LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label காற்றின் கன அளவுகள் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label காற்றின் கன அளவுகள் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Thursday, May 2, 2019

காற்றின் கன அளவுகள் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


காற்றின் கன அளவுகள்
 
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


காற்றுக்குத்தான் எத்தனையெத்தனை
குரல்கள்
வாசனைகள்
வாசல்கள்….!
வேகங்களின் நுண் அளவுமாற்றங்களில் ஒலிக்கும்
பண்ணிசைக்கருவிகள் எண்ணிலடங்காது.
பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்று தன்னைக் கடைவிரிக்கும் கூறுகெட்டத்தனம்
காற்றுக்குக் கைவராது.
ஆறுணரும் அருமைக் காற்றின் வருடல்
வேரறியும் பிரிய காற்றின் வள்ளன்மை.
நாடுநாடாய்ச் செல்லக் கிடைக்கலாம் புகழும் பேரும்
எனில், வேடந்தாங்க முடியுமோ காற்றாக யாரும்?
காற்றைக் கக்கத்திலடக்கப் பார்ப்பவரை
கொண்டாடவா முடியும்?
ஆனாலும் இருக்கிறார்கள்தான் ஆனானப்பட்டவர்கள் _
காலங்காலமாய் காற்றை உள்ளங்கையில்
அடக்கப் பார்ப்பவர்கள்,
பள்ளம் பறித்து அதில்
புதைத்துவிடத் துடிப்பவர்கள்,
நார் நாராய் அதைக் கிழித்தெறிய,
சர்க்கஸ் கோமாளியாக்கி
குத்துக்காலில் சைக்கிளோட்டச் செய்ய,
ஊர்வலமாய் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
ஊர்வலமாய் இழுத்துவர,
அழுக்குப்புகையே என்று
அன்றாடம் பழித்துரைக்க,
(’
என் வழியில் வந்தும் தலைவணங்காது
தாண்டிச் சென்றால்’)
புழுத்துப்போவாய் என்று
வெஞ்சினத்தோடு சாபமிட
ஒரு நாளின் பேரழிவுப் புயலையே
ஒட்டுமொத்தக் காற்றாகத்
திரும்பத்திரும்ப மண்ணைவாரித்
தூற்றிக்கொண்டிருப்பவர்களின்
நுரையீரல்களிலும்
நிறைந்திருக்கிறது காற்று.