LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 20, 2025

திருமிகு வெறுப்புணர்வாளர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

திருமிகு வெறுப்புணர்வாளர்
- ‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



மெய்வருத்தம் பாராமல்
பசி நோக்காமல்
கண்துஞ்சாமல்
வெறுப்புமிழ்ந்துமிழ்ந்துமிழ்ந்து
வாயெல்லாம் வறண்டுபுண்ணாகிப்போனவர்
அருகிலிருந்த தெருவோரக்கடைக்குச் சென்று
குடிக்கத் தண்ணீர் கேட்டார்.
தாகந்தணித்துக்கொள்ள வீட்டிலிருந்து எடுத்துவந்திருந்த
மூடியுடனான குவளையை அக்கறையோடு எடுத்துத்தந்தார்
கடைக்குச் சொந்தக்காரர்.
அந்திப்பொழுது கடந்தும் அங்கேயே இருக்கவேண்டிய
கடைக்காரருக்கு மிச்சம் மீதி வைக்காமல் எல்லாத் தண்ணியையும்
மடக் மடக்கென்று குடித்துமுடித்தவர்
மீண்டும் வீதிநடுவே வந்துநின்று
வெறுப்புமிழத் தொடங்குகிறார்.
வரும் நாட்களி லொரு நாள் அவருக்கு
வெறுப்புச்செம்மல் விருது வழங்கப்படும் என்று முன்கூட்டியே வாழ்த்துச்சொல்கிறார்
வழிபோகுமொருவர்.
செம்மலை விட வள்ளலே சாலப்பொருத்தம்
என்கிறார் இன்னொருவர்.
செம்மலுக்கும் வள்ளலுக்குமிடையே நுண்வேறுபாடு
இருக்கிறதா இல்லையா என்று தன்னைத்தான் கேட்டவாறு
வெறுப்பின் உச்சத்திலும் கவனமாய்
மல்லாக்கப் படுக்காமல் குப்புறக் கிடந்தபடி
வெறுப்புமிழத் தொடங்குமவர் உள்வெளியெங்கும்
கொழகொழத்து நாறிக்கொண்டிருக்கிறது.
இருந்தும்
மெய்வருத்தம் பாராமல்
பசி நோக்காமல்
கண்துஞ்சாமல்
வெறுப்புமிழ்ந்துமிழ்ந்துமிழ்ந்து
வாயெல்லாம் வறண்டுபுண்ணாகிப்போனவர்
வீதியோர மருந்தகம் ஏதாவது இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்க்கிறார்
SUPRADIN, BECOSULES RIBOFLABIN, இன்னும் சில வாங்கிக்கொள்வதற்காக.

No comments:

Post a Comment