இலக்கியம் என்பது இலக்கியம் மட்டுமல்ல
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இருவருமே நல்ல கவிகள் தான்
[நல்ல கவி நல்ல மனிதருமா
என்பதொரு MILLION DOLLAR QUESTION)
எனில்
ஒருவர் உள்ளூரில் சாதாரணத் தொழிலாளி
வாடகை வீட்டில் வசிக்கும்
சொற்ப சம்பளக்காரர்
அவருடைய புத்தக வெளியீட்டுவிழாவில்
அருகிலிருந்த ரோட்டோர டீக்கடையிலிருந்து
ஆளுக்கொரு கோப்பைத் தேனீரும்
இரண்டிரண்டு மேரி பிஸ்கட்டுகளும்
வாங்கித்தருவார்.
விழாவை காணொளியாக்குவதற்கான
வாய்ப்புகள் குறைவு
கைகுலுக்கி அறிமுகப்படுத்திக்கொள்ளத் தோதாய்
பெரிய மனிதர்கள் பங்கேற்பது அரிது.
மற்றவர் விஷயத்தில் எல்லாமே நேரெதிராய்
நாலு சொந்த வீடுகள் நல்ல பெரிய கார்
வாலிபத்தில் உலகம் சுற்ற ஆரம்பித்து
இன்னும் சுற்றிக்கொண்டேயிருக்கிறார்.
வசிப்பது அயல்மண்ணில்.
புசிப்பது ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்.
பிரமுகர்கள் படையெடுத்துவருவார்கள்
அவரைப் பார்க்க _
பரிமாறப்படும் உயர்தர உணவுப்
பதார்த்தங்களுக்காக
இருவருடைய நூல் வெளியீட்டுவிழாக்களும்
அடுத்தடுத்து நடந்தன.
முன்னவருடையதில் கலந்துகொண்டோர்
முப்பதுபேர்.
பின்னவருடையதில் பங்கேற்றோர்
முன்னூறுக்கும் மேல்.
No comments:
Post a Comment