LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 29, 2014

அபத்த நாடகம்

ரிஷி


3 + 3 = 6,
4 + 2 = 6,
1+ 5 = 6,
3 x 2 = 6,
6 x 1 = 6,
2 x 3 = 6,
8 _ 2 = 6,
7 _ 1 = 6,
5 + 1 = 6,
4 + 2 =  ஆறொன்றே யெல்லா மென் றாறு மனமே
ஆறென விடையொன்றை உடும்புப்பிடியாய் பிடித்தவாறு
நடைபழகிக்கொண்டிருக்கிறாள் இடும்பியவள்;
சொல் தருமாம் போதைகள் என சொல்லித் திரிகிறாள்.

தன்னைத்தானே கணிதமேதையாய்
முன்னிறுத்திக்கொள்ளு மப் பேதை
யின் மொழி பெரும் வாதையாய்.

”நச்சுவிதைகள் நமக்கு முன்னிருந்தோரெல்லாம்
எட்டி யுதையுங்கள் அவரை, அவர்தம் கல்லறைகளை
காலில் ரத்தம் கொட்டினாலும் பரவாயில்லை
எப்படியும் உங்கள் கால்கள் தானே
யானபடியால் வளர்ப்பீர் வெறுப்பை” என
அன்றாடம் ஆகாயத்தில் பறந்தபடி
போதித்துக்கொண்டிருக்கிறாள்..

’‘என்றும் எழுத்துச் சிற்பி நானே’
என கழுத்துவரை கர்வம் தளும்ப
கிளுகிளுத்துப் பிதற்றி

வெத்துவார்த்தைகளைத் தத்துவம் என்ற பெயரில்
கைபோன போக்கில் விசிறியெறிந்தபடி
கிள்ளிப்போட்ட கீரையால் வீராங்கனையானவள் தானே
வாராது போல வந்த மாமணி யானே னென் றறை
கூவுகிறாள், பறைசாற்றுகிறாள்.

அதற்கும் ஆமாம் போடத் தயாராய்
ப்ரோக்ராம்ட்பேர்வழிகள்.

நாலு வார்த்தைகள் ஒலிபெருக்கிகளுக்குள் வீறிட்டலறியதால்
தன்னை யரும் போராளியென அடையாளங்காட்ட
அவள் படும் பாடு அப்பப்போ…..அய்யய்யோ

குய்யோ முறையோ வெனக் கூவிக்கூவியே
மெய்யைப் பொய்யாக்கி பொய்யை மெய்யாக்கி
கன ஜோராய்க் கடைவிரித்தாயிற்று….
கறாராய் கலப்படம் செய்தால்
பின்,  கொள்ளை லாபம் தான்!


[*திண்ணை இணைய இதழ் ஜூலை2014இல் வெளியானது]

0
அவலக்காட்சிகள்

ரிஷிகாளியினுடையதாய்க் கனலும் கண்களைச் சுழற்றி உறுத்துப் பார்க்கிறாள் _
ஒரு கணமேனும் உலகம் உறைந்துபோகும் என்ற எதிர்பார்ப்போடு..
எதுவும் நடக்கவில்லை.

தாள மாட்டாமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்; நியாயங் கேட்கிறாள்.
நேசம் பேசுவதாய் நிறையப் பொய்யுரைக்கிறாள்.
அவற்றை நிஜமென்று ஒப்ப மாட்டாதவர்களை
நீசர்களென்று காறியுமிழ்கிறாள்; கடித்துத் துப்புகிறாள்.
கொடுங்குற்றவாளிகளாக்கி
சொற்களால் அகழப்பட்ட பாதாளச்சிறைக்குள்
கழுத்தைப் பிடித்துத் தள்ளி குப்புற விழச் செய்கிறாள்.
இன்னொருவர் அழிவில் தான் தன் உயர்வு
என்ற அயரா நம்பிக்கையோடு
அன்பின் பெயரால் உன்னை யென்னை
யவனை யவளை யவரை யெல்லா நேரமும்
அடைத்துவைக்கிறாள்; அடித்து நொறுக்குகிறாள்
அடியாட்களின் துணையோடு.

கழுமரத்தடியே கதியென்று கிடக்கும் அவளைப் பார்த்தால்
கண்றாவியாக இருக்கிறது.
என்னவொரு வீண்விரய உழைப்பு இது!

’ஐயோ பாவம், பிழைப்புக்காக
என்னவெல்லாம் பாத்திரம் ஏற்றாகவேண்டியிருக்கிறது!’

அதோ அவளுடைய குரலின், கைவிரல்களின் இடிமின்னலில்
அரங்கமே அதிர்ந்துபோக
அடர்ந்திருண்டு பொழியும் நஞ்சில்
அவளே வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறாள்.

’உடைந்திருக்குமோ என்ற பயமில்லை முதுகெலும்பு
இருந்தால் தானே’ என தமக்குள் சிரித்துக்கொள்கின்றனர்
பார்வையாளர்கள்.

நல்லவேளையாக அவ்வப்பொழுது திரை கீழிறங்கிக்கொண்டிருக்கிறது.[* திண்ணை இணைய இதழில் ஜூலை 2014இல் வெளியானது]
0