LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Tuesday, May 26, 2020

எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

எளிய பொய்சொல்லலும்
எளிதாகப் பொய்சொல்லலும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே
சொன்னாள் சிறுமி:
“உண்மையாகவே என் குருவி பொம்மை
பறக்கும் தெரியுமா!”
இருபது வருடங்களாக ‘எழுதி’க் கொண்டிருக்கிறார்
என்று நண்பரை அவையோருக்கு அறிமுகப்படுத்தியவர்
இத்தனை காலமும் ‘இ’யைத்தான்
சரியாக எழுதப் பழகிக்கொண்டிருக்கிறார் என்பதை
பத்திரமாக மறைத்துவிட்டார்.
அவருடைய அந்த நண்பரின் பேரன்
அடிக்கடி கண்ணை விரித்துக் கையை விரித்துக்
கதை சொல்வான்.
கூடைகூடையாய் நட்சத்திரங்களைத்
தனக்கு நிலவு கொட்டியதாக.
அப்போது அந்தக் குழந்தை முகம்
தூய்மையே உருவாய் என்னமாய் மின்னும்!
இருபது வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார்
என்று அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை பொங்க
மேடையேறி ‘மூத்த எழுத்தாளர்’ பதக்கம் பெற்றுக்கொண்ட
அவன் தாத்தா
இத்தனை வருடங்களில் உருவாகாத
தன் படைப்புகளை
மொத்தமாய் அள்ளிக்கொண்டார்
வெட்கங்கெட்ட கற்பனையில்.
தெரிந்தே ஒரு பொய்யை சுலபமாக
மெய்யாக்கிவிட்ட
தமது சாமர்த்தியத்தை மெச்சியபடி
இன்னமும் கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள்
சில இலக்கியக் காவலர்கள்.