LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 11, 2015

தோரணைகள் _ ரிஷியின் கவிதைகள்:

ரிஷியின் கவிதைகள்:
தோரணைகள்


1.
முகம் திரிந்து நோக்கியதில் குழைந்த மனம்
அழையாத விருந்தாளியாக அறவே மறுக்க
நெருங்கிய உறவெனினும் ஒருபோதும்
நுழைந்ததில்லை யவர் வீட்டில்…
யாசகமாய்ப் பெறுவதல்லவே பிரியமும் அக்கறையும்…

பசியை மூட்டை கட்டித் தலைச்சுமையோ டேற்றி
தன்மானமே பெரிதெனப் போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.

தளர்ந்த கைகள், தள்ளாடுங் கால்கள்…..
வளராக் கூந்தல் வளரும் நரை
முள்தைத்த பாதம், கண்ணில் புரை….
எனில்
வைராக்கியம் வேரோடிய மனம்.

“சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..?” என்று எங்கிருந்தோ ஒலிக்கும் பாட்டின் விசாரிப்பில் முளைத்த துன்பியல் புன்முறுவலோடு
வழியேகிக்கொண்டிருந்தவளை இடைமறித்து
வடையும் ஒன்றிரண்டு கடலைமிட்டாயும் தந்தபடி_

“பாவம் பாட்டீ, களைத்துப்போயிருக்கிறாயே –
எங்கள் பண்ணைவீட்டுத் திண்ணையில் படுத்துறங்கிக்கொள்ளலாம் நீ
இன்றிரவு பத்து மணியிலிருந்து பனிரெண்டு மணிவரை.
அதன்பின் அலாரம் வைத்து உன்னை அனுப்பிவைத்துவிடுகிறோம்
நள்ளிரவாயிருக்கிறதே என்றெல்லாம் சொல்லக் கூடாது, சரியா?
கையில் அஞ்சு ரூபாய்த் தாள் ஒன்றும்
கொஞ்சம் பிஞ்சு வெள்ளரிக்காயும் கட்டாயம் தருவோம், கவலைப்படாதே.
முன்கூடத்தில் கொஞ்சம் பழைய சோறு வைத்திருக் கிறேன்.
தின்று முடித்துத் திருப்தியாய்க் கட்டையை சாய்த்துக் கொள்”
என்று புரவலர் தோரணையில் கூறும் துண்டுப் பெண் ணுக்குத் தெரியாது
கிழவியின் காலடி நீட்சிகள்; கலைடாஸ்கோப் காட்சிகள்…
முக்காலங்களைத் தாண்டியேகும் அவளுடைய மூன்றடிகளின் Quantum பாய்ச்சல்;
அவளது கால்நடைகளின் அந்தர மேய்ச்சல்…

துண்டுப் பெண்களும் துக்கிரிப் பையன்களும் அறியார்
மூதாட்டியின் முப்பரிமாண பிரம்மாண்டத்தை.

மௌனமாய் மெதுவே மேலே நடக்கிறாள் மூதாட்டி.
திரிபுரம் எரிக்கவல்ல அவளுடைய மூன்றாவது கண் சிறிதே திறந்துகொள்ளப் பார்க்கிறது…..

2
துண்டுப்பெண்களும் துக்கிரிப்பையன்களும்
எக்கச்சக்கமாய் இருப்பதுபோலவே
நாட்டாமைகளும் நிறையவே உண்டிங்கே.

துண்டுப்பெண்கள் கண்விரியக் கேட்டுக்கொண்டிருக்க
சாதாரணர்களுக்கும் வாய்க்கும் சாகசவீரர்களாகும் தருணங்கள்!
நாட்டாமையும் மனிதர்தானே…
சுவரோரமாய் ஒயிலாய் நின்றபடி
பிரமிப்பு விரவிய ஓரக்கண்ணால் அவரையே பார்த்தவண்ணம்
கையில் விசிறியோடும் வெற்றிலைச்சுருளோடும் நிற்கும் துண்டுப்பெண்
அவர் மார்பை இன்னும் அகலமாக விரியவைக்கிறாள்!

அனாதிகாலப் பயணத்தில் அந்த வழியே கடந்துசெல்லும்
மூதாட்டியின் மேல் அவர் பார்வை கணநேரம் பதிகிறது.
‘பாவம் கிழவி, பணம் கிணம் வேண்டுமோ என்னமோ…’
அருகிருப்பார்களெல்லாம் பார்க்கும்படியாக, அரைமனதோடு
திறக்கிறார் தன் பணப்பையை.

’கும்பிட்டுக்கோ, நல்லது நடக்கும்’ என்கிறார்கள்
துண்டுப்பெண்ணும் துக்கிரிப்பையனும்.

நிதானமாய் ஏறிட்டுப் பார்த்த மூதாட்டி
”என் நிலத்தில், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் இடையேயான
சூட்சுமத்தை உணர்த்தியவனும்கூட
எனக்கொரு சினேகிதன் தான்; ஆண்டையல்ல.
காணிநிலக் கணக்கெடுப்புகள் காற்றுக்கொரு பொருட்டா என்ன?
நான் இதோ நடந்துகொண்டிருக்கிறேனே –
இதைவிட இன்னொரு நல்லது நடக்குமா?
கோலி விளையாடும் வயதுனக்கு.
காலத்தை எனக்குக் கற்றுத் தரப் பார்க்கிறாயே?
என் கடிகாரத்தில் நாளொன்று ஏழெட்டுத் தொடுவானங்களின் நீளம் தெரியுமா…!
என் தேவையை உன் நாட்டாமையின் செல்வமோ செல்வாக்கோ
 இட்டுநிரப்ப முடியாது. சொல்லிவிடுங்கள்,” என்றபடி
குனிந்து தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு
மெல்ல நடந்துசெல்கிறாள் தன் பாட்டில்.

அந்தக் கழிக்குள் இருக்கும் குதிரைகளையும் பறவைகளையும்
வன வான கடல் சாகர செடி கொடி வித்துகளை யெல்லாம்
அறிய மாட்டாத
துண்டுப்பெண்களும் துக்கிரிப்பையன்களும்
‘பொழப்பத்த கிழவி; பிழைக்கத் தெரியவில்லை
என்று இழித்தும் பழித்தும்
வயிறு வலிக்க வலிக்கக் கெக்கலித்துச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.



3
கடற்கரை மணலையெல்லாம் தம்முடையதாகத்
தப்புக்கணக்கு போட்ட துண்டுப்பெண்களும் துக்கிரிப்பையன்களும்
ஆங்கே அமர்ந்தபடி இளைப்பாறிக்கொண்டிருந்தவர்களை யெல்லாம்
எழுந்துநிற்கச் செய்து
அவரவர் காலடிகளைச் சுற்றிக் கட்டமிட்டுக் குறித்து
இதுதான் உங்கள் இடம் என்று
ஒப்பிப்பதாய் எடுத்துரைத்தார்கள்….
அப்புறப்படுத்திவிட்டார்கள் சிலரை….
பின், முகமெங்கும் அப்பிய கர்வத்தோடு
பெருமை பொங்கச் சுற்றிலும் பார்த்தபடி நின்றவர்கள்
மணற்துகள்களுக்கும் வரம்பிட்டு வரையத்தொடங்கினர் கோடுகளை.
அந்தக் கைகளில்தான் எத்தனை தினவு….
இருந்தென்ன?
ஒரே வீச்சில் காற்று அழித்துவிட
காணாமல் போகும் ஆனான ஆணவமும்.

4
 பச்சரிசிப்பற்களும், பலாச்சுளை உதடுகளும் பின்னங் கழுத்தும், பிதுங்கும் மார்பகங்களும் இடுப்புவளைவும் அரைவட்டப் புட்டங்களும்
மீன் கண்களும் அன்னநடையும் மென்கைகளும் 
முழங்காலின் கீழுள்ள ஆடுசதையுமாய்
பார்த்துப்பார்த்துக் கைகொள்ளாமல்
கிளிஞ்சல்களாய்த் தேடியெடுத்துத் திரட்டிக்கொண்டதையெல்லாம்
காற்சட்டைப்பைகளுக்குள் திணித்துக்கொண்டு
குவலயம் வென்றுவிட்ட மிகு களிப்பில் திளைத்தபடி
கடற்கரை மணலில் மல்லாக்கப் படுத்தவாறு காறியுமிழ்பவர்களின்
எச்சில் கீழிறங்கிக்கொண்டிருக்கிறது
‘ஸ்லோமோஷன்’ காட்சியாய்…..


இட்ட அடி நோக.... எடுத்த அடி கொப்பளிக்க…..கவிதைகள் - ரிஷி


’ரிஷி’யின் கவிதைகள்

             இட்ட அடி நோக....
            எடுத்த அடி கொப்பளிக்க…..
[* 5 ஜுலை 2015, திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது]



1
சில சமயம் பேருந்தில் _
சில சமயம் மின்ரயிலில் _
ஆட்டோஷேர் – ஆட்டோ _
நேயம் நாய்ப்பிழைப்பல்லோ’ என்று உச்சஸ்தாயியில்
நெக்குருகிப் பாடும் ஆண்குரல்
உச்சிமண்டையில் ஓங்கியறைய
விரையும்  ‘மாக்ஸி cab’  _
பல நேரம் பொடிநடையாய்……..
பப்பாதி ஓட்டமாய்

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

2
மொட்டைமாடிக்குச் சென்று
இன்னமும் நிழல் நிற்கும் மூன்று இடங்களில் இறைக்கிறேன்
அரிசியையும் கோதுமையையும்;
இரண்டொரு வாயகன்ற பாத்திரங்களில் நீரூற்றிவைக்கிறேன்.
காகங்களும் புறாக்களும் ஆரவாரக்கூச்சலிட்டவாறு
விர்ரென்று கீழிறங்கிவருகின்றன…..
அபூர்வமாய்ச் செடிகளில் பூத்திருப்பவைகளைக் கொய்வதா வேண்டாவா
என்று ஓரிரு நிமிடங்கள் குழம்பிநிற்கிறேன்….

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்…..

3
அருகே அமர்ந்திருப்பவர் ஏதோ கேட்க
சிரித்துக்கொண்டே பதிலளிக்கிறேன்.
அலுவலகத்தில் அதிகாரி தரும் கடிதத்தை
கணிணியில் தட்டச்சு செய்துதருகிறேன்.
கவனமாய் ‘ஷிப்ட் கீயை அழுத்தி
வுக்கு பதில் ‘’ விழுந்துவிடாமல்
பார்த்துக்கொள்கிறேன்…..

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

4
விருந்தினர் வருகை.
உறவினருக்கேயுரிய அறிவுரைகள் தரப்படுகின்றன:
”வருங்காலத்திற்கென்று இனியேனும் சேமிக்க ஆரம்பி”;
சரி என்பதாய் சிறிதே தலையசைக்கிறேன்.
காற்றில் ஈரப்பதம் அறவேயில்லை என்கிறார்.
ஆமோதிக்கிறேன்.
மாற்றம் வரும் தேர்தலில் என்கிறார்.
மறுப்புத் தெரிவிக்கவில்லை.
முத்தாய்ப்பாய் ”நல்லாயிரு” என்று விடைபெற்றுச் செல்பவரை
வாயில்வரை சென்று வழியனுப்பிவைக்கிறேன்….

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

5
மாலை ஸ்டிக்கர் பொட்டுகள் வாங்கச் செல்கிறேன்;
செருப்பு வாங்கிவருகிறேன்.
தக்கர் பாபா வித்யாலயாவில் நடக்கும் இலக்கியக் கூட்டத்தில்
தவறாமல் கலந்துகொள்கிறேன்
கோன் – ஐஸ்கிரீம் சாப்பிடுகிறேன்;
பன்னீர்சோடா குடிக்கிறேன்….

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்…..

6
கோயிலுக்குச் செல்கிறேன்.
குட்டிப்பெண்ணாய் அந்தக் கூடத்தில மர்ந்து
தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட சுலோகங்களை
முணுமுணுத்தபடி வலம் வருகிறேன்
கருங்கற்சுவர்களில் பதித்துள்ள திருவாசகப் பாடல்களை
வாய்விட்டுப் படிக்கிறேன்.
கடவுள் உண்டோஇல்லையோ
கசிந்துருகும் மனம் கண்களில் நீர் நிரம்பச் செய்கிறது.
பிராகாரத்தின் ஆடியில் தெரியும் என் முகம் யாரோவாக,
என் குரலை நான் கேட்கக் கிடைப்பது
ஆன பெறும் பேறாக ,
அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம்
ஆசிர்வதிக்கிறது வானம்….

இன்றின் எல்லாநேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

7
இரவு சாப்பிடுவதற்கு முன் சில மாத்திரைகள்….
சாப்பிட்ட பின் சில வேறு….
கால்ஷியம், விட்டமின், டானிக் மேலும்…..
வாயு ரத்த அழுத்தம் மலச்சிக்கல் சீதபேதி
கபம், இருமல், திடீர்க்காய்ச்சல் முழங்கால் குடைச்சல்……
தலைவலிக்கு அமிர்தாஞ்ஜன்;
இடுப்புவலிக்கு ஃப்ராஞ்ச் ஆயில்….
நீளும் பட்டியலுக்கப்பால் _

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்…..

8
உறங்கத் தவிக்கும் மனதில்
காலைக்காட்சியொன்று நிழலாடுகிறது
வலி(யும்)நிவாரண(மு)மாய்….?

அடிக்கொன்றாய் பல வண்ண வடிவங்களில்
அணிவகுத்து விரைந்துகொண்டிருக்கின்றன வாகனங்கள்.
சிக்னல் சபித்துக்கொண்டே பாதசாரிகள் கடந்துசெல்வதற்கான கோட்டில்
வழிமறித்து நிற்கும் சில.
வாழ்வின் பாதியில் விழித்திரை கிழிந்துபோன முதியவ ரொருவர்
கழியால் வழியைத் துழாவிச் செல்கிறார்
வெற்றுப்பார்வையும் மண்ணாந்தைச் சிரிப்புமாய்.
எனக்குப் பரிச்சயமானவர்தான்.
சாவுகிராக்கி’ என்று அடிக்குரலில் இரைகிறான் கார்வண்டிக்காரன்.
”செத்துப்போயேன்” என்று நேற்றுத்தான் வெளியே தள்ளிவிட்டான் மகன்
இவருடைய சொத்தையெல்லாம் எழுதிவாங்கிக்கொண்ட பின்.
பத்தினியோ பதினைந்துவருடங்களுக்கு முன்னால்
பத்துலட்சத்திற்குமேல் பணத்தோடு போய்விட்டிருந்தாள்
பக்கத்துவீட்டுக்காரனோடு.









Tuesday, July 7, 2015

கடந்துவிடும் இதுவும்……’ரிஷி’யின் கவிதைகள்

’ரிஷி’யின் கவிதைகள்

            கடந்துவிடும் இதுவும்……

ரிஷி


1.   அறிவிப்பு

அடுத்தவேளை சோற்றுக்காக
அவசர அவசரமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அழைக்கும் தொலைபேசியின் மறுமுனைப் பெண்குரல்
தன் தத்துப்பிள்ளையை சிலமணிநேரங்கள்
எனக்குக் காதலனாய் குத்தகைக்கு விடுவதாய்
அறிவிக்கிறது.
என்ன மாதிரியான விளம்பர உலகம் இது….
வசதிபடைத்தவர்களின் வாய்வழி
எப்படியெல்லாம் வக்கரித்துப்போகிறது அன்பு…
உப்புக்கரிக்கும் துக்கத்தை என் செய்வது….


2.   இடைவெளி

ஒரு ஊடகத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது அன்பு.
ஊடகம் உயிருள்ளதென்கையில்
உணர்த்தப்படும் அன்பா, ஊடகமா
எது முன்னிலை பெறுகிறது…?
என்றெழும் கேள்வி
தவிர்க்கமுடியாமல்
திணறும் சுவாசமாக.


3.நரமாமிசம்

அன்பிலூறிய மனம் ஒன்றை
அறுபது துண்டங்களாக வெட்டி யெடுத்து
அவற்றில் ஒரு சிலவற்றை
அண்டங்காக்கைகளுக்குத்  தின்னக் கொடுக்கிறார்கள்.
பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் பெருவிருப்பில்
அலைபேசியில் படம்பிடித்துக்கொள்கிறார்கள் அதை.
நாக்கைச் சப்புக்கொட்டியவாறு சொல்லிக்கொள்ளவும் கூடும்:
 “நரமாமிசம் தனிருசிதான்”.


4.எச்சில்

வேலை, வெய்யில் அன்னபிற வரவாக்கும் மிகு அயர்வில்
வாடிச் சோர்ந்து
சற்றே இளைப்பாற நாடிவந்தேன்
நதியோரமாய் அந்தரத்தில் நீண்டகன்ற திண்ணைப்பக்கம்.
மடியில் கனமில்லை.
மனமே தலையணையாய்
கண்ணயர்ந்துபோனேன் காற்றின் தண்வருடலில்.
போகிறபோக்கில் ஏனோ அத்தனை வன்மமும் அலட்சியமுமாய்
என்மீது துப்பிவிட்டுச் செல்கிறார்கள்.


5.ஊழ்வினை.

மேலோங்கி வளர்ந்திருந்த மரத்தின் கிளைகளை
மும்முரமாய் உலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
மலர்மழை பொழியச்செய்யவோ
என்று ஒருகணம் மனம் நெகிழ்ந்துபோகிறது….
இல்லை, இலைகளிடையே சிக்கிக்கிடக்கும் அம்பு
நேரே என் நெஞ்சில் பாயும்படியாக
விரைவாய் விழச் செய்தபடி
அவர்களது ஒருநாள் நிறைவடைகிறது.


6. செத்தகாட்சிச்சாலை

வளிமண்டல அடுக்கொன்றில் கரியமிலவாயு அடர்ந்துகொண்டே போகிறது.
இரண்டு பிரும்மாண்ட விமானங்கள் மாயமாய் மறைந்துவிட்டன.
நட்சத்திரங்கள்கூடத் தொடர்ச்சியாகக் களவாடப்பட்டுவருகின்றன என்று கேள்வி…..
செத்தகாட்சிசாலையின் கூண்டுகளெங்கும் கம்பிகளுக்குப் பின் மனிதர்கள்
எட்டுக் காலும் ஈரிரண்டு வாலுமாய்….
ஆயினும் இந்த எளிய மனம் மட்டும் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறது
புல்லின் நுனியில் காணும் பனித்துளி நிரந்த மென்று.


 7. நான் கட்டிவளர்த்திருந்த உலகு

உண்மைதான், பெயரில் என்ன இருக்கிறது……
புனைப்பெயரில் மட்டும்….
எட்டும் அறிவிற்கப்பால்
என் புனைப்பெயரில் நான் கட்டிவளர்த்திருந்த உலகின்
வெட்டுக்கிளிகளும் வண்ணத்துப்பூச்சிகளும்
விவரிக்கவியலா அவசங்களும் பரவசங்களும்
புதிதாய் என் புனைப்பெயரில்
சிற்றிதழ்வெளியில் களமிறக்கப்பட்டிருக்கும்
(சட்டச்சிக்கலுக்கு ஏதும் வழியில்லை என்பதாலோ)
கவிதைகளைக் கண்டு
நேயம் பொய்த்த நெஞ்சின் பாங்கில்
கூடிழந்து, நட்ட நடு வெளியில் நிலைகுத்தி நின்றவாறு…..

8. பன்மடங்கு

என் னொரு வார்த்தைப் பட்டு வெட்டுப்படலாகும் இதயத்திலிருந்து
கசியும் ரத்தச்சொட்டு
இன்னுமின்னும் என்னைப் பட்டுப்போகச் செய்யும்.
அன்பைத் துண்டாடும் வன்முறைப் பிரயோகமாய்
அடுத்தடுத்துக் கிளம்பும் வீச்சரிவாள்களோ
என் ஆன்மாவைப் பிளந்தவண்ணம்….


 9. நீள்பயணம்

பத்துவருடத்தை நீட்டிப்போட்டதிலான
பல்லாயிரங் காத தூரமெல்லாம்
பிரளயங்கள் _
உருள்பாறைகள் _
முறிமரங்கள் _
பெருவாகனத் தடம்புரளல்கள் _
பசிவயிறுகள் _
பிரிவின் உதிரப்பெருக்கு _
இறந்தவர்களின் அழுகிய உடலங்கள் _
சிறிதுசிறிதாக அழிந்துபடும் வழித்தடங்கள்…..
கண்டுருகிச் சோர்ந்திறுகிச்
சிதையும் இதயம்
இன்னும் போகவேண்டும் நீள்பயணம்.


10.   இயக்கவியல்

எத்தனைமுறை எண்ணினாலும்
கிடைக்கும் விடை பூஜ்யமாகிறது.
”கணக்குத் தெரியவில்லை யுனக்கு
வடிகட்டின மக்கு” எனக்
கைகொட்டிச் சிரித்தபடி செல்கிறார்கள்
‘காட்டேஜு’க்கு.
மடைதிறக்கும் கையறுநிலை.

மீட்டெடுக்கும் ‘CODE NAME GOD’.


(மலைகள்.காம் ஜூலை முதல் இதழில் வெளியாகியுள்ளது)
 Ø