே நாசியைச் சுட்டும் நகாசுவேலை
நவீனமா? புராதனமா?
...............................................................................................................
(பி.கு: தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்க நேர்ந்தபோது ‘ந’ என்ற எழுத்தின் பக்கங்களில் கீழ்க்கண்ட பல வார்த்தைக ளையும், அவற்றிற்கான அர்த்தங்களையும் படித்தேன். மலைப்பாக இருந்தது! அதன் விளைவே இக்கவிதை! – ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
.................................................................................................................................
நகரூடன் – மூக்கு
நக்கிரை – மூக்கு
நக்குடம் - மூக்கு
நகாசி – நெற்றி
நகதி – பொன்கட்டி, கருவூலம்
நகரசம் – யானை
நகசம் – யானை
நகாசுவேலை – பொற்கொல்லர்களால் செய்யப்படும் நுணுக்கமான பொன்நகை வேலைப்பாடு
நகாயுதம் – சேவல், சிங்கம், புலி, கருடன், கழுகு
நகிலம் – பெண்ணின் மார்பகம்
நகுலம் – கீரி
நகுதா – மாலுமி
நகுத்தம் – புங்கமரம்
நகுலன் – சிவபெருமான், அறிஞன், பஞ்சபாண்டவருள் ஒருவன்
நகேசன் – மலைகட்குத் தலைவனாகிய இமயமலை.
நக்கரம் – முதலை
நக்கவாரம் – ஒரு தீவு, வறுமை
நக்கிதம் – இரண்டு
நசலாளி – நோயாளி
நசல் – நோய்
நசைநர் - நண்பர்கள்

படைப்பாற்றலும் PRம்....

 படைப்பாற்றலும் PRம்....

.......................................................................



Bigg Boss Tamil 9 இல் ஒவ்வொரு போட்டியாளரும் PR(Public Relations) வைத்திருப்பது பற்றிய விவாதம் வந்தபோது தான் யூட்யூப் காணொளி களிலிருந்து முகநூல் கணக்குகள் வரை எப்படியெல்லாம் இந்த பி.ஆர் வேலை நடக்கிறது என்பது ஓரளவுக்குத் தெரிந்தது!

ஒருவரை உயர்த்திப்பேசும் காணொளிகளை வெளியிடுவதற்கு ஒரு விலையாம்.

இன்னொருவரை இறக்கிப்பேசும் காணொளி களை வெளியிடுவதற்கு இன்னொரு விலை யாம்.

ஒருவரை உயர்த்தி இன்னொருவரைத் தாழ்த்திப் பேசும் காணொளிகளை வெளியிடுவதற்குத் தனி விலையாம்.

தகவல்கள், காட்சிகளை அதற்கேற்ப ஒட்டி வெட்டி வெளி யிடுவதற்கு இன்னொரு விலையாம்.

கேட்கக் கேட்கத் தலைசுற்றியது.

இந்த விஷயம் காட்சி ஊடகப் பிரபலங்கள் மத்தி யில் மட்டும்தான் புழங்குகிறதா? அல்லது, படைப்பாளிகள் மத்தியிலுமா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுந்தது!

ஒரு படைப்பாளியின் PR அவருடைய படைப்பு கள் தான் என்பதெல்லாம் பிற்போக்குவாதமோ என்னவோ!

சரிநிகர்சமானமாய் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சரிநிகர்சமானமாய்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


பீடங்கள் வேண்டியிருக்கிறது பப்பலருக்கு.
பீடங்களில்தான் எத்தனையெத்தனை வகைகள்!
வெளிப்படையான பீடங்கள் தகதகத்தொளிரும்
தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும்
அதில் ஆரோகணித்திருப்பவரின் அகங்காரமும்
அடங்காப்பிடாரித்தனமும்
அராஜக அட்டூழியங்களும்
அப்பட்டமாய்க் காணக்கிடைக்கும்.
அதைக்கண்டு பிரமித்துப்பார்ப்பதும்
பயப்படுவதும்
ஒதுங்கிப்போவதும்
எளிது.
புல்நுனிப்பீடங்களும் உண்டு
காற்றின் கனிவோடு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்செல்லுமவை
வெகு கவனமாய் நம்மை
விருப்பத்தோடு மண்டியிடவைக்கும்.
நம் விடுதலைக்காகக் குரல்கொடுப்பதாய் அவை
நம்மை நம்பச்செய்து
நடக்கமுடியும் தனியாக என்பதையே மறக்கச்செய்து
நீளும் அவர் கையைப் பெருவரமாகப் பற்றிக்கொள்ளச் செய்யும்.
அந்தக் கை இழுத்த இழுப்புக்கெல்லாம் போகச்செய்யும்.
”நீ பரிதாபத்திற்குரியவள் நீ பலியாடாக்கப்பட்டவள்
(நாம் பரிதாபத்திற்குரியவர்கள் நாம் பலிகடாவாக்கப் பட்டவர்கள் )
என்று சொல்லிச்சொல்லியே
நான் கருணைமிக்கவன், நான் உனக்கு சாபவிமோசனம் தருபவன்
(நாங்கள் கருணைமிக்கவர்கள், நாங்கள் உங்களுக்கு சாபவிமோசனம் தருபவர்கள்)
என்று தன் மேலாண்மையை உறுதியாய்
நிறுவிக்கொள்ளும்.
அதுவேயாகுமாம் திட்டவட்டமாய்
சக கவிஞரைப் பாலின அடைமொழிக்குள்ளிட்டுக்
கட்டுடைத்தலும்.

ஆசை – பேராசை – நிராசை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஆசை – பேராசை – நிராசை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஆசை யாரை விட்டது?
ஆசைக்கு அளவில்லை.
ஆசையே அலைபோலே நாமெல்லாம்
அதன்மேலே......
அத்தனையும் அவர் அறிந்ததே.
ஆனாலும் –
ஆயிரம் கட்டுரைகளை எழுதிய
அபூர்வ சிந்தாமணியான அவர்
இன்னொருவர் எழுதிக்கொண்டிருந்த
இருபது கதைகளையும்
அதற்கு அவருக்குக் கிடைக்கும்
அமோக வரவேற்பையும் பார்த்து
தானும் எழுதத் தொடங்கினார்.
அதுவும் அவரைவிடப் பெரியாளாகப்
புலப்படவேண்டும் என்ற
ஆறா வெறியோடு
அவரைக் கீழிறக்கவேண்டுமென்ற
குறிப்பான இலக்கோடு.
பானை வனைபவரைப்பார்த்து ஏன் இப்படி
போட்டியிடத் தோன்றவில்லையெனக்
கேட்டபோது
பல்லைக் கடித்துக்கொண்டு
பொறுக்கியெடுத்த
கெட்டவார்த்தைகளைக்
கொட்டித்தீர்த்தார்.
தனது கதைகளை யாரும் கண்டுகொள்ளவே
யில்லையென்பதைப் பார்த்து
ஆத்திரத்தின் உச்சாணிக்கொம்பில்
ஏறிநின்றவரை
வேடிக்கைபார்த்தவாறே
கடந்துசெல்கிறது
இன்று

பாவம் அவர்கள்,,,,,, ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பாவம் அவர்கள்,,,,,,

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

மூன்றாமவருக்குத் தெரியாத இருவர்

அல்லது முன்னூறு பேருக்கு மேற்பட்டவர்கள்

அறியாத இருபதுபேர்

அல்லது மூவாயிரம் பேருக்குக் குறைவாகவே அறிந்திருக்கும் இருநூனூறுபேர்

மில்லியன்களாகத் தம்மை பாவித்துக்கொண்டு

எல்லாவற்றையும் பற்றிக் கருத்துரைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

இலக்கியம்

அரசியல்,

நடனம்,

ஓவியம்,

ராப் இசை,

கர்நாடக இசை

ஊர், உறவு, நாடு,

பிரபஞ்சம், தாராளமயம்

புரட்சி, பட்சி, காட்சி,

விரகம், நரகம், மீட்சி

ஆட்சி சாட்சி

அருமை சிறுமை பெருமை கருமை

என்று அவர்கள் பேசிக்கொண்டேயிருப்பதைக் கண்ட

சிறு பறவையொன்று தாங்கமுடியாமல்

அவர்கள் மீது எச்சமிட்டது

அவர்கள் பறவை எச்சத்தைப் பற்றி

அகல்விரிவாகப் பேச ஆரம்பித்தார்கள்.