LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, March 28, 2026

கவிதைகளா, பாடல்களா?

 கவிதைகளா, பாடல்களா?

பள்ளி கல்லூரி நாட்களில் பிரபலமான இந்தித் திரைப் படப் பாடல்களின் மெட்டில் தமிழில் பாட்டெழுதிப் பாடுவது வழக்கம். . (அப்போதெல்லாம் நான் எனது என்று எண்ணுவதே பாவகாரியம் என்ற நினைப்பு வேறு மனதில் நெருடிக்கொண்டே யிருக்கும்!)

அப்படி எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று. ‘தேரா மேரா மேரா தேரா என்று தொடங்கும் பாடலின் மெட்டில் எழுதப்பட்டது. எங்கும் எழுதிவைக்கவில்லை. ஆனால், இப்போதும் மனப்பாடமாய் சொல்லமுடிவது ஆச்சரியமாக இருக்கிறது – லதா ராமகிருஷ்ணன்.


ன்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்தால்
என்றும் நன்மையாகும் –
மனப்புண்கள் ஆறிப்போகும்.
நீயும் நானும் பூவும் நாரும்
காயும் வேரும் என்றிணைந்தால்
நம் பலம் அதிகமாகும் -
நாம் எண்ணினால் நடந்தேகும்...
(என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்…….)
ஆதியந்தம் நாமறியோமே
வேதனைகள் நிறைய வருமாமே
பாதையிலும் காலில் முள் இடறும்
காதலிலும் தோல்வி பின் தொடரும்
அதனா லென்ன நெஞ்சமே –
பகலிரவே பிரபஞ்சமே
(என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்…….)
ஏன் எதற்கு என்று கேட்போமே
நாண(ந)யமும் துணிவும் காப்போமே
ஆனவரை நன்மை செய்வோமே
ஆணவம் முன் அடிபணிந்திடோமே
கானம் பாடு நெஞ்சமே
மானுடமே ஆனந்தமே...!
என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்……
//2019 , MARCH 20 - மீள்பதிவு//

இன்னொரு பாடல் இதோ!
( ‘கித்னா ப்யாரா வாதாஹே என்று தொடங்கும் பாடலின் மெட்டில் எழுதப்பட்டது.

ஏங்கித் தூங்கி யெந்நாளும் வாழ்ந்திருக்கின்றோம் - வாழ்விதா?
எத்தனை நாள்தான் இவ்வாறே வாழப்போகின்
றோம் - தோழர்காள்?
விழித்தெழுவோம் வழியமைப்போம்
விதைவிதைத்தே கதிரறுப்போம்!
போகும் பாதை யெங்கிலும்
சோதனைகள் பொங்கிடும்…..
வேதனைகள் சேர்ந்திடும்….
சோர்ந்துபோக நேர்ந்திடும்….
அட, இரவின் பின் பகல் உண்டென்றே
அறிந்திடுவோமே நாமே –
மனமே விளக்காம்-
முன்னேறுவோம்.. (ஏங்கித் தூங்கி)
தேசமெங்கும் தரித்திரம்
வேஷந் தாங்கும் நரித்தனம்
ஜோசியத்தில் திருமணம்
காசுதானே உறவினம்
அட, யோசித்தால் விசுவாசித்தால்
இம்மாசுகள் விலகாதா
வாசம் இங்கேயும் வீசாதா (ஏங்கித் தூங்கி)

கணக்கு

 கணக்கு

தமிழ்நாடே சொன்னது என்றார்__-
தானே தமிழ்நாடெனக் கொண்டார்.

வஞ்சனை சொல்வாரடீ, கிளியே… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வஞ்சனை சொல்வாரடீ, கிளியே…

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு
வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை.
அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான
கால்கள் வாய்த்திருக்கவேண்டும்.
மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள்
மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற சொல்லைப் படிக்கக் கற்றாலும்
அதை மனதில் இறக்கிக்கொள்வதில்லை.
மும்மாரி பொழிகிறதா என்பதைக்கூட குளிரூட்டப்பட்ட அறையில் திண்டுமெத்தையில் சாய்ந்து மனக்கண்ணால் பார்த்து முடிவுசெய்யப் பழக்கப்பட்டவர்கள்
வெறுங்கால்கள் கொப்புளிக்க மைல்கணக்காய் தலையில் பாறாங்கற்களைச் சுமந்துவந்தவர்களை சிந்தித்துப் பார்ப்பதில்லை.
அல்லது, அவர்கள் விசுவாசமிக்க பிரஜைகள் என்று பாராட்டுகிறார்கள்.
அவர்களை அடிமைச்சேவகம் செய்யவைத்தது தன் அரசகுலம் என்பதை மறந்தும் மறைத்தும்.
அடிக்கு அடி சேவகர்கள் காத்திருக்கும் அரண்மனைவாழ்வு வாய்த்த அரசகுடும்பத்தினர்
அரியணைகள் ஈரேழ்பிறவிக்கும் அவர்களுக்கே உரித்தானது என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.
அதனால்தான் மக்களாட்சி என்ற சொல்லின் அர்த்தத்தை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடிவதேயில்லை.
அரையடி புதையும் வெல்வெட் கம்பளம் விரித்த நடைவழியிலேயே போய்வந்து பழகியவர்கள்
அடுத்தவர் நலனுக்காய் பாலைவன சுடுமணலில் வெறுங்காலில் பயணமாகியவன்
வெப்பம் தாளாமல் ஐயோ என்று கதறியதை எள்ளிநகையாடும்
வெட்கங்கெட்டவர்களாக இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.
அவர்களுடைய நன்கு திட்டமிடப்பட்ட சொகுசுநடைப்பயணங்கள்
கால்களற்ற ஏழைப் பிச்சைக்காரரின் தினசரி அவலவாழ்வைக் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை.
வெறுங்கால்களோடு வரப்புகளில் அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்
உலகெங்கும் வலம்வருகிறது புகைப்படங்களாய் காணொளிக்காட்சிகளாய்.
ஆபத்தான அரைவேக்காட்டு விவரங்களும் தரவுகளுமாய் கண்ணில்படும் காணிகளுக்கெல்லாம் குறுநில பெருநில மன்னர்களாகும் கனவுகளோடு
வலம்வரும் இந்த மன்னர் மாமன்னர் சக்கரவர்த்திகளும் அவர்தம் உற்றமித்ர பந்துக்களும்
எளிய மனிதர்கள் தங்களுக்கு சமமாய் அரியணையில் அமரநேர்ந்தால்
அப்படி அழுதுபுரள்கிறார்கள் ஆங்காரமாய்.
மண்ணையள்ளித் தூற்றுகிறார்கள்.
அய்யய்யோ அக்கிரமம் அராஜகம் என்று ஆயத்த மக்கள் புரட்சியாளர்களாய் அதையும் இதையும் பேசுகிறார்கள்.
அத்தனை நேரமும் அவர்களுடைய முழுமுனைப்பான எண்ணமெல்லாம்
அரியணையைக் கைப்பற்றுவதே என்ற உண்மை அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அதை அத்தனை நேர்த்தியாக மறைத்தொளிக்கும் மாபாவிகள் என அவர்கள் மனங்களுக்குத் தெரியாதா என்ன?
ஆனாலும் அவர்கள் வாழையடிவாழையாய் ஏழைபாழைகளின் புரவலர்களே யல்லாமல்
மன்னிப்புக் கேட்கும் கோழைகளல்ல என்று திரும்பத்திரும்ப சொல்லியடியே ஓடியவாறிருப்பார்கள்
நாட்டில் உலகில் மீதமுள நிலபுலன்களை உடைமைகொள்ளும் மார்க்கங்களை
அதற்கான அதிகாரபீடங்களை
நாடித்தேடி….

கவிதை

 கவிதை

வற்றாத ஜீவநதியின்

முற்றுப்பெறாத நீர்த்துளி.......

Monday, March 23, 2026

சொப்பனவாழ்வு -’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொப்பனவாழ்வு

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தலைக்குள்ளாகத்
தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாய்க்
காணும்
அந்த வானவில்லின்
சிறுதுளியைப் பறித்துச்
சின்ன மயிற்பீலியாய்
வாழ்வுப்புத்தகத்திற்குள் பத்திரப்படுத்தி
வைப்பதே
தர்க்கங்களுக்கப்பாலான
தூலக்கனவாய்.......

முகமூடி - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)





முகமூடி

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அதிவேகத்தில் விரையும் ரயிலின் அருகில் நின்று ஸெல்ஃபி எடுத்துக்கொண்டால் ஆபத்து.
அன்பே உருவாயொரு களங்கமில்லாக் குழந்தையாய்
என்றேனும் சிரிக்கக் கிடைத்திருந்தால்
அதை மறவாமல் ஸெல்ஃபி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும்போதெல்லாம் அதை வெளியிட்டுக்கொள்ளலாம் -
ரத்தவெறிபிடித்த கோரமுகத்தை
உள்ளுக்குத் தள்ளி.

Monday, March 16, 2026

'மியூஸிக்கல் சேர்’ - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மியூஸிக்கல் சேர்’

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



முதலில் வரும் முப்பது பேருக்கே
மியூஸிக்கல் சேரில் பங்குபெற
முடியுமென்றனர்
பந்தயம் நடத்தும் புரவலர்கள்

எருதோ விருதோ பிறிதோ
பணம் போடுகிறவர்களே எல்லாம்.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெரிந்த
உண்மையிதை
உள்வாங்கிக்கொண்டோர் உளரும் இலரும்
தத்தமது தேவை நிமித்தம்
கிளம்பத் தொடங்கினார்கள்.

கால்நடையாய் சிலர் கிளம்ப
காலுக்கு கழுதை பரவாயில்லை
என்று சிலர் விளம்ப
கட்டை வண்டி எத்தனையோ மேல்
என்று சிலரும்
கடன்வாங்கிக்கொண்ட கார்வண்டியில்
சிலரும் என
பந்திக்கு முந்துவதே என்றும் நன்றென
சிந்திக்கத் தெரிந்த
ஆறறிவாளர்கள், பேரறிவாளர்கள்
பந்தயம் நடக்குமிடத்திற்கு வந்துசேர்ந்தால்
அங்கே _

முன்னமே
பறக்கும் காரிலோ
பறவைகள் முதுகிலோ
காற்றுக்குக் கட்டளையிட்டோ
மாற்றுவழிகள் மற்றும பல செய்தோ
ஏற்கெனவே முப்பது பேரை
வரவழைத்திருந்த விழாக்குழுவினர்
அவர்களில் இருபது பேரை
ஆன்ற பார்வையாளர்களாக்க
அவர்களும் வேறு வழியின்றி
தரப்பட்ட இருக்கைகளே தமக்கான
அங்கீகாரமாகக் கொண்டு
ஆளுக்கு மூன்று கைகளால்
ஆரவாரத்தட்டொலிக்க
பழக்கதோஷத்தில் சிலர்
சீழ்க்கையொலியெழுப்ப
அதைக் கேட்டு ஒரு கட்சியினர்
இன்னொரு கட்சியின் ஆதரவாளர்களாய்
அவர்களை பார்த்து முறைக்க

விழாக்குழுவினர்
எஞ்சிய பத்துபேரை வட்டமாய்
ஓடவிட்டார்கள்
இறுதியில் மிஞ்சுபவர் யாராயிருக்க
வேண்டுமென்ற
திட்டவட்டமான முன்முடிவோடு.

(அஞ்)ஞானம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 (அஞ்)ஞானம்










’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பீடம் இடவாகுபெர்.
பீடாதிபதி பன்மையிலும் வருமென்றால்
இலக்கணப்பிழையென்போரும் இங்குளர்.
என் செய்ய...
தனித்தனிப் பீடங்களில் தனித்தனி அதிபதிகள்
குழுக்களாகவும் ஊராகவும் நகராகவும்
நாடாகவும் உலகாகவும்.....
பீடங்களும் அதிபதிகளும் மதமாச்சரியங்களைக்
கடந்த அளவில்
பல்லக்கில் ஆரோகணித்திருப்பவர்களாகவும்
பல்லக்குத் தூக்கிகளாகவும்
பசிமறந்து கண் துஞ்சாமல்
ஊர்வலத்தைப் பார்த்துக்
கொண்டிருப்பவர்களாகவும்.....
தொலைக்காட்சி அலைவரிசைகள் குண்டுமழைப்பொழிவை
வர்ணஜால வித்தையாய்
காட்சிப்படுத்திக்கொண்டிருக்க
இந்த வருடம் தீபாவளிக்கு இந்த வெடிகள்தான் வேண்டும்
என்று இப்பொழுதே அடம்பிடிக்கின்றன பிள்ளைகள்.
இருக்கும் இருகைகளின் இருபது விரல்களுக்கு
தலா ஒன்று வீதம்
இருபது விருதுகள் வாங்கியிருப்பவர்
கட்டைவிரலுக்குத் தரப்பட்ட விருதை விட
சுண்டுவிரலுக்குத் தரப்பட்டிருக்கும் விருது
சன்னமாக இருக்கிறது என்று விசனப்படுகிறார்.
அவர் விழிகளிலிருந்து வழியாத கண்ணீரைப் பற்றி
ஒட்டியும் வெட்டியும் கருத்துரைக்கும் காணொளிகள்
மட்டற்ற ஆதரவைப் பெற்றவாறு.
விட்டுவிடுதலையாகி நிற்பாயந்தச்
சிட்டுக்குருவியைப்போலே என்று
பாடிவிட்டுப்
பாதிவாழ்வோடு பரலோகம் சென்றுவிட்டவனை
எண்ணிப்பார்க்கவோ எதிர்த்துக்கேட்கவோ
குருவிகளே இல்லையின்று.
அங்கிங்கெனாதபடி யெங்கும் பிரகாசமாயொரு
கேடயத்தோடு
பத்து லட்சமோ அதற்குக் கொஞ்சம்
கூடவோ குறையவோ
பணமும் கிடைக்கப்பெற்றவரை
’ப்ரைம்’ சேனல்கள் எல்லாம் போட்டிபோட்டுக்கொண்டு
பேட்டிகண்டவாறிருக்க _
அங்கங்கே அத்துமீறல்களுக்கும் வன்முறைகளுக்கும்
ஆளாகும்
பெண்களைப் பற்றிய BREAKING NEWSகளும்
போட்டிபோட்டுக்கொண்டு தரப்படுகின்றன
தங்குதடையில்லாமல்
லைக்குகளும் கமெண்ட்டுகளும் அதிகம் வருமென்றதொரு
குத்துமதிப்பான கணக்கில்
விதந்தோதலுக்கும் வசைபாடலுக்கும்
இடைவழியில்
விருதாளரைப் பற்றியொரு பதிவைத் தட்டச்சு
செய்துகொண்டிருப்பவரை
கடிக்கப் பற்களில்லையே என்று எரிச்சலுடன்
நகர்கிறது
அவருடைய ‘மௌஸ்’.
’லவ்ஸ்’ செய், லவ்ஸ் செய்’ என்று கீச்சுக்குரலில் ஒரு சேனல்
தங்கிலீஷில் செல்லமாய் அதட்டிக்கொண்டிருக்க
‘நைஸ்! நைஸ்! யுவர் ஸைஸ்! ஸாரி, ஐஸ்!”’
என்று எதிர்ப்பாட்டு எங்கிருந்தோ
கண்ணியமாய் ஓங்கி ஒலிக்கிறது.
ஒரு பீடமென்றால் மியூஸிக்கல் சேர் தவிர்க்கமுடியாததுதானே
என்று
வழக்கம்போல் தத்துவம் பேசியபடியே
மறுபடியும் விட்ட இடத்திலிருந்து வட்டமாய்
ஓடத்தொடங்குகிறா ரொருவர்.
ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன
என்று என்னதான் பாடினாலும்
காடுதாண்டியும் வரும் விருது
தருமன்றோ மறுபிறவி
யென்பதுபோலுமொரு (அஞ்)ஞானப்
பீடமேறி
ஆடப்பிறந்தவர் ஆடிவர
பாடப்பிறந்தவர் பாடிவர _
அங்கே அமெரிக்க அதிபர் கையில்
விளையாட்டுப் பந்துகளாய்
எறிகுண்டுகள்
இங்கே அதிபராகவியலாத சிலர்
கைகளில்
வார்த்தைப்பந்துகள்
வெறுப்புப்பிழம்புகளாய்....
சாவோலம் சூழத் தரப்படும்
அமைதிக்கான நோபல் விருது
அறிவிக்கப்படும் நாளில்
அலங்கார விளக்குகளுக்கு அப்பால்
எங்கோ
இருளில் மூழ்கியிருக்கும்
அழுகைக்குரல்கள்.
பீடங்களுக்கான போட்டி தொடரும்
மும்முரமாய்.
தொடரும் ஒட்டியும் வெட்டியுமான
பதிவுகளும்.....