நீள அகல வரையறைகள்
நான் முந்தி நீ முந்தி என்று
பெரியவர் சின்னவர் பக்கத்துவீட்டுக்காரர்
உற்றமித்ர பந்துக்கள் ஊர்ப்பெருந்தனக்காரர்கள்
படித்தவர் படிக்காதவர்
பிடித்தவர் பிடிக்காதவரெல்லாம்
பாயாசம் சாப்பிட,
பப்படம் சாப்பிட
பிரியாணி லட்டு பாசந்தி பிஸிபேளாபாத்
வறுவல் பொரியல் வச்சதெல்லாமே
பிரமாதம் பிரமாதம் அருமையோ அருமையென
உருகிக்கிறங்கி
திரும்பத்திரும்ப கடைவாயில் எச்சிலொழுகியவாறு
உறங்கும்போதும் உச்சாடனம் செய்ய
விழுந்தடித்துக்கொண்டு வருவார்களெனக்
கச்சிதமாய்ப் போட்ட கணக்கெல்லாம்
பொய்யாக_
வந்தவர்கள் அன்போடு மாப்பிள்ளை – பெண்ணை
வாழ்த்திவிட்டு
வழக்கம்போல் சுந்தரத் தமிழினில் உரையாடியவாறே
சமோஸாவையும் சிங்கிள்-டீயையும் ருசிக்க
தெருவோர தேனீர்க்கடைக்காய் காலெட்டிப்
போடக்கண்டு
பட்டுவேட்டி ஜரிகை அங்கவஸ்திரக்காரர்
பத்துநூறு பவுன் தங்கச்சங்கிலிக்காரர்
காலிக் கூடத்தில்
ஓலமிட்டபடியே…….
No comments:
Post a Comment