LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, June 30, 2025

கலைடாஸ்கோப் கவிதைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கலைடாஸ்கோப் கவிதைகள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

1. வழிச்செலவு
May be an illustration of tree


ஓருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில்
எனக்கேயெனக்கான நிழலை
குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில்
இன்று
நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர்.
சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி;
சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின்
திருப்பெயர்களைச் செதுக்கியபடி;
சிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி;
சிலர் தலவிருட்சமாய் பிரதட்சணம் செய்து
நெடுஞ்சான்கிடையாய் விழுந்து கும்பிட்டபடி.
சிலர் சலசலத்திருக்கும் பறவைகளைப்
பலகோணங்களில் படமெடுத்தபடி…..
உணவிடுவார்களோ உரமிடுவார்களோ, தெரியவில்லை.
மரத்தின் பச்சையம் மாற்றுக்குறையாமலிருக்கிறதா?
அறியேன்.
வனாந்திரம் மரத்தின் விருப்பா? அன்றி
விபத்தாயமைந்த இருப்பா?
கனாக்கண்டு முடித்தபின் கண்விழித்த கதையாய்
பயணப்பொதி சுமந்துவழியேகும் தருணம்
விழிநிரம்பும் நீர் வழியும்
மரம் வாழப் பொழிமழையாய்.

***


2. வீதியுலா

தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது.
அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை.
சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது.
பலசமயங்களில் இல்லை.
இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில் ’வாராயென் தோழி வாராயோ’வை அடுத்து வந்துவிடுகிறது
’போனால் போகட்டும் போடா’……
ஊர்வலம் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது;
நான் ஊர்வலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்.
வருவதும் போவதும் சந்திக்கும் புள்ளியில்
உருவாகும் கருந்துளை வெற்றிடமோ? அணுத்திறமோ…..?
அதோ, அந்த ஊர்வலத்தில் நானும் போய்க்கொண்டிருக்கிறேன் _
மௌனமாய் _ மகிழ்ந்து சிரித்தபடி _ மாரிலடித்து அழுதபடி……
ஓலமும் ஆலோலமும் ஆனபடியே….
தொலைவில் தெரியும் வெளிச்சப்புள்ளி
மோட்டார் பைக்கா? தண்ணி லாரியா….?
ரய்லில்லை, கப்பலில்லை என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை.
நான் நகர்ந்துகொண்டிருப்பது
நிலத்திலா, நீரிலா, ஆகாயத்திலா என்று
நிச்சயமாகத் தெரியாத நிலை.
உள்ளேயொரு ஆகாயவிமானம் தரையிறங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு கப்பல் தரைதட்டிக்கொண்டிருக்கிறது.
இரண்டிற்குமிடையேயான வித்தியாசத்தில்
தொலைதூரத்து ஊர்வலம் தவறாமல் நடந்தவாறு.


***

3. மால்

கற்றது கையளவெனினும்
கடல்முழுக்கப் பொங்கும் பால்
முற்றிய பித்துநிலையில்
மனதில் முளைத்துவிடுகிறது வால்
புற்றுக்குள் பாம்புண்டோ என்றறிய
நுழைக்கவோ கால்
சற்றேறக்குறைய நடுமார்பில் தைத்தபடி
அற்றைத்திங்களிலிருந்தொரு வேல்.
காற்றாடிக்கு எதுவரை தேவை நூல்?
உற்றுப்பார்க்க ஒரே இருள்தான்போல்.
வெற்றுச் சொற்களுக்கு வாய்த்த மௌனம் மேல்......

***

4.அரைகுறை ரசவாதம்
ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும்
இறுகிய கருங்கல்லாகவும் காலம்….
நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
என்னால் முடிந்த உருவங்களையெல்லாம்
வனைந்துபார்க்கிறேன்.
நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு
இளகிவிடுவேனா என்ன என்று குறும்பாய்ச் சிரிக்கிறது காலம்
நான் குருவியாய் செதுக்க முனைந்து குருவி முட்டையாய் பிடித்துவைத்திருந்த உருண்டையைப் பார்த்து.
கருங்கற்காலமோ சதா பின்மண்டையைக் குறிபார்த்துக்கொண்டேயிருக்கிறது.ll reactions:

No comments:

Post a Comment