LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 20, 2023

பொம்மிக்குட்டியின் கதை! ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பொம்மிக்குட்டியின் கதை!

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

(*ஆறாவது தொகுப்பான அன்பின் பெயரால் என்ற தலைப்பிட்ட தொகுப்பில் 

உள்ள கவிதை)


[I]

தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது?

அதுவும், சின்னக்கண்ணனின் பொம்மை அத்தனை கலைவண்ண கைநேர்த்தியோடு

கிடைக்கோடாய் அசைவதைத் தவிர்த்து

மேலுங்கீழுமாய் மட்டும் முகம் ஆட்டிக் காட்டும்!

எதைச் சொன்னாலும் கண்சிமிட்டிப் புன்சிரிக்கும்.

கைகால் இயக்கங்களெல்லாம் குழந்தைக் கண்ணனின் மனம் போன போக்கில்;

அல்லாது தலையாட்டி பொம்மைக்கு

ஏது தனிப்பட்ட இயக்கம்...?

குறும்புச் சிறுவனின் கைகளிலும், மடியிலும்

தயக்கமில்லாமல் பொருந்தியமர்ந்திருக்கும்.

தனக்குப் பிடித்தமான பெயரை தலையாட்டி பொம்மைக்குத் தந்து

அதைத் திரும்பத் திரும்பக் கூவியழைத்துக்

குதூகலிக்கும் குழந்தை...

"பொம்மிக்குட்டீ வா.. வா.. பூ பூவாய் முத்தம் தா..."

பஞ்சுப்பொதியாய் பொம்மையின் உடல்.

பிஞ்சுக் கைகள் மென்மையாய் வருடித் தரும்.

துஞ்சும் நேரமெல்லாம் பொம்மிக்குட்டியைத்

தன்னருகே பத்திரப்படுத்திக் கொள்வான் சின்னக் கண்ணன்.

ஆனா- ஆவன்னா, A B C, 1 2 3...

அவனுக்குத் தெரிந்ததெல்லாமும்

சொல்லித் தரப்படும் பொம்மிக்குட்டிக்கும்.


II


பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த சின்னக்கண்ணன்

கூடப் படிப்பவர்களைப் பற்றியெல்லாம் தினமும்

வீடு திரும்பிய பிறகு

வண்டிவண்டியாய் பொம்மிக்குட்டிக்குக் தவறாமல் கதை சொல்வான்.

கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பொம்மிக்குட்டி.

அடிக்கொரு தரம் தலையை ஆட்டும் - மேலுங்கீழுமாய்.

"அச்சுதன் அடித்தான், அவனைத் திருப்பியடித்தேன் - சரிதானே?"

"ஆம், ஆம்". ஆனால்...

"முகுந்தன் என்னுடைய பென்சிலை உடைத்துவிட்டான் என்பதால்

அவனை நையப் புடைத்து விட்டேன்" என்று சின்னக் கண்ணன்

சொன்னபோது

செய்த குற்றத்திற்கு தண்டனை அதிகம் என்றுதோன்றியது

பொம்மிக்குட்டிக்கு. சற்றே தயக்கமாய்

தலையை ஆம் - இல்லையாய் ஆட்டியது பொம்மை.

உயிருள்ளது பொம்மை என்று நம்பும் சிறுவன் கொஞ்சம்போல்

திகைத்துச் சினந்தான்.

தகப்பன்சாமி தான் என்றாலும்

"எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காய் தருணுடைய கையைக்

கடித்துக் குதறி விட்டேன், கத்தியாலும் வெட்டி விட்டேன்"

என்று பெருமைபீற்றிக்கொண்டபோது

பொம்மிக்குட்டியின் தலை தவிர்க்கமுடியாமல் இடவலமாய்

ஆட ஆரம்பித்ததைக் கண்டு

மட்டுமீறிப் புகைந்த கோபத்தில் சிறுவனின் கரம்

பொம்மிக்குட்டியின் சிகையைக் கொத்தாய்ப் பிடித்து

கதவிற்கு அப்பால் வீசியெறிந்தது.

'பதிலுக்கு புதிய பொம்மைகள்

காசு கொடுத்தால் கிடைத்துவிட்டுப் போகிறது...

அதுவும், ஓசியில் கிடைத்ததுதான் பொம்மிக்குட்டி.

போதாக்குறைக்கு, நிறைய நைந்துபோய் விட்டது.

ஆய் பொம்மை; பீத்த பொம்மி..'


III


காரிருள் கவிய விழுந்தது விழுந்தவாறு

கிடந்தது பொம்மிக்குட்டி.

முதுகெலும்பு முறிந்ததுபோல் ஒரு சுளீர் வலி படர

உயிர்ப்பின் அடையாளம் பொம்மைதானோ வென

தனக்கெட்டிய பட்டறிவில் படித்துக் கொண்ட

விடையே கேள்வியாக அனத்திக் கொண்டிருந்தது நெடுநேரம்.

பின், கனவே போல் காற்றுத் தடத்தில் கிளம்பிச் சென்று

கதவிடுக்கில் மனம்நுழைத்துப் பார்த்தது.

பரிச்சயமான அறை.

பழகிய சின்னக்கண்ணன் வழக்கம்போல்

கைகொட்டிச் சிரித்தவாறு கட்டளையிட்டுக் கொண்டிருக்க,

எதிரே

சாவிகொடுத்தால் ஓடும் பொம்மை_

சல்யூட் அடிக்கும் பொம்மை_

சிரியென்றால் சிரிக்கும் பொம்மை_

சீறிபாயச் சொல்லி தள்ளிவிட்டால்

சரவென்று நெளிந்தோடும் நாகப்பாம்பு பொம்மை_

குத்தினாலும், எத்தினாலும் சத்தமெழுப்பாமல்

சிறுவனின் வீரசாகச் செயல் என்பதாய்

பெருமையில் பூரிக்கும் கைதட்டி பொம்மை_

'வெல்கம்' பொம்மை,ரிம்-ஜிம் நாட்டிய பொம்மை_

பெருந்தனக்காரர் பரிசளித்த பொம்மை_

பல வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாய் ஊரைப்

பார்க்கத் திரும்பி வந்திருக்கும் உறவொன்று

வாங்கிவந்த பொம்மை_

விரல்சொடுக்கிற்கேற்ப விரைந்தோடி

சுவற்றில் முட்டி நிற்கும் பொம்மை_

அலங்கார பொம்மைகள்,அவதார பொம்மைகள்_

வைக்கோல் பொம்மைகள், வெண்கல பொம்மைகள்_

பைக்குள் போட்டுக் கொள்ளுவதற்கேற்ற சிறிய பொம்மைகள்_

பூதாகார கரடி பொம்மைகள்...

அறையில் ஒரே நெரிசலாயிருந்தது.


IV


பிடிக்கவில்லை யென்று கடித்துத் துப்பியிருந்த பொம்மை

பரணிலிருந்து கீழே இறங்கி வந்திருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன் இன்னொரு குழந்தையின்

கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்ட பொம்மையும்

அருகமர்ந்து கொண்டிருந்தது.

கிழிந்த பொம்மைகள் சிலவற்றிற்கு

ஆயத்தஆடைகள் அணிவித்து

அழகுபார்த்துக் கொண்டிருந்தான் சின்னக்கண்ணன்.

சிறுவனின் கண்களே உதடுகளாய், வெளிப்பட்ட கூற்றுக்கு

மாற்று குறையாமல்

ஆடிக் கொண்டிருந்த தலைகள்

பொம்மைகளின் மேலும், கீழுமாய்.

காரியார்த்தமாய் வால்களைச் சுருட்டிக் கொண்டு

கூர்வளைநகங்களை செல்லப்பிராணிகளாய்

உள்ளிழுத்துக் கொண்ட வாக்கில்

அமர்ந்துகொண்டிருப்பவைகளைக்

காட்டும் அடையாளம் காலம்

எனப் பின்னேகி

பஞ்சுப் பிரிகளாய்

வெளியில் கலந்து திரியும்

பொம்மிக்குட்டியின் குரல் எட்டுமோ

உன்னை என்னை நம்மை...?

"நீயும் பொம்மை, நானும் பொம்மை,

நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை"

வாழ்க்கை கத்துக்கொடுத்தது எல்லாம் வலிதான் | கவிஞர் ஆசு |

வாழ்க்கை கத்துக்கொடுத்தது எல்லாம் வலிதான் | கவிஞர் ஆசு | எனும் நான்

https://www.youtube.com/watch?v=wpW0YwMHUPQ

காணவேண்டிய காணொளி



தரங்கெட்ட பேச்சு சமூகப்பிரக்ஞையாகிவிடாது

 தரங்கெட்ட பேச்சு சமூகப்பிரக்ஞையாகிவிடாது



சமூகப்பிரக்ஞையாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் முனைப்பில் சில படைப்பாளி கள் மிக மிகக் கேவலமாக சக எழுத்தாளர்களை, சக மனிதர்களை அவமதிக்கும், அவதூறு செய்யும் போக்கு அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஃபேஸ் புக்கில் இதைத் தெளிவாகக் காண முடிகிறது.


 Paedophile என்ற வார்த்தைக்கு a person who is sexually attracted to children - குழந்தைகள் மீது பாலியல் கவர்ச்சி கொள்பவர் என்று கூகுளி லேயே அர்த்தம் கிடைக்கும்.


கவர்ச்சி வேறு, பாலியல் கவர்ச்சி வேறு என்பது எல்லோ ருக்குமே தெரியும்.

இந்த வார்த்தையைப் பயன்படுத்தி ‘மெத்தப் படித்த’, சமுதாய உணர்வு மிக்கவராகத் தம்மைப் பறையறிவித்துக்கொள்கிற, (ஃபேஸ்புக்) போராளி’ப் பெண்மணி ஒருவர் எழுத்தாள ரொருவரைச் சாடியிருப்பதைப் படிக்க நேர்ந்தது.

அந்த எழுத்தாளர் தன் டைம்லைனில் போட்டி ருந்த பதிவை ’போட்டோ ஷாட்’ எடுத்துப்போட்டு அதன் கீழே தான் இப்படிக் கருத்துரைக்கப்பட்டி ருந்தது.

ஒரு கருத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டு மென்றால் அதற்கு இப்படித் தான் அவதூறு செய்யவேண்டுமா?

சம்பந்தப்பட்ட எழுத்தாளர் அப்படிப்பட்டவரல்ல என்று அந்தப் பெண்மணிக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் நேரடியாக எழுத்தாள ரின் பெயரைச் சொல்லி அந்த ஆங்கில வார்த்தை யைப் பிரயோகிக்காமல் மறை முகமாகச் சாடி யிருக்கிறார்.

நேரடியாக அந்த வார்த்தையை ஒரு மனிதர் மீது வீசிப் போட்டிருந்தால் that would invite defamation case.

பெண் என்பதால் யாரையும் எப்படி வேண்டுமா னாலும் அவதூறு பேசலாமா?

இதேவிதமாய் பெண்ணைப் பழிக்கும் ஆங்கிலச் சொல்லை ஒருவர் சகட்டு மேனிக்கு, வீசியிருந் தால் என்னவாகியிருக்கும்?

யாரையும் இப்படி முகாந்திரமில்லாமல் மதிப் பழிக்க யாருக்கும் உரிமையில்லை.

அது முறையுமில்லை.

என் அம்மா ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  என் அம்மா

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒருபோதும்
சுனாமியாகப் பொங்காத சாகரம்
சூறாவளியாகாத காற்று
சுட்டுப்பொசுக்காத நெருப்பு
சுக்குநூறாகாத திடம்
சடசடவென்று முறிந்துவிடாத மரம்
கையில் தம்பிடிக் காசில்லாத நேரம்
என் அருகில்
கதவை விரியத்திறந்திருக்கும் சிறுசேமிப்பு வங்கி
எரியுங் குளிரில் போர்த்தக் கிடைத்த
அரிய மேலங்கி
இரவில் காலந்தாழ்த்தி படுக்கையில் தலைசாய்த்து
’பச்சை புட்டி அமிர்தாஞ்சனை நான்
நெற்றியில் தேய்த்துக் கொள்வதை
எனக்குத் தெரியாமல் கண் திறந்து
கவலையோடு பார்க்கும்
எதிர்பார்ப்பற்ற பரிவு
என்னவென்று சொல்லவியலா அன்பு
சுருங்கிவரும் உடலுக்குள் சதாசர்வகாலமும்
சுழன்றுபெருகியோடிக்கொண்டிருக்கும்
ஜீவநதி
கருகாத பூ
ஒண்டுக்குடித்தன வீடோ
இன்றுள்ள இரண்டறைகள் கொண்ட
வாடகைக் குடியிருப்போ _
அரண்மனை, அரியணை, அரசவை,
மணிமகுடப் பிரக்ஞையற்று
பிரபஞ்சவெளியில் மிதக்கும் ஒரு
பறவைச் சிறகிழை
தனதேயான வானவில் நிறங்களையெல்லாம்
வாரி வழங்கும் பட்டாம்பூச்சி்
தொட்டுவிடலாகும் தொடுவானம்
என்றும் என் கவிதையில்
எட்டாச் சொல்……


(*சமர்ப்பணம்: என் அம்மா பாக்யலட்சுமிக்கு)

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்

 வாய்ச்சொல் வீரர்களும்

”வாழ்க வாழ்க” வாயர்களும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை.

உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்
சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்
காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க

அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும்
அதிகரித்துக்கொண்டேபோகின்றன.

அதனாலென்ன ? ஒருதரப்பு அன்னாடங்காய்ச்சி களை
இன்னொரு தரப்பு அன்னாடங்காய்ச்சி களுக்கெதிராகத் திருப்பிவிட்டால்
பின் பரபரப்பாய்த் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்களேயல்லாது
பதுக்கியிருக்கும் கருப்புப்பணத்தின் பக்கம் கவனம் திரும்பாது.

அடிப்பதற்கு
ஆக்ரோஷமாக முழங்குவதற்கு
அசிங்கசிங்கமாகத் திட்டுவதற்கு
அப்பிராணிகள் சிலபலரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

அவர்கள்
ஆயிரங்காலத்திற்கு முன்னான புராண நாயகநாயகியராயிருந்தால் இன்னும் நல்லது.

அவர்கள் பேசாத வார்த்தைகளையெல்லாம் பொருள்பெயர்த்துச்சொல்ல வசதியாயிருக்கும்.

அவர்களைக் கடித்துக்குதறி காலால் எட்டியுதைத்து
காறித்துப்பித்துப்பி நம்மை நலிந்தவர் நாயகர்களாகக் காட்டிக்கொள்வது சுலபம்.

வாயற்றவர்களின் வாயாக நம்மை நிலைநாட்டிக்கொண்டுவிட்டால் பின்
வக்கிரமாக விஷமத்தனமாக வண்டைவண்டையாக என்னவேண்டுமானாலும் பேசலாம்.

அலையலையாய் அழைப்பு வரும்
நிலையாய் பேர் புகழ் காசு புழங்கும்
உலைபொங்கமுடியாமல் அழுதுகொண்டிருப்போருக்கான உங்கள் முழக்கத்திற்குக் காத்திருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அரங்குகள்.

சிரங்கும் சொறியும் சேத்துப்புண்ணும் சீதபேதியும்
நிரந்தரமாகிவிட்ட மக்கட்பிரிவினருக்காகப் பேசிப்பேசியே
விருந்துகளில் குறைந்தபட்சம்அறுபது உணவுவகைகளை
இருபது உணவுமேடைகளில் ருசித்துச் சாப்பிடலாம்.

கைகழுவப் போகும் வழுவழு வாஷ்பேஸினின் மேற்புறம்
பிரம்மாண்ட ஓவியத்தில் யாருடைய கண்களேனும் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கட்டும்.

அல்லது, குறைந்தபட்சம் கருத்தைக் கவரும் முத்திரை வாசகம் ஒன்று தீப்பொறிகள் பறக்கத் தரப்பட்டிருக்கட்டும்.

காகிதத்தீ கருக்கிவிடாது எதையும் என்ற அரிச்சுவடியை அறிந்துவைத்திருந்தால் போதும்
ஆம், அதுவே போதும்.

திரும்பத்திரும்பத் துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கும் திரௌபதி ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 திரும்பத்திரும்பத் துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கும் திரௌபதி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.
அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப் படுத்த
பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச்
செய்கிறார்கள்.

துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள் என்று
அங்கங்கே அசரீரி ஒலிக்கிறது.

போயும் போயும் கிருஷ்ணனையா காப்பாற்றச்
சொல்லிக் கேட்கவேண்டும்
என்று முகத்தைச் சுளுக்கிக்கொள்கிறார்கள் சிலர்.

ஆயர்குலப் பெண்களின் ஆடைகளை
ஆற்றங்கரையிலிருந்து
கவர்ந்து சென்றவனல்லவா அவன்
என்று குறிபார்த்து அம்பெய்துவதாய்
திரௌபதியின் காதுகளில் விழும்படி
உரக்கப்பகர்ந்து
பகபகவென்று பரிகாசமாய் சிரிக்கிறார்கள் சிலர்…

பாவம், ஊடலுக்கும் Eve Torturing க்கும்வேறுபாடு
அறியாதவர்கள்.
இரு மனமொப்பிய கூடலுக்கும்
கேடுகெட்ட வன்புணர்வுக்கும்
இடையேயான வித்தியாசத்தை
எண்ணிப்பார்க்கத் தலைப்படாதவர்கள்.
இன்னும் சிலர் ’அரசகுலப்பெண் என்பதால்
ஆளாளுக்கு அங்கலாய்க்கிறார்கள்
இதுவே அடிமைப்பெண் என்றால்?’ என்று
நியாயம் பேசுகிறார்கள்.
இப்பொழுது நான் அரசியா அடிமையா’ என்று
தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறாள்
திரௌபதி.
அலையெனப் புரளும் கார்கூந்தலும்
எரியும் குரல்வளையுமாய்
தலை சுற்றச் சுற்ற
உற்ற மித்ரன் பெயரை உச்சாடனம் செய்துகொண்டேயிருக்கிறாள்.
கிருஷ்ணா அபயம் கிருஷ்ணா அபயம் கிருஷ்ணா
அபயம் கிருஷ்ணா……..
திரௌபதி இடையறாது கிருஷ்ணனை கூப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்
அது அவள் மனதின் நம்பிக்கை
அதற்கு முன்னான அவளுடைய நம்பிக்கைகளில் நிறைய பொய்த்துப்போய்விட்டன.
ஆனாலும் நம்பிக்கை பொய்க்காது
என்ற நம்பிக்கையே
வாழ்தலுக்கான நம்பிக்கை யென
நம்பிக்கொண்டிருப்பவள் அவள்.
பொய்க்கும் நம்பிக்கைகள்போல்
பொய்க்காத நம்பிக்கைகளும் உண்டுதானே
மார்பை மறைக்கும் சீலை இழுக்கும் இழுப்பில் விலகலாகாது என்று
இருகைகளையும் குறுக்கே இறுக்கித்
தடுத்திருப்பவள்
கை சோர மெய் சோர
சோரம் போகலாகாதென்ற தீராப்
பரிதவிப்பில் கிருஷ்ணனை யழைத்துக்கொண்டிருக்கிறாள்.

எங்கிருந்தேனும் ஒரு புல்லாங்குழல் பறந்துவந்து
பாதகர்களைத் தன் துளைகளுக்குள் உறிஞ்சிவிடலாகாதா
எங்கிருந்தேனும் ஒரு மயிற்பீலி மிதந்துவந்து
கயவர்களின் கண்களில் சொருகிவிடலாகாதா…….

'ஐந்து கணவர்கள் பார்த்ததுதானே _
அவையோர் பார்ப்பதில் அப்படியென்ன வெட்கம்'
என்று கெக்கெலித்துக் கேட்கும் குரல்
நிச்சயம் ஒரு பெண்ணுடையதாக இருக்காது
என்பதொரு நம்பிக்கை.

நம்பிக்கையே வாழ்க்கை.

தாயுமானவன் தந்தையுமானவன்
வாயுரூபத்திலேனும் வந்தென்
மானங்காக்க மாட்டானா
என்றெண்ணியெண்ணி யோய்ந்துபோகும்
இதயத்தின் நம்பிக்கை
யிற்றுவிழும்போதில்
இழுக்க இழுக்க வளர்ந்துகொண்டே போகும்
சேலை
யிங்கே என் உன் எல்லோரது நம்பிக்கையாக.