அவரவர் – அடுத்தவர்
(* சமர்ப்பணம்: கவிதைப் பிதாமகர்களுக்கும்
‘க்ரிட்டிஸிஸ’ப் பீடாதிபதிகளுக்கும்)
‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
'தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமா'வென
அடுத்த கவியை இடித்துக்காட்டி
‘நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
"வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தை ‘க்ளீஷே’க்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ"ன
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
"முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோ" என
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!
(*தனிமொழியின் உரையாடல் – கவிதைத் தொகுப்பிலிருந்து)
No comments:
Post a Comment